தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, May 29, 2014

கொமரசாமிக்கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் நான்காமிடம் பெற்று சாதனை. 

வட்டார அளவில் தொடர்ந்து முதலிடம்.



 
 
 நம்பியூர் அருகே உள்ள ,வெட்டையம்பாளையம்  கொமரசாமிக்கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்   பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் நான்காமிடமும்,மாவட்ட அளவில் மூன்றாமிடமும்,வட்டார அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம்,நம்பியூர் அருகே வெட்டையம்பாளையத்தில் உள்ள கொமரசாமிக்கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ரம்யா 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் நான்காமிடமும்,மாவட்ட அளவில் மூன்றாமிடமும்,பள்ளியில் முதலிடமும் பெற்றுள்ளார்.மதிப்பெண்கள் விபரம்;தமிழ்-99,ஆங்கிலம்-98,கணி தம்-99,அறிவியல்-100,சமூக அறிவியல்-100.ஜி.எம்.தரணி 493 மதிப்பெண்கள் பெற்று 2 ஆம் இடமும்,வி.வித்யா 491 மதிப்பெண்கள் பெற்று 3 ஆம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

 மேலும், நம்பியூர் வட்டார அளவில் கொமரசாமிக்கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  மாணவ-மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர். 
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களில் 490 க்கு மேல் 5 பேரும்,480 க்கு மேல் 15 பேரும்,470 க்கு மேல் 25 பேரும்,460 க்கு மேல் 31 பெரும்,450 க்கு மேல் 35 பேரும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

மேலும்,மூன்று பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று ஒருவரும்,இரண்டு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று 11 பேரும்,ஒரு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று 20 பேரும் சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை,ஆசிரியர்களையும் பள்ளியின் நிறுவனத்தலைவர் வி.கே.சின்னச்சாமி பாராட்டி பரிசுகள் வழங்கினார். பள்ளி தாளாளர் உமா சிவக்குமார்,செயலாளர் சிவக்குமார்,மேலாண்மை அறங்காவலர் கமலம்சின்னச்சாமி,முதல்வர் வனிதாமணி,தலைமை ஆசிரியை பரமேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள்  கலந்து கொண்டு பாராட்டுகளை தெரிவித்தனர்.
பண்ணாரி அருகே ராஜன் நகர் முத்துமாரியம்மன்கோவில் கம்பம்,பத்திரகாளியம்மன் குண்டம் திருவிழா.





பவானிசாகர்  அருகே பண்ணாரி  அடுத்துள்ள  ராஜன் நகர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மூன்றாம் ஆண்டு கம்பம் திருவிழா,பத்திரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா பூச்சாட்டுடன் துவங்கியது.4 ந்தேதி குண்டம்  ராஜன் நகர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 22 ந்தேதி முனியப்பன் பூஜை,மாவிளக்கு நடந்தது.நேற்று 27 ந்தேதி இரவு 10.00 மணிக்குராஜன் நகர் ஊர்கவுடர் வி.நஞ்சுண்ட கவுடர் தலைமையில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிசேக அலங்கார பூஜை நடந்தது.இரவு 11 மணிக்கு அம்மனுக்கு   பூச்சாட்டுடன் விழா துவங்கியது.பின்னர் பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பூச்சாட்டு நடந்தது. தாரை தப்பட்டைகள் வான வேடிக்கைகள் முழங்க கம்பம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்குகோவில் முன்பு  கம்பம் நடப்பட்டது.பின்னர் ஆண்களும்,குழந்தைகளும் கம்பத்தை சுற்றி ஆடிவந்தனர்.பெண்கள் மஞ்சள் நீர் குடங்கள் எடுத்துவந்து கம்பத்திற்கு நீர் ஊற்றி வழிபட்டனர் தொடர்ந்து .இன்றும் அதிகாலையில் பெண்கள் குழந்தைகள் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர்.வருகிற ஜூன் 2 ந்தேதி காலை 7 மணிக்கு குண்டத்திற்கு எரிகரும்பு வெட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.இரவு 9 மணிக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.3 ந்தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு அம்மன் அழைத்தல்,இரவு 10 மணிக்கு அரண்மனை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.4 ந்தேதி அதிகாலை 6 மணிக்கு பத்திரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.10 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.மதியம் 3 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.இரவு 8 மணிக்கு முத்துமாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.5 ந்தேதி மஞ்சள் நீராடல்,11 ந்தேதி மறு பூஜையும் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை ராஜன் நகர் ஊர்கவுடர் வி.நஞ்சுண்ட கவுடர்,எஸ்.வெங்கடாசலம்,மற்றும் ஊர்ப் பொதுமக்கள் சிறப்பாக செய்துள்ளனர்.
தேசிய மல்யுத்த போட்டியில் ஐஸ்வர்யா கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு


தேசிய அளவிலான இளையோர் மல்யுத்தப் போட்டியில் பவானியை அடுத்த ஐஸ்வர்யா பொறியிய்ல் கல்லூரி மாணவ, மாணவியர் தமிழக அணி சார்பில் பங்கேற்று விளையாடுகின்றனர்.

தமிழக அணி மல்யுத்த வீரர்களுக்கான தேர்வு தர்மபுரியில் நடைபெற்றது. இதில்,  ஐஸ்வர்யா பொறியியல் கல்லூரியின் சார்பில் பங்கேற்ற 3-ம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர் தீனதயாளன், கணினி துறை மாணவர் வேல்முருகன், 2-ம் ஆண்டு கட்டடவியல் துறை மாணவர் சிவராஜ், கணினி துறை மாணவி சரண்யா ஆகியோர் ஃப்ரீ ஸ்டைல், க்ரீக்கோ ரோமன் பிரிவுகளில் முதலிடம் பிடித்தனர்.

இதன்மூலம், இவர்கள் தமிழக அணி சார்பில் தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்கின்றனர் . இப்போட்டிகள் ஜார்கண்ட் மாநிலம் ஜுனிட்ரிலியா மாவட்டம், கோட்ரமா நகரில் இம்மாத இறுதியில் நான்கு நாள்கள் நடைபெறுகிறது.

தேசிய போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு கல்லூரித் தலைவர் எஸ்.சேகர், செயலர் என்.எஸ்.நிர்மலாதேவி, முதல்வர் சி.கே.ரவிசங்கர், நிர்வாக அலுவலர் பி.சதீஷ்குமார், உடற்கல்வி இயக்குநர் விவேகானந்தன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
வாரியத் தேர்வில் அன்னை ஜேகேகே சம்பூரணியம்மாள்
பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் சிறப்பிடம் 


 

தூக்கநாயக்கன்பாளையம் அன்னை ஜேகேகே சம்பூரணியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் அரசு வாரியத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இக்கல்லூரி மாணவர்கள் அனைத்து பிரிவுகளிலும் 90 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மூன்றாம் ஆண்டு கெமிக்கல் துறை மாணவர் எஸ்.எஸ்.சரத் 700-க்கு 691 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். ஆட்டோமொபைல் பிரிவு மாணவர் ஆர்.நாகார்ஜூன் 700-க்கு 686 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார்.

எலக்டரானிக்ஸ் மாணவர் கே.முருகேஷ், 98 சத மதிப்பெண்களும், கம்யூட்டர் பிரிவு மாணவர் எஸ்.அபுதாஹிர், எம்.தீபாசுமதி, பெட்ரோ கெமிக்கல் துறை மாணவர் எஸ்.கிருபாகரன், மெக்கானிக்கல் துறை மாணவர் எம்.விக்னேஸ்குமார், ஆட்டோமொபைல் துறை மாணவர் எஸ்.மோகன்ராஜ் ஆகியோர் தலா 97 சத மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரித் தாளாளர் ஜேகேகே.முனிராஜா, செயலர் எம்.கஸ்தூரிபிரியா, முதல்வர் பி.ரமேஷ் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Wednesday, May 28, 2014

பழங்கால முறையில் மரவண்டி செய்து அசத்தும் பழங்குடியின சிறுவர்கள்



 காட்டில் கிடைக்கும் மரத்துண்டுகளை கொண்டு பழங்கால முறையில் மரவண்டிகளை செய்து கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்  காளிதிம்பம் பழங்குடியின அசத்தல் சிறுவர்கள் .

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குபட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள காளிதிம்பம். இங்கு 70க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். திம்பம்-தலமலை சாலையில் இருந்து 3 கிமீ தூரத்தில் உள்ள இக்கிராமத்துக்கு போக்குவரத்து வசதி கிடையாது. செங்குத்தான கரடு முரடான மண்சாலையாக இருப்பதால் வாகனங்கள் இயக்கமுடியாத சூழல் உள்ளது. அனைவரும் நடைப்பயணமாகத் தான் கிராமத்துக்கு வந்து செல்லவேண்டும். விவசாயத்தை தொழிலாக கொண்டு வாழும் இக்கிராமத்தில் பள்ளிக்கூட வசதி கிடையாது.

இதனால், இங்குள்ள குழந்தைகள் படிக்க வேண்டுமெனில் 15 கிமீ தூரத்தில் உள்ள தலமலை உண்டி உறைவிடப்பள்ளிக்கு செல்லவேண்டும். பேருந்து வசதியில்லாததால் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து படிக்கும் மாணவி கூட உறைவிடப்பள்ளியில் தான் தங்கி பயில வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்குள்ள  32  மாணவ,மாணவிகளும் தலமலை உண்டி உறைவிடப்பள்ளியில் படித்து வருகின்றனர். பெற்றோர்கள் வாரமொருமுறை  குழந்தைகளை வீட்டு அழைத்து வருகின்றனர். தற்போது, கோடை விடுமுறை என்பதால் அனைவரும் காளிதிம்பத்தில்  தங்களது பொழுதுபோக்கை கழித்து வருகின்றனர்.

மாணவர்கள் தங்களது விளையாட்டுக்கு தேவையான பொருள்களை அவர்களாகவே தயாரித்து கொள்கின்றனர். மரவண்டியில் சறுக்கு விளையாடுவது இவர்களின் பொழுதுபோக்கு.

மலைக்கிராமத்தில் கிடைக்கும் மரத்துண்டுகளை எடுத்து வந்து உருண்டை வடிவில் மூன்று சக்கரங்களை செதுக்கின்றனர். பின்னர், முக்கோண வடிவில் மூன்று மரச்சக்கரங்களை வைத்து வலுவான நீளமான மரத்துண்டுகளை பயன்படுத்தி அவற்றை ஒன்றுக்கொன்றுடன் இணைக்கின்றனர். ஸ்டேரிங் போன்று திருப்புவதற்கு ஏதுவாக டி வடிவத்தில் மரத்துண்டுகளை அதில் பொருத்தியும் அதனை விளையாடுவதற்கேற்ப ஒரு மரவண்டியை உருவாக்கின்றனர்.  

இந்த  வண்டிகளை  மேடான பகுதிக்கு எடுத்துவந்து இதில் சிறுவர்கள் அமர்ந்து சறுக்கு விளையாட்டு விளையாடி மகிழ்கின்றனர். ஒரு வண்டியில் இரண்டு அல்லது மூன்று பேர் அமர்ந்து கொண்டு சரிவான பாதையில் வரும்போது கால்களை பயன்படுத்தி நிலத்தை அழுத்திபிடித்தபடி வண்டியை நிறுத்திக்கொள்கின்றனர்.  வேகமாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் வளைந்து செல்லும்  வகையில் மரவண்டியை தயாரித்து பயன்படுத்தும் சிறுவர்கள், தனித்திறன் கொண்டவர்களாக உள்ளனர்.

ஆயிரக்கணக்கி்ல் செலவழித்து பல்பொருள்அங்காடியில் குழந்தைகள் ஓட்டும் வண்டிகள் சில நாள்களில் பழுதாகி விடும். எந்தவொரு தயாரிப்பு செலவுமின்றி தங்களது தேவைகளை பூர்த்திச் செய்துகொள்ளும் சிறுவர்கள் கிராமத்து என்ஜினியர்கள் என்று அழைக்கலாம்.
 பவானி சங்கமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு
திருமண காரியங்கள், கூடுதுறையில் பரிகார பூஜைகள் நிறுத்தம் 







பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் திருமணங்களுக்கு வரும் 1-ம் தேதி முதலும், கூடுதுறையில் பரிகார பூஜைகள் வரும் 6-ம் தேதி முதலும் நடதத அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

12 ஆண்டுகளுக்கு பின்னர் சங்கமேஸ்வரர் கோவில் கும்பாஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு சுமார் ரூ.4 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றன. தற்போது அனைத்து பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஜூன். 9-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள சங்கமேஸ்வரர், பெருமாள் மற்றும் வேதநாயகி அம்மன் சன்னதிகள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் திருமண காரியங்களுக்கு ஜூன். 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையில் அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, பவானி கூடுதுறை பகுதியில் வரும் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கூடுதுறையில் பரிகாரம், காரியங்கள் மற்றும் இதர விஷேசங்கள் நடத்த அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெறுவதால் கோவில் வளாகம் களை கட்டியுள்ளது.
பவானி நகராட்சி குப்பைக் கிடங்கில் பிடித்த தீயால் கரும்புகை!

பொதுமக்கள் பாதிப்பு





பவானி நகராட்சி குப்பைக் கிடங்கில் பிடித்து கொளுந்துவிட்டெறிந்த தீயால் செவ்வாய்க்கிழமை இரவு கரும்புகை கிளம்பியது. இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

பவானி நகரில் உள்ள 27 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. மேலும், தினசரி சந்தை, திருமண மண்டபம், மருத்துவமனை கழிவுகளும் இங்கு கொட்டி குவிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கிடங்கில் நாள்தோறும் புகை கிளம்பியபடியே காணப்படும்.

இந்நிலையில்,  குப்பைக் கிடங்களில் பரவலாக தீ பிடித்து கரும்புகை கிளம்பியது. இதனால், சுற்றுப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். காற்றடிக்கும் திசையெங்கும் புகை சென்றதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதுகுறித்து, பொதுமக்கள் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன்பின்னரே புகை கிளம்புவது குறைந்தது. பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.

நகராட்சி குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பிடித்துக் கொள்வதும், அதனை அணைப்பதும் தொடர் கதையாகவே உள்ளது. இதுகுறித்து, பலமுறை தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் பாரமுகமாகவே உள்ளது. சுற்றுச்சூழலையும், சுகாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கு பிரச்னையில் அலட்சியமாக உள்ளது வேதனையளிப்பதாக உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்


சத்தியமங்கலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி பேருந்துகளை ஆய்வுசெய்தும்,(வலது) பள்ளி பேருந்துகளை கவனமாக  ஓட்டுவது குறித்தும் ஓட்டுநர்களிடம் அறிவுறுத்துகிறார்  கோபி வட்டார போக்குவரத்து கழக ஆய்வாளர் ஜெயக்குமார். உடன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சரவணபவன், முகுந்தன் உள்ளிட்டோர்
பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்



 
 
பவானிசாகர் அருகே ஊருக்குள் புகுந்து விவசாயப்பயிர்களை சேதப்படுத்திய மக்னாயானை வன்ததுறையினர் விரட்டினர்.

பவானிசாகர் வனத்தில் இருந்து வெளியேறிய மக்னா யானை சத்தியமங்கலம் -  மேட்டுப்பாளையம் சாலையைக் கடந்து கோட்டைப்புதூர் கிராமத்துக்குள் புகுந்தது. அங்குள்ள துரை(55) என்பவரது வீட்டு முன்புள்ள சப்போட்டா மரத்தின் கொம்புகளைமுறித்த பழங்களை தின்றது. அங்கு வந்த  துரை யானையின் அட்டகாசத்தை பார்த்து  வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பொது மக்கள்தீப்பந்தங்களை காட்டியும் பட்டாசு வெடித்தும் யானையை விரட்டினர். அங்கிருந்து சென்ற மக்னா யானை பெரியகள்ளிப்பட்டி வடக்குத்தோட்டம் தங்கவேல்(37) என்பவரது தோட்டத்தில் நுழைந்து அங்கு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கதலி ரக வாழைகளை தின்றும் மிதித்துசேதம் செய்தது. மேலும் அடுத்துள்ள  தீவன சோளப் பயிரையும் மிதித்து சேதப்படுத்தியது. 

பக்கத்து விவசாயிகள் திரண்டு வந்து விடிய விடிய யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை காட்டுக்குள் சென்றது


பவானியை அடுத்த அத்தாணி வன எல்லையை ஒட்டியுள்ள த்துக்கு அருகில் ராஜகோபால் என்பவரின் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிடிபட்ட 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு. வனத்துறையினர் இப்பாம்பை பாதுகாப்பாக பர்கூர் வனப்பகுதியில் விடுவித்தனர்.



புன்செய் புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் எராளமான மரங்கள் மற்றும் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன. புன்செய் புளியம்பட்டி அருகே காரப்பாடி ஊராட்சி அலுவலகம் முன்புள்ள மரம் நேற்று மாலை விழுந்ததில் மின் கம்பம் சாய்ந்தது. இதனால்.அங்கு மின்சாரம் தடைபட்டது.
மேட்டுப்பாளையம் பங்களா மேடு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் 7 ஆம் ஆண்டு திருவிழா.

ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி பங்கேற்பு.


பங்களா மேடு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் 7 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 13 ந்தேதி பூச்சாட்டுடன் துவங்கி சிறப்பாக நடந்துவருகிறது.20 ந்தேதி அக்னி கம்பம் நடப்பட்டு அதனை சுற்றி ஆண்களும்,குழந்தைகளும் ஆடி வருகின்றனர், 23 ந்தேதி திருவிளக்கு பூஜை நடந்தது.27 ந்தேதி இரவு அம்மன் அழைப்பு  நடந்தது. இன்று 28 ந்தேதிகாலை 6 மணிக்கு சக்தி விநாயகர் கோவிலில் இருந்து பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மதியம்1.00 மணிக்கு  கோவிலுக்கு  வருகை தந்த  கோவை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமிக்கு செண்டை மேளம்,மேளதாளம், தாரை தப்பட்டை முழங்க கோவில் விழா குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடந்த நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் நகரமன்ற தலைவர் டி.சதீஷ்குமார், தமிழ்நாடு ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜோதிமணி, ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விழாவிற்கு  தலைமை தாங்கி ஓ.ஆறுமுகசாமி சிறப்புரை ஆற்றினார்., நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக கமிட்டியினர்,மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் பொருளாளர் கிருஷ்ணசாமி நன்றி கூறினார். நாளை காலை 9 மணிக்கு மஞ்சள் நீராடலும், 30 ந்தேதி மறு பூஜையும் நடக்கிறது.


Friday, May 23, 2014

 
பு.புளியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில்,12ஆம் வகுப்பு மாணவியர்க்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.மதிப்பெண் பட்டியல் பெற்றுக்கொண்ட  மாணவியர்கள் பள்ளியிலேயே ஆன்லைன் மூலமாக தங்கள் மதிப்பெண்களை பதிவு செய்தனர்.உடன்,தலைமை ஆசிரியர் கே.ஓதியப்பன், கணினிஆசிரியர் எல்.கலைவாணி ஆகியோர் உள்ளனர்.
பு.புளியம்பட்டி ப்ளேக் மாரியம்மன் கோவிலில் 108 சங்காபிசேக விழா.
விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி பங்கேற்பு.
-----------------------------------------------------------------------------------------------------------------------




பு.புளியம்பட்டி,மாரியம்மன், ப்ளேக் மாரியம்மன்,ஊத்துக்குழி அம்மன் கோவில்களில்,முதலாமாண்டு நிறைவு விழா மற்றும் 108 சங்காபிசேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இவ்விழாவில்,சிறப்பு அழைப்பாளராக  விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி கலந்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம்,பு.புளியம்பட்டியில் அமைந்துள்ளது, மாரியம்மன், ப்ளேக் மாரியம்மன்,ஊத்துக்குழி அம்மன் கோவில்கள்.இக்கோவில்களின் கும்பாபிசேக விழா கடந்த ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது,தொடர்ந்து,48 நாட்கள் மாரியம்மன்,ப்ளேக் மாரியம்மன்,ஊத்துக்குழி அம்மன் கோவில்களில், தினசரி மூன்று கால சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தினமும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.48 ஆம் நாள் நிறைவு விழாவாக மண்டலபூஜை கொண்டாடப்பட்டது.

இந்நிலையில்,மாரியம்மன், ப்ளேக் மாரியம்மன், ஊத்துக்குழி அம்மன்  கோவில்களில், கும்பாபிசேக விழா நடத்தப்பட்டு ஒரு ஆண்டு ஆன நிலையில், முதலாமாண்டு நிறைவு விழா மற்றும் 108 சங்காபிசேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

விழாவையொட்டி,மே 22ஆம் தேதி மாலை பவானி ஆற்றிலிருந்து,புனித நீர் தீர்த்தக்குடங்களில் ஏராளமான பெண்கள் எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, மே 23ஆம் தேதி அதிகாலை சுதர்சன ஹோமம்,108சங்காபிசேக விழா,சிவகிரி ஆதினம் சிவசமய பண்டிதகுரு சுவாமிகள் தலைமையில்,ஊர் கவுடர்,பட்டக்கார கவுடர்,கட்டேமனை கவுடர் முன்னிலையில்,தமிழகம் முழுவதிலுள்ள எடுத்து வரப்பட்ட 18 ஸ்தலங்களின் தீர்த்தங்களை 108 சங்குகளில் வைத்து,வேத மந்திரங்கள் முழங்க,மாரியம்மன், ப்ளாக் மாரியம்மன்,ஊத்துக்குழி அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.



பின்னர்,அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாரதனை  பூஜைகள் நடந்தன.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி துவக்கி வைத்து,பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.தொடர்ந்து மாரியம்மன், ப்ளேக் மாரியம்மன்,ஊத்துக்குழி அம்மன் உற்சவர் சப்பரத்தில் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், உலக சமுதாய சேவா சங்கத்தலைவர் வெள்ளிங்கிரி, ஒக்கலிகர் இளைஞர் அணி மாநிலத்தலைவர் ஜோதிமணி,நகர அ.தி.மு.க செயலாளர் எம்.கே.ராஜேந்திரன்,க வுன்சிலர் முரளிகிருஷ்ணன், துரை, சிவக்குமார், ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையன், வெங்கடேஷ், கார்த்தி உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள், ஒக்கலிகர் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Thursday, May 22, 2014

பவானிசாகர் கருவண்ணராயன் கோவில் அருகே மரத்தில் ஏறிய சிறுத்தை

 
பவானிசாகர் கருவண்ணராயன் கோவில் அருகே மரத்தில் ஏறிய சிறுத்தை பார்த்த தெங்குமரஹாடா கிராமமக்கள் அச்சத்தில் உறைந்துபோயினர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள், புலிகள், கழுத்தைப்புலி மற்றும் காட்டெருமைகள் உள்ளன. பவானிசாகர் வனசசரகத்தில் மாயாறு ஓடுவதால் நீர்நிலைகளை தேடி வரும் விலங்குகளை புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வேட்டையாடுகின்றன. 

பவானிசாகர் வனப்பகுதி கருவண்ணராயன் கோவில், கல்லாம்பாளையம், ஜெகலட்டி போன்ற அடர்ந்த காட்டுப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் சுற்றித் திரிகின்றன. மேலும் காட்டுப்பன்றி, காட்டெருமை, மான்கள் தண்ணீர் குடிக்க வருவதால் அவற்றை வேட்டையாட புலிகள் மற்றும் சிறுத்தைகள் மாயாற்றை படுகையில் பதுங்குகின்றன.. இந்நிலையில், புதன்கிழமை தெங்குமரஹாடாவைச் சேர்ந்த கிராமமக்கள் மினி டெம்போவில் ஜெகலட்டி வழியாக  சென்றுகொண்டிருந்தனர். அப்போது, புள்ளிமான்கள், காட்டெருமைகள் மிரட்சியுடன் சாலையின் குறுக்கே பாய்ந்து ஓடியதை பார்த்த கிராமமக்கள் மினிடெம்போவை நிறுத்தினர். அப்போது சாலையின் குறுக்கை திடீரென பாய்ந்து வந்த சிறுத்தையால் கிராமமக்கள் பீதியடைந்தனர். 

இதற்கிடையில், சிறுத்தை டெம்போவை பார்த்தும் சரசரவென மரத்தில் ஏறி ஒளிந்துகொண்டது. அங்கு சிறிதுநேரம் அச்சத்துடன் காத்திருந்த கிராமமக்களுக்கு அவ்வழியாக வந்த காய்கறிவேனை பார்த்தும் சற்று ஆறுதலாக இருந்தது. காய்கறி வேனை பின்தொடர்ந்து டெம்போவும் பாதுகாப்பாக தெங்குமரஹாடா சென்றது. சில வாரங்களுக்கு முன்பு சாலையோர பாறை மீது புலி அமர்ந்திருப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர்.  அண்மைகாலமாக புலி மற்றும் சிறுத்தையின் நடமாட்டத்தால் அப்பகுதியில் பீதியடைந்துள்ளனர். தெங்குமராஹாடா கிராமமக்கள் இரு சக்கர வாகனங்களில் செல்வதை தவிர்த்துவிட்டு மினிவேன், டெம்போவை பயன்படுத்துகின்றனர். 
பர்கூர் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால் 15 கிராமங்கள் துண்டிப்பு - மணியாச்சியில் உயர்மட்டப் பாலம் கட்டும் பணி பாதிப்பு 





பவானியை அடுத்த அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் பரவலாக பெய்த கனமழையால் மணியாச்சி பள்ளத்தில் திடீர் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், 13 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, உயர்மட்டப் பாலம் கட்டும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

பர்கூர் மலைப் பகுதியில் தாமரைக்கரையையும், மேற்குமலை பகுதியில் 15 கிராமங்களையும் பிரிக்கும் மணியாச்சி பள்ளத்தில் ரூ.2.89 கோடி மதிப்பில் உயர்மட்டப் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 11-ம் தேதி பர்கூர் மற்றும் சுற்றுப்புற மலைகளின் பல்வேறு பகுதியில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்தது. 

சுமார் 6 அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தால் மணியாச்சியில் பாலம் கட்ட வைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பொருள்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதோடு மண் மூடியதால் சேதமடைந்தது. இதையடுத்து, கடந்த சில நாள்களாக மீண்டும் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், புதன்கிழமை பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் மீண்டும் பெருக்கெடுத்தது. முன்னதாகவே, லேசான தூரலைக் கண்டதும் வெள்ளம் வரலாம் என அச்சமடைந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபடாமல் பாதுகாப்பான பகுதிக்குச் சென்று ஒதுங்கி நின்றிருந்தனர். 

சற்று நேரத்தில் மலைப்பகுதியில் எதிர்பார்த்த அளவையும் தாண்டி சீறிவந்த வெள்ளத்தின் வேகத்தைக் கண்டு தொழிலாளர்கள் சிதறி ஓடினர். கட்டுமானப் பொருள்களும் அடித்துச் செல்லப்பட்டது. கடந்த இரு வாரங்களில் மலைப் பகுதியில் பெய்த கனமழையால் இருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

மேலும், இந்த வெள்ளப் பெருக்கால் பர்கூர் மலைப் பகுதியில் தாமரைக்கரையிலிருந்து மேற்குமலை பகுதியிலுள்ள 15 கிராமங்களும் துண்டிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வெள்ளத்தின் வரத்து குறைந்த பின்னரே தண்ணீருக்கு மத்தியில் பொதுமக்கள் நடந்து செல்ல இயலும்.


சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை ஸ்ரீ காமாட்சிஅம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி அலகு குத்தி பறவை காவடியில் வரும் பக்தர்கள்
 100  ஆண்டு பழமை வாய்ந்த மேட்டுப்பாளையம் ஆற்காடு மாரியம்மன்,பிளேக் மாரியம்மன்,மதுரைவீரன் கோவில் திருவிழா.

அலகு குத்தி,பறவைகாவடியில் ஊர்வலம்.



மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரத்தில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆற்காடு மாரியம்மன்,பிளேக் மாரியம்மன்,மற்றும் மதுரைவீரன் கோவில்களின் 107 ஆம் ஆண்டு விழா இன்று சிறப்பாக நடந்தது.கடந்த 6 ந்தேதி பொரிசாட்டுடன் துவங்கிய விழாவில் 13 ந்தேதி அக்னி கம்பம் நடப்பட்டு பூஜைகள் நடந்தது.19 ந்தேதி சக்தி கரகம்,பூவோடு அழைத்தல் நடந்தது.20 ந்தேதி மதியம் 12 மணிக்கு மதுரைவீரன் அழைப்பும்,இரவு 10 மணிக்கு அம்மன் ஊர்வலம் நடந்தது.இன்று காலை 10 அளவில் மைதானம் மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும்,பறவை காவடியில்  அம்மன் வேடமிட்டு தொங்கியபடி நேர்த்திக்கடன் செய்தனர்.




நிகழ்ச்சியில் விழாக்குழு நிர்வாகிகள் ஈ.ஆர்.ராமன்,கே,.ஆர்.பழனிசாமி,
பிரபு,தர்மன்,வீரமணி,பரமன்,கிருஷ்ணன்,குமார்,காளியப்பன்,அர்ஜுனன்,தேவராஜ் உட்பட ஏராளமான் பக்தர்கள் கலந்துகொண்டனர்.ஊர்வலம் ஊட்டி மெயின் ரோடு,பேருந்து நிலையம்,அண்ணாஜிராவ் ரோடு வழியாக எம்.எஸ்.ஆர்.புரம் கோவிலை அடைந்தது.அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.இன்று இரவு 7 மணிக்கு மாவிளக்கு,பொங்கல் வைத்தல்,நாளை மஞ்சள் நீராடல் வெள்ளிக்கிழமை மகாதீபாராதனை,அன்னதானம் ஆகியவை நடக்கிறது.26 ந்தேதி மறுபூஜை நடக்கிறது.
சிறுமுகை பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை.5 லட்சம் வாழைகள் முறிந்து நாசம்.ரூ.7 கோடி சேதம்.



சிறுமுகை பகுதியில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழைபெய்தது.அதில் சிறுமுகை அருகே உள்ள  லிங்காபுரம், காந்தவயல், மொக்கைமேடு,உப்புபள்ளம்,வரப்பள்ளம்,டேம் காடு,மூலையூர் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்ட நேந்திரன்,கதிலி,பூவன் உட்பட சுமார் 5 லட்சம்  வாழைகள் காற்றில் முறிந்து சேதம் அடைந்தன.சேத மதிப்பு சுமார் ரூ.7 கோடி இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.தற்போது குலை தள்ளி பிஞ்சு காய்களுடன் ஓரிரு மாதங்களில் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வாழைகள் சேதம் அடைந்ததால் ,தமிழக அரசு உரிய நஷ்டஈடு வழங்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.





மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு மைக்கண் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பறவைக்காவடியில் தொங்கியபடி  நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
சத்தி நகராட்சியில் பிளாஸ்டிக் பை பயன்பாடு ஒழிப்பு 

 
 
சத்தியமங்கலம் நகராட்சியில் பிளாஸ்டிக் பை பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 
சத்தியமங்கலம் முதல்நிலை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 2011ம் ஆண்டு கணக்கெடுப்புபடி நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 37805 பேர். நகராட்சியின் அருகில் பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோயில் உள்ளதால் பக்தர்கள் அதிக அளவில் நகராட்சிப் பகுதியில் வந்து செல்கின்றனர்.  இதனால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள்  மற்றும் கப்புகள்  உபயோகத்தில் இருந்து வந்தன. இதனை முற்றிலும் ஒழிக்க  தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, முதலில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டாம் டாம் மூலம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, துண்டு பிரசுரம்  விநியோகிக்கப்பட்டது. 

இதை தவிர, வியாபார நிறுவன உரிமையாளர்களை அழைத்து விழிப்புணர்வு கூட்டமும் நடத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து,ஆணையாளர் கே.சரவணக்குமார்  மற்றும் சுகாதார அலுவலர் கே.சக்திவேல் தலைமையில் நகர் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டதில்  மொத்த விற்பனையாளரிடமிருந்து  300 கிலோ  பிளாஸ்டிக் கேரி பேக்ஸ்  பறிமுதல் செய்யப்பட்டு ரூ.31 ஆயிரத்து 550 அபராதம் விதிக்கப்பட்டது.  

சந்தை, இறைச்சிக்கூடங்கள், பூக்கடைகள், தினசரி சந்தை, இரவு நேர தள்ளுவண்டி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. டீ கடை , டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவதும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. நகராட்சியின் தொடர் நடவடிக்கையால்  பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதை முற்றிலுமாக தவிர்த்து துணிப்பைகளே உபயோகிக்கப்படுகிறது.இதனால் தற்பொழுது குப்பை இல்லாத  சிறந்த தூய்மையான நகரமாக விளங்குகிறது என்றார்.

Wednesday, May 21, 2014

சத்தி-மைசூர் நெடுஞ்சாலையி்ல் நடமாடும் காட்டுயானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்





 
சத்தியமங்கலம்-மைசூர் நெடுஞ்சாலையில் சாலையோர மரங்களில் துளிர்விடும் இலைகளை தின்பதற்காக காட்டுயானைகள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள், புலிகள், சிறுத்தை, கரடிகள், கழுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதால் இப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை எளிதாக காணலாம்.

நடப்பாண்டு பருவமழை பொய்த்துவிட்டதால், அடர்ந்த காட்டுப்பகுதியான திம்பம், தலமலை போன்ற வனங்களில் உள்ள மரங்களின் இலைகள் காய்ந்து சருகாகிபோயின. காட்டுயானைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற விலங்குகள் பசுந்தீவனம் தேடி வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் படையெடுத்து அங்கு சாகுபடி செய்யப்பட்ட  விவசாயப்பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்துகின்றன.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் பெய்த தொடர் சாரல் மழையால் காய்ந்துபோன மரங்களில் தற்போது இலைகள் துளிர்விட்டு தழைக்க ஆரம்பித்துள்ளன. சாலையோர மரங்கள் பச்சை பசேலென காணப்படுகின்றன. மூங்கில் மரங்களும் நன்கு செழித்து வளர ஆரம்பித்து்ள்ளதால் சத்தி மைசூர் சாலையில் இதமாக காலநிலை நிலவுகிறது. சில்லென குளிர்ந்த காற்றும் வீசுகிறது. இதனால், காட்டுக்குள் நடமாடிய காட்டுயானைகள் திம்பம், ஹாசனூர் சாலையில் சாதாரணமாக திரிகின்றன. 

சாலையோர மரங்களில் துளிர்விடும் இலைகளை தின்று அதே இடத்தில் முகாமிடுவதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதற்கிடையில்,  தாளவாடியைச் சேர்ந்த இளைஞர் பைக்கில் செவ்வாய்க்கிழமை மைசூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது யானைகள் கூட்டம் கூட்டமாக சாலை கடந்து சென்றன. இதைப் பார்த்த அந்த இளைஞர் திடீரென பைக் பிரேக்கை அழுத்தியதால் ரோட்டில் விழுந்தார். பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அவரை பத்திரமாக மீட்டனர். அப்போது, அந்த கூட்டத்தில் குட்டியுடன் சென்ற தாய்யானை மட்டும் சாலையோர மரக்கிளையில் பசுந்தழைகளை தின்றபடி அங்கேயே நின்றது.

குட்டியானை சாலையில் இருபுறமும் செல்வதும் வருவதுமாக விளையாடிதால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மேலும் சிக்கல் நீடித்து நீண்ட நேரம் காத்திருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த அரசு பேருந்தின் இரைச்சல் யானைகளுக்கு சற்று எரிச்சலாக இருந்ததால் அவை காட்டுக்குள் செல்ல துவங்கின. அதைத் தொடர்ந்து, சிறு வாகனங்கள், வாகன ஓட்டிகள் நிம்மதியுடன் சென்றனர்.  மைசூர் நெடுஞ்சாலையில் யானைகள்  முகாமிட்டுள்ளதால் அவை அவ்வவ்போது சாலையை கடக்கும் என்பதால் பொதுமக்கள் மெதுவாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஹாசனூர் வனத்தில் யானை தாக்கி பெண்சிறுத்தை குட்டி பலி


 

 
ஹாசனூர் வனத்தில் யானை தாக்கியதில் பெண் சிறுத்தை குட்டி பலியானது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஹாசனூர் வனச்சரகத்தில் மாவட்ட வனஅலுவலர் சி.ஹெச்.பத்மா, வனச்சரக அலுவலர் பெர்னார்டு ஆகியோர் கொண்ட தனிப்படையினர் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, கோட்டாடை அடர்ந்த காட்டுப்பகுதி பெரியகாரை என்ற இடத்தில்  சிறுத்தை குட்டி இறந்தது கிடப்பது தெரியவந்தது.சிறுத்தையின் சடலத்தை கைப்பற்றிய வனத்துறையினர் சம்பவம் குறித்து விசாரித்தனர். சிறுத்தை இறந்து கிடந்த இடத்தில் யானையின் கால்தடம், முறித்து விசியெறிப்பட்ட மரக்கிளைகள் மற்றும் யானயின் சாணம் ஆகியவற்றை பார்த்தனர்.இதன் மூலம் சிறுத்தைகுட்டியை யானை கொன்றது உறுதிசெய்யப்பட்டது.

தாய்சிறுத்தை குட்டியை விட்டு பிரிந்து  வேட்டைக்கு சென்றதாகவும் அப்போது, அங்கு வந்த காட்டுயானையிடம் குட்டி மாட்டிக்கொண்டதாகவும் சிறுத்தைகுட்டியை தும்பிக்கையால் தாக்கி கொன்றதாவும் வனத்துறையினர் தெரிவித்தனர். கால்நடைமருத்துவர் கே.மனோகரன் தலைமையில் மருத்துவகுழுவினர் சிறுத்தையின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தனர். சிறுத்தையின் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் யானை தாக்கி உயிரிழந்தது பரிசோதனையிலும் உறுதிப்படுத்தப்பட்டது.யானை தாக்கியதில் பெண்சிறுத்தை குட்டி பலியானது இதுவே முதல் முறை என மாவட்ட வனஅலுவலர் சி.ஹெச்.பத்மா தெரிவித்தார்.
அரசுப்பள்ளிகளில் மாணவர்சேர்க்கை தீவிரம்




சத்தியமங்கலம், மே.20. பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்விக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இப்பள்ளியில் அரசு உத்திரவின்படி ஆங்கிலவழிக்கல்வி தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டும் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 5 வயது நிரம்பிய குழந்தைகளை பெற்றோர்கள் அரசுப்பள்ளியில் நடைபெற்றுவரும் ஆங்கில வழிக்கல்வியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இப்பள்ளியில் கணினி இயக்கம் கற்பித்தல், சிடி மூலம் மொழிப்பயிற்சி, கணித உபகரண பெட்டி பயன்பாடு, தியான பயிற்சி, யோகா பயிற்சி ஆகியவை கற்றுத்தரப்படுகின்றன. ஆர்.ஓ. தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது என பள்ளி தலைமையாசிரியர் லதா தெரிவித்தார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலக்கல்வி தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆர்வமுடன் கு£ந்தைகளை
அரசுப்பள்ளியில் சேர்க்க முன் வந்துள்ளனர்.


பவானிசாகர் அருகே எரங்காட்டூர் & முடுக்கன்துறை சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடம்பூர் மலைப்பகுதியில் மரவள்ளி நடவுப்பணி தீவிரம்






சத்தியமங்கலம், மே.20. கடம்பூர் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து
வருவதால் விவசாயிகள் உழவுப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 2500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளிர்ந்த தட்ப வெப்பநிலை நிலவுகிறது. இதை பயன்படுத்தி இப்பகுதியில் உள்ள கடம்பூர், கல்கடம்பூர், இருட்டிபாளையம், பசுவனாபுரம், கரளையம், குன்றி, மாக்கம்பாளையம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமப்பகுதி விவசாயிகள் மலைக்காய்கறி பயிர்களான உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்ருட், கேரட் வகைகளும், மரவள்ளிக்கிழங்கும் பயிரிடுகின்றனர். கடந்த சில மாதங்களாக சரிவர மழை பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களாக பரவலாக மலைகிராமங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மானவாரி பயிராக மரவள்ளிக்கிழங்கு பயிரிடுவதற்கு
டிராக்டர்களை பயன்படுத்தி நிலங்களில் உழவு செய்யப்பட்டு மரவள்ளி கரணைகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 இது குறித்து பசுவனாபுரத்தை சேர்ந்த விவசாயி ராஜன் கூறியதாவது. தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி மரவள்ளி கரணைகளை நடவு செய்துவருகிறோம். இதற்கு முள்வாரி ரகம் ஏற்றதாகும். இந்த ரகம் மழை சற்று குறைந்தாலும் மானாவாரியில் நன்கு செழித்து வளர்ந்து பலன்கொடுக்கும். உழவு செய்யப்பட்ட நிலத்தில் ஒனறரைக்கு ஒன்றரை அடி
இடைவெளியில் கரணைகள் நடப்படுகிறது. தற்போதுள்ள ஈரப்பதத்தில் செடிகள் உயிர்பிடித்து வளர்ந்து விடும். தொடர்ந்து மழை கிடைக்கும் பட்சத்தில் நன்கு வளர்ந்துவிடும். இரண்டு மாதத்தில் களை வெட்டி உரமிடுவோம். 10 மாதப்பயிரான மரவள்ளிகிழங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டன் ஒன்றுக்கு ரூ.5000 க்கு விற்பனையானது. விளைச்சல் குறைந்ததால் தற்போது 1 டன் ரூ.12000 வரை விற்பனையாகிறது. 1 ஏக்கருக்கு 10 முதல் 12 டன் வரை மகசூல் கிடைத்தால் செலவு போக ரூ.80000 லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் அதிக விளைச்சல் காரணமாக விலை குறைந்தால் லாபம் குறையும் என்றார்.



நீலகிரி பகுதியில் பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அதன் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்துள்ளது.    
சத்தியில் ஸ்ரீ சீதாராம விவாஹ மஹோத்ஸவ உற்சவம்


 
சத்தியமங்கலம் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரரேஸ்வர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ சீதாராம விவாஹ மஹோத்ஸவத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மே.11ம் பட ஆவாஹனம்,பாலிகை தெளித்தலுடன் விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து  நடைபெற்ற சத்தி மாதர்களின் அஷ்டபதி பஜனையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
 
சனிக்கிழமை வீதிபஜனையும் அதனைத் தொடர்ந்து தோடயமங்களம், குருத்தியானம், பஞ்சபதி நிகழ்ச்சியும் அன்றிரவு  கணேசாதி தியானங்களுடன் பூஜை நடைபெற்றது.  ஞாயிற்றுக்கிழமை காலை பக்தர்கள் சீர்வரிசை கொண்டுவந்து ஸ்ரீ சீதாராம விவாஹ மஹோத்ஸவ உற்சவம் நடந்தினர். இக்கல்யாண வைபவத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.அப்போது, ஸ்ரீகாந்த கெளண்டின்ய பாகவத குழுவினரின்  நாமசங்கீர்த்தனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து அன்னதானமும் ஆஞ்சநேய உற்சவமும்  நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை சாகேதராமா பஜனா மண்டலி கமிட்டிக்குழுத் தலைவர் எம்.கார்த்தி,  செயலாளர் கே.உமாசங்கர் ஆகியோர் தலைமையில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Saturday, May 17, 2014

காரமடை அருகே மருதூர் ஆஞ்சநேயர் கோவில் 9 ஆம் ஆண்டுவிழா.
 
 
 
மேட்டுப்பாளையம். காரமடை அருகே உள்ள மருதூர் அனுமந்தராயசாமி கோவில் ஸ்ரீ ஆஞ்சநேயா அறக்கட்டளையின் 9 ஆம் ஆண்டு விழா இன்று சிறப்பாக நடந்தது.காலை 8.00 மணிக்கு காரமடை ஸ்தலத்தார் சுவாமிகள் தலைமையில் சுதர்சன ஹோமம் நடந்தது.11.30 மணிக்கு அறக்கட்டளையின் 9 ஆம் ஆண்டுவிழா மற்றும் வைகாசி மாத முதல் சனிக்கிழமை விழா துவங்கியது.கிரிஜா சாம்ராஜ் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.ஸ்ரீ ஆஞ்சநேயா அறக்கட்டளை தலைவர் கே.ஆர்.கனகராஜ் வரவேற்று பேசினார்.கோவை செந்தில் குரூப் நிறுவன தலைவரும், ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி தலைமை தாங்கினார்..முன்னாள் போலீஸ் டி.,எஸ்.பி.ஆர்.வெள்ளிங்கிரி,எஸ்.ஜோதிமணி,டி.ஆர்.எஸ்.பிராபர்ட்டிடெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் டி.ஆர்.சண்முகசுந்தரம்,கோவை மாவட்ட ஒக்கலிக கவுடர் மகஜன சங்க தலைவர் சாம்ராஜ்,வக்கீல் மணிவாசகம்,பொறியாளர் எம்.ஜெயராம்,ஆர்.வி.சி நடராஜ், எல்.ஐ.சி. ஜெயக்குமார்  உட்பட  பலர் வாழ்த்தி பேசினார்கள்.
 
 
விழாவில் ஓ.ஆறுமுகசாமி பேசியதாவது;ஸ்ரீ ஆஞ்சநேயா அறக்கட்டளையின் 9 ஆம் ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.எங்களது ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டும் உதவித்தொகை தொடரும்.யாரும் கவலைப்பட வேண்டாம்.வருகிற 24 மற்றும் 25 ந்தேதி கோவை  கொடிசியாவில்சுமார் 80 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் விழாவை இரண்டு கட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.மீதமுள்ள மாணவர்களுக்கு அடுத்த மாதம் வழங்கப்படும்.அதற்க்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க.விற்கு நமது தமிழக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கம் ஆதரவு அளித்து மாபெரும் வெற்றியை பெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் என்.தினகரன் நன்றிகூறினார்.
பின்னர் அன்னதானம் நடந்தது.