தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, March 18, 2014

பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


 




சத்தியமங்கலம், மார்ச் 18:
சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரிஅம்மன் கோவில் தீமிதி விழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.

பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா கடந்த மார்ச் 3ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி  மார்ச் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. அன்றிரவு திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து மார்ச் 16ஆம் தேதி வரை நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன.
 
விழாவின் முக்கிய நிகழ்வாக குண்டம் விழா (மார்ச்.17) திங்கள்கிழமை இரவு துவங்கியது. பக்தர்கள் காணிக்கையாக அளித்த வேம்பு, ஊஞ்சல் மரத்துண்டுகளை கொண்டு திங்கள்கிழமை இரவு தீக்குண்டம் வளர்க்கப்பட்டது.  முன்னதாக, தீக்குண்டத்தில் 5 டன் வேம்பு, ஊஞ்சல் மரம் போடப்பட்டு கற்பூரம் மூலம் தீ மூட்டப்பட்டது. 6 மணி நேரத்துக்கு பிறகு கோயில் ஊழியர்கள் இதனை 6 அடி நீள குண்டமாக அமைத்தனர். 

குண்டத்தில் மஞ்சள், பூண்டு, புகையிலை, மிளகு மற்றும் உப்பு உள்ளிட்ட பல பொருள்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். மேலும் சில பக்தர்கள் நாட்டுக்கோழிகளையும் நேர்த்திக்கடனாக செலுத்தினர். 

 

பண்ணாரி அம்மனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டு வீணைஅலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு  செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு  படைக்கலத்துடன் திருக்குளம் சென்று அம்மன் அழைத்து வரம் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு சருகுமாரியம்மனுக்கு சிறப்புபூஜைகள் செய்யப்பட்டு    தாரை தப்பட்டை முழங்க, மேளதாளங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்துவரப்பட்டார். குண்டத்தின் நான்கு திசைகளிலும் கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜை செய்தும் மலர்களை குண்டத்தில் தூவியும் அதிகாலை 3.55 மணிக்கு முதலில் பூசாரி ராஜசேகர் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார். தொடர்ந்து படைக்கலத்துடன் வந்த பக்தர்கள்  உற்சவரை சப்பரத்தில் சுமந்தபடி குண்டம் இறங்கினர்.

 









அதனைத் தொடர்ந்து, குண்டம் இறங்கிய  லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குள் நேரடியாக சென்று அம்மனை தரிசித்து சென்றனர். பக்தர்களுடன் சத்தியமங்கலம் நகர்மன்ற தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர்,  செல்விமுருகேசன்,இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் நா.நடராஜன், ஈரோடு மாவட்ட அதிமுக பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் குண்டத்தில் இறங்கினர்.  விழாவில் கைக்குழந்தைகளுடன் பெண்கள், திருநங்கைகள், மற்றும் சிறுவர்கள் முதல் முதியோர் வரை குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் அதிகாலை 3.55 மணிக்கு துவங்கிய குண்டம் நிகழ்ச்சி மாலை 2.30 வரை நீடித்தது. அதன்பிறகு கால்நடைகள் குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தாண்டு புதியதாக திருப்பதி மாடல் உண்டியல்கள் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.. 

கர்நாடக மாநிலம்  மைசூர்,சாம்ராஜ்நகர், புதுவை மற்றும் தமிழகத்தில் மதுரை, கோவை, சேலம், தருமபு,திருப்பூர், ஈரோடு, கோபி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர்.  பக்தர்கள் நடைபயணமாகவும் அக்னிசட்டி ஏந்தியும், தங்கள் குழந்தைகளுக்கு முடி காணிக்கை அளித்தும் அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவையொட்டி, கோயில் வளாகத்தில்  ரகசிய கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் மற்றும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 
விழாவையொட்டி, இன்னிச்சை கச்சேரி, பக்திஇசை, பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் 2500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

0 comments:

Post a Comment