தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 31, 2015

புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா 



புன்செய் புளியம்பட்டி ஆகஸ்ட் 31:
புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சித்ரா அவர்கள் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் தாமோதரன், நஞ்சப்பன், அருள்ராஜ் மற்றும் விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழ் ஆசிரியர் சிவகுமார் வரவேற்றார். ஆசிரியர் ஜெகநாதன் தமிழ்த்துறை குறித்து எடுத்துரைத்தார். கோவை பேராசிரியர் சூரியநாராயணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் நடன போட்டிகள்,. இலக்கிய மன்ற பேச்சு போட்டிகள் ஆகியவற்றில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பேராசிரியர் சூரியநாராயணன், தலைமை ஆசிரியர் சித்ரா, விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் ஆகியோர் பரிசு வழங்கி பாரட்டினார்கள்.

அதனை தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஏராளமான ஆசிரியர்களும், மாணவிகளும் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கெ.ஒ.ம அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தமிழ் துறையினர் செய்து இருந்தனர்.
விபத்து பகுதியாகும் புன்செய் புளியம்பட்டி பேருந்து நிலையம்!

 



புன்செய் புளியம்பட்டி ஆகஸ்ட் 29:

புன்செய் புளியம்பட்டியில் ரூபாய் 2 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்தின் இருபுறமும் நுழைவாயில் அமைக்க பட்டுள்ளது. தேனு சில்க்ஸ் கடைஅருகே சத்தியில் இருந்து வரும் பேருந்துகளும், கோவை மற்றும் திருப்பூர் உள்பட பிற ஊர்களில் இருந்து வரும் பேருந்துகளும் உள்ளே நுழைகின்றன. மிக வேகமாக வந்து திரும்பும் பேருந்துகளால் இங்கு விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இந்த பகுதி அருகே எவ்வித அறிவிப்பு பலகையும் வைக்கபடாததால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது குறித்தும், பேருந்துகள் திரும்புவது குறித்தும் அறிவிப்பு பலகை வைத்தால் மற்ற வாகனங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் விபத்துகளும் , உயிரிழப்புகளும் ஏற்படுவது தடுக்கப்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஊர் பொதுமக்களும், விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் அவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நெடுஞ்சாலைகளில் செயல்படும் பள்ளிகள் அருகே வேகத்தடை, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். - விடியல் சமூகநல இயக்கம் வேண்டுகோள் 




புன்செய் புளியம்பட்டி ஆகஸ்ட் 26:
சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் புன்செய் புளியம்பட்டி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் செயல்படும் பள்ளிகள் முன்பு வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் புன்செய் புளியம்பட்டி அமைந்து உள்ளது. இங்கு சத்தியமங்கலம் செல்லும் சாலையில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்படுகிறது. இதில் சுமார் 300 குழந்தைகள் பயின்று வருகிறார்கள். இப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் பாதையை கடக்க மிகவும் சிரமபடுகின்றனர். நேற்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாணவன் ஒருவனின் கால் சிதைந்து விட்டது. அடிக்கடி இப்பகுதியில் விபத்து நடப்பது வாடிக்கையாகி விட்டது. நெடுஞ்சாலைகளில் சீறிபாயும் வாகனங்களால் பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் அச்சமடைந்துள்ளனர். எனவே இப்பகுதியில் உரிய வேக தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும், மேலும் பள்ளி பகுதி- மித வேகம் என எச்சரிக்கை பலகைகளை வைக்கவேண்டும். இதேபோல் நீலிபாளையம், செல்லப்பம்பாளையம், விண்ணப்பள்ளி அருகே அண்ணாநகர் ஆகிய பகுதிகளிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் துவக்க பள்ளிகள் செயல்படுகின்றன. எனவே புன்செய் புளியம்பட்டி மற்றும் மேற்கண்ட ஊர்களில் வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க சம்பந்த பட்ட அதிகாரிகள், போக்குவரத்து துறையினர், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.
புன்செய் புளியம்பட்டியில் இருந்து கோவைக்கு பாயிண்ட்- டு - பாயிண்ட் பேருந்துகளை இயக்க வேண்டும்
- விடியல் சமூகநல இயக்கம் கோரிக்கை

 

          ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் புன்செய் புளியம்பட்டி அமைந்து உள்ளது. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட இவ்வூரில் சுமார் 25000 இக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கிறார்கள். தமிழகத்தின் 2வது பெரிய சந்தை வியாழன்தோறும் இங்கு கூடுகிறது. அருகிலுள்ள சுமார் 35இக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினசரி புளியம்பட்டி வந்து செல்கின்றனர். சத்தி, பவானிசாகர், பண்ணாரி, திருப்பூர், அவினாசி, அன்னூர், கோவை,மேட்டுபாளையம், நம்பியூர், கோபி ஆகிய பகுதிகளுக்கு செல்ல புன்செய் புளியம்பட்டி தான் மையபகுதியாக விளங்குகிறது.
          இத்தகைய சிறப்பு மிக்க புன்செய் புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நாள்தோறும் கோவைக்கு ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு கல்வி கற்க சென்று வருகிறார்கள். அதேபோல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய பொதுமக்களும் தினசரி கோவை சென்று வருகின்றனர்.
          தற்போது சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு பாயிண்ட் டு பாயிண்ட் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மிகவும் பரபரப்பான காலைநேரத்தில்  பாயிண்ட் டு பாயிண்ட் பேருந்துகள் சத்தியமங்கலத்தில் இருந்து வரும் போதே நிரம்பி வருகிறது. இதனால் புன்செய் புளியம்பட்டியில் இருந்து கோவை செல்லும் மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் ஒரே பேருந்தில் அளவுக்கு அதிகமான மாணவர்களும், மாணவியர்களும் ஏறுவதால் இடநெருக்கடி ஏற்படுகிறது. ஆண்களும், பெண்களும் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணிப்பதால்  விபத்து மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.  புன்செய் புளியம்பட்டியில் இருந்து கோவைக்கு பாயிண்ட் டு பாயிண்ட் பேருந்துகள் இயக்கபட்டால் மாணவ மாணவியர்களும், பொதுமக்களும் கல்வி மற்றும் வேலை நிறுவனங்களுக்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியும்,
          எனவே மாணவ மாணவியர்கள் நலன் கருதி காலை, மாலை வேளைகளில் புன்செய் புளியம்பட்டியில் இருந்து கோவைக்கு  கூடுதல் மற்றும் பாயிண்ட் டு பாயிண்ட் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகமும், சம்மந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளும் ஆவன செய்ய வேண்டுமென  மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் சார்பாக விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
புன்செய் புளியம்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். - பொதுமக்கள் வேண்டுகோள்




புன்செய் புளியம்பட்டி ஆகஸ்ட் 24 : 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் புன்செய் புளியம்பட்டி அமைந்து உள்ளது. பேரூராட்சியாக இருந்த புன்செய் புளியம்பட்டி நகராட்சியாக தரம் உயர்த்தபட்டுள்ளது.  இவ்வூரில் சுமார் 25000 இக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கிறார்கள். தமிழகத்தின் 2வது பெரிய சந்தை வியாழன்தோறும் இங்கு கூடுகிறது. அதேபோல் புதன்கிழமை தோறும் பிரசித்திபெற்ற மாட்டுசந்தை கூடுகிறது. அருகிலுள்ள சுமார் 35இக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினசரி புளியம்பட்டி வந்து செல்கின்றனர்.  கோவை, சத்தி, பவானிசாகர், பண்ணாரி, திருப்பூர், அவினாசி, அன்னூர்,மேட்டுபாளையம், நம்பியூர், கோபி ஆகிய பகுதிகளுக்கு செல்ல புன்செய் புளியம்பட்டி தான் மையபகுதியாக விளங்குகிறது.

புன்செய் புளியம்பட்டியில் ரூபாய் 2 கோடி  மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் காணொளி கண்காட்சி மூலம் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். அதேபோல் பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம், அம்மா குடிநீர், பாலுட்டும் தாய்மார்கள் அறை ஆகியவை அமைந்து உள்ளன. 

இங்கு நாள்தோறும் 500 இக்கும் மேற்பட்ட  பேருந்துகள் வந்து செல்கின்றன. பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலரும் பேருந்து நிலையம் வருகின்றனர். அவர்கள் அமர இருக்கை மற்றும் குடிநீர் வசதிகள் இங்கு இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் வயதானவர்கள், பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். காலை மற்றும் மதியம் வரை கொளுத்தும் வெய்யிலில் மக்கள் பேருந்துக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் அமர நிழல்குடை, இருக்கைகள்,. குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்து தரவேண்டும் என பயணிகளும், ஊர் பொதுமக்களும்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிறுத்தை அச்சுறுத்தல்:  இரவுநேர காவலுக்கு விவசாயிகள் செல்ல தடை
 
 

சத்தியமங்கலம்,ஆக 29:
தாளவாடி தொட்டகாஹசனூர் தோட்டத்துச் சாலை பகுதியில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக இரவு நேர காவலுக்கு விவசாயிகள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆசனூர் வனச்சரகம்  தாளவாடி அடுத்துள்ள தொட்டகாஹசனூர் பகுதியில் கடந்த இரு வாரங்களாக சிறுத்தை உலாவுவதால் கிராமமக்கள் விவசாயத் தோட்டத்துக்கு செல்ல முடியமால் தவிக்கின்றனர்.மேலும், வனத்தையொட்டியுள்ள கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்து கிராமமக்களை அச்சுறுத்தியதால் அதனை பிடிக்குமாறு வனத்துறையினரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.
இதையடுத்து, ஆசனூர் புலிகள் காப்பக இணை இயக்குநர்  சி.ஹெச்.பத்மா, வனச்சரக அலுவலர் உதயராஜ் மற்றும் வனத்துறையினர் ஆகியோர் சனிக்கிழமை சம்பவயிடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அதைத் தொடர்ந்து கிராமவாசிகளிடம் ஆசனூர் புலிகள் காப்பக இணை இயக்குநர்  சி.ஹெச்.பத்மா கூறியது: கிராமத்தையொட்டி நீரோடை செல்வதாலும் முட்புதர்கள் அடங்கிய அடர்ந்த காட்டுப்பகுதி என்பதாலும் இந்த பெண் சிறுத்தை குட்டி போட்டுயிருக்கலாம். குட்டி வளர 45 நாள்களாகும். அதுவரை குட்டியை பாதுகாக்க இந்த பகுதியை தேர்ந்தெடுத்திருக்கலாம். இதையடுத்து சிறுத்தையின் வழித்தடத்தை ஆய்வு செய்து வருகிறோம்.வன ஓடை, உயரமாக மரம் போன்ற இடங்களில் கேமரா வைத்து அதன் நடமாட்டத்தை உறுதி செய்தபிறகு கூண்டு வைக்கப்படும். அதுவரை கிராமமக்கள் சில நாள்கள் தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்றார்.
பனையம்பள்ளி தரைபாலம் கட்டும் பணியினை விரைந்து முடிக்க பொதுமக்கள் வேண்டுகோள்
 
 
புன்செய் புளியம்பட்டி ஆகஸ்ட் 22: புன்செய் புளியம்பட்டி அடுத்து அமைந்துள்ளது பனையம்பள்ளி கிராமம். இங்கிருந்து மல்லியம்பட்டி செல்லும் சாலையில் புதிய தரைப்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 3 மாதமாக நடைபெற்று வருகிறது. பாலம் கட்டும் பணிகள் மிக மெதுவாக நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் மிகந்த சிரமத்துக்கு ஆளாகுகிறார்கள். மழை காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கபடுகிறது. எனவே தரைப்பாலம் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், ஊர் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மத நல்லிணக்க நாள் விழா

 

புன்செய் புளியம்பட்டி ஆகஸ்ட் 20: ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மத
நல்லிணக்க நாளாக கடைபிடிக்க படுகிறது. இதை முன்னிட்டு புன்செய்
புளியம்பட்டி அடுத்துள்ள பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பழகன் தலைமை தாங்கினார். விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவமாணவியர்கள் நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் எடுபடாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளை பின்பற்றியும் தீர்த்து கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இடைநிலை ஆசிரியர்கள் சங்கீதா, மேரி திவ்யா உள்பட 120
இக்கும் மேற்பட்ட மாணவமாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tuesday, August 18, 2015

டாக்டர் அப்துல்கலாம் பிறந்த தினத்தில் ஆண்டுதோறும் 100 இளம் மாணவர்களுக்கு அப்துல்கலாம் இளம் சாதனையாளர் விருதுகள் - விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் அறிவிப்பு 



விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது
விடியல் சமூகநல இயக்கம் கடந்த 19 வருடங்களாக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது புதிய முயற்சியாக வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி டாக்டர் அப்துல்கலாம் பிறந்த தினத்தில் ஆண்டுதோறும் 100 இளம் மாணவர்களுக்கு அப்துல்கலாம் பெயரில் சாதனை விருதுகள் வழங்க முடிவு செய்யபட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் அதுவும் புன்செய் புளியம்பட்டியில் தான் ஆண்டுதோறும் 100 மாணவ மாணவியர்களுக்கு டாக்டர் கலாம் அவர்களின் பெயரில் விருது வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிட தக்கது. தமிழக அரசு ஏற்கனவே அக்டோபர் 15 ஆம் தேதியை இளைஞர் எழுச்சி நாளாக அறிவித்துள்ளது.

டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் இந்தியா 2020 கனவினை நனவாக்க அடுத்த தலைமுறை இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு புன்செய் புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் ஒன்றியத்தில் செயல்படும் 100 ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இருந்து 100 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு டாக்டர் அப்துல்கலாம் இளம் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படும். விருது பெறப்போகும் மாணவர்கள் கல்வி, பொதுநலம், தனித்திறன், ஒழுக்கம், மனிதநேயம் இவற்றை கருத்தில் கொண்டு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் விருது குழுவின் மூலம் தேர்ந்தெடுக்க படுவார்கள். அவர்களுக்கு விருது கேடயம், அப்துல்கலாம் அவர்களின் சுயசரிதை நூல் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்படும். மேலும் அப்துல்கலாம் அவர்களின் வாழ்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியும் அமைக்க படும். அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டு இளைஞர் எழுச்சி தினத்தை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் பெயரில் இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புரவலர் திட்டம் ஒன்று செயல்படுத்தபட உள்ளது. இதில் இணைந்து செயல்பட விருப்பம் உள்ளவர்கள் எஸ்.ஜெயகாந்தன் - 98427 80240 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விழா நடைபெறும் இடம், விருது பெறப்போகும் மாணவர்கள் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். நன்றி.
ரஜினி, கமலுடன் நாசர்- விஷால் குழு சந்திப்பு.. சங்கத் தேர்தலில் ஆதரவு கோரியது



சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் தங்களது அணிக்கு ஆதரவு தருமாறு கோரி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை நாசர் - விஷால் குழுவினர் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர். நடிகர் சங்கத் தேர்தல் ஜூரம் நடிகர் நடிகையர் மத்தியில் வேகமாக இருக்கிறது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியினர் தனியாகவும், அவர்களை எதிர்த்து நாசரை முன்னிறுத்தி நடிகர் விஷால் உள்ளிட்டோர் தனி அணியாகவும் மோதவுள்ளனர்.

செப்டம்பர் 1ம் தேதி சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் தேர்தல் நடைபெறவுள்ளது. இரு தரப்பினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் நாடக நடிகர்களின் வாக்குகள் முக்கியமானவை என்பதால் அவர்களைக் கவரும் வேலையில் இரு தரப்பினரும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இப்போது சென்னையில் முக்கிய தலைகளைச் சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

நாசர் - விஷால் குழுவினர் உச்ச நடிகர்களான ரஜினியையும், கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர். நாசர் தலைமையிலான இந்தக் குழுவினருடன், விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்டோரும் நேரில் சென்று இரு சூப்பர் ஸ்டார்களையும் சந்தித்து ஆதரவு கேட்டனர்.
சத்தியமங்கலம்  தலமலை வனப்பகுதியில் குட்டியுடன் நடமாடும் புலி.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தலமலை வனப்பகுதியில் குட்டியுடன் நடமாடும் புலி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
சத்தியமங்கலம், ஆக.17. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தலமலை வனப்பகுதியில் புலி குட்டியுடன் நடமாடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலை நிலவுவதால் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகாித்துள்ளது. குறிப்பாக தலமலை வனச்சரகத்தில் ராமரணை, பெஜலட்டி, மாவநத்தம், இட்டரை, தடசலட்டி வனப்பகுதியிலும், பவானிசாகா் வனச்சரகத்தில் கொத்தமங்கலம், புதுபீா்கடவு, கருவண்ணராயா் கோயில் மற்றும் மாயாற்றின் கரையோர வனப்பகுதியிலும் புலிகள் வாழ்வதற்கேற்ற அடா்வனப்பகுதி இயற்கையாக அமைந்துள்ளதால் இப்பகுதியில் புலிகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது. புலிகளின் நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கம் குறித்து அறிய உலகளாவிய இயற்கைக்கான நிதிநிறுவனம் (புலிகள் திட்டம்) வனத்துறையுடன் இணைந்து புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறது. இதில் சமீபத்தில்  தலமலை வனப்பகுதியில் இரவு நேரத்தில் புலி குட்டியுடன் நடந்து செல்வது பதிவாகியுள்ளது. இதன் முலம் புலிகள் எண்ணிக்கை அதிகாித்திருப்பத உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாாிகள் கூறியதாவது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகாித்தததால் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த 2013 ம் ஆண்டில் சத்தியமங்கலம் வன உயிாின சரணாலயத்தை புலிகள் காப்பகமாக அறிவித்தது. இதையடுத்து புலிகள் காப்பகத்திற்கான நடைமுறை செயல்பாடுகள் வனப்பகுதியில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. புலிகள் காப்பகம் ஆனதால் வனக்கோட்டம் இரண்டாக பிாிக்கப்பட்டு இரண்டு வனச்சரகங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டது. மத்திய புலிகள் காப்பக ஆணையம் நிதி ஒதுக்கியுள்ளதால் வனத்துறைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறினா்.
சத்தியமங்கலம் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் ஆடல்,பாடலுடன் பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம்


கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிளாஸ்டிக்  விழிப்புணர்வு பிரசாரத்தில் சென்னை ஜெயபால் நாடக குழுவினருடன் பேரூராட்சித் தலைவர் கே.சுப்பிரமணியம், செயல்அலுவலர் வீ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர்
சத்தியமங்கலம்,ஆக 17:
சத்தியமங்கலம் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் நாடக குழுவினரின் ஆடல்,பாடலுடன்  திங்கள்கிழமை பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதி மக்களிடம் பிளாஸ்டிக்  பயன்பாடு முற்றிலும் தவிர்க்கும் விதமாக பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி, வீடு வீடாக பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரம்,  கடைகளில் பிளாஸ்டிக் பை இல்லை என்ற வாசகம் அடங்கிய விளம்பரம் மற்றும்  துப்புரவு பணியாளர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக,  நாடகம் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் பேரூராட்சித் தலைவர் கே.சுப்பிரமணியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.துணைத்தலைவர் டி.வெங்கடசாலம், பேரூராட்சி செயல்அலுவலர் வீ.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சியில் வாரச்சந்தையில் நடைபெற்ற சென்னை ஜெயபால் நாடக குழுவினரின் ஆடல்,பாடல் நிகழ்ச்சியில் நடிகர்கள் பங்கேற்ரு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் துணிப்பை பயன்படுத்தி அதனை தூக்கி வீச வேண்டும் எனவும் நாடகம் மூலம் காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பேரூராட்சியில் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, விற்பனைக்கு தகுதியில்லாத பிளாஸ்டிக் கப், கவர் மற்றும் குடிநீர் பாக்கெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 6 கடைகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் திங்கள்கிழமை நாடகம் மூலம் பிளாஸ்டிக்  விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் சென்னை ஜெயபால் நாடக குழுவினருடன் பேரூராட்சித் தலைவர் கே.சுப்பிரமணியம், செயல்அலுவலர் வீ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர்

Monday, August 17, 2015

புன்செய் புளியம்பட்டியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்

 
 
புன்செய் புளியம்பட்டி ஆகஸ்ட் 14: புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் வருகின்ற 23-08-2015 ஞாயற்றுகிழமை காலை 9.30 மணிக்கு புன்செய் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற உள்ளது.

இது குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறியிருப்பதாவது, பள்ளி மாணவ மாணவியர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும், இந்திய நாட்டின் 68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டும் விடியல் சமூகநல இயக்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் வருகின்ற 23-08-2015 ஞாயற்றுகிழமை காலை 9.30 மணிக்கு புன்செய் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்கள் பங்கு கொள்ளலாம். நுழைவு கட்டணம் ரூபாய்100. ஆண், மற்றும் பெண்களுக்கு தனித்தனி போட்டிகள் நடைபெறும். ஒரு பள்ளியில் இருந்து எதனை மாணவ மாணவியர்கள் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். செஸ் போட்டிகள் 11 வயது, 14 வயது, 17 வயது, 19 வயது என நான்கு பிரிவுகளாக நடத்தபடுகிறது. ஓவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெரும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். போட்டி நாளன்றே மாலை 3 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறும். செஸ் போர்டு வைத்திருக்கும் மாணவ மாணவியர்கள் போட்டிக்கு செஸ் போர்டை கொண்டு வரவும். மாணவ மாணவியர்கள் மதிய உணவு கொண்டு வரவேண்டும். போட்டியில் பங்கு பெரும் மாணவ மாணவியர்கள் தங்கள் பெயர் மற்றும் நுழைவு கட்டணத்தை 21-08-2015 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விடியல் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு விடியல் அலுவலகம், மாதம்பாளையம் ரோடு, புன்செய் புளியம்பட்டி என்ற முகவரியில் நேரிலோ 98427 80240 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



ஆடி பூரத்தை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி அண்ணாமலையார் திருகோவிலில் முல்லை பூ பந்தல் மற்றும் வளையல் அலங்காரத்தில் காட்சி தரும் உண்ணாமுலைஅம்மை


Saturday, August 1, 2015

ஆடிப்பெருக்கு தினத்தன்று (3ம் தேதி) பவானிசாகர் அணை மீது, பொதுமக்கள் சென்று பார்வையிட, பொதுப்பணித் துறையினர் அனுமதி



சத்தியமங்கலம்:ஆடிப்பெருக்கு தினத்தன்று (3ம் தேதி) பவானிசாகர் அணை மீது, பொதுமக்கள் சென்று பார்வையிட, பொதுப்பணித் துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையின் மேல்பகுதியில், பொதுமக்கள் செல்ல, பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும், ஆடி, 18ம் தேதி (ஆடிப்பெருக்கு) ஒரு நாள் மட்டும், பொதுமக்கள், பவானிசாகர் அணை மீது ஏறி சென்று, நீர் தேக்கத்தை பார்த்து ரசிக்கலாம்.
இது குறித்து, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:ஆடிப்பெருக்கு தினத்தன்று, பொதுமக்கள் அணை முன் உள்ள பூங்காவின் வழியில், நுழைவு சீட்டு பெற்றுக் கொண்டு, பவானி அம்மன் கோவில் வழியாக படி ஏறி, அணை மீது செல்லலாம்.
மேலும், மேட்டுப்பாளையம் ரோட்டில் போலீஸ் குடியிருப்பு அருகில் உள்ள வழியிலும், நுழைவு சீட்டு பெற்றுக் கொண்டு, அணை மீது செல்லலாம். மேட்டுப்பாளையம் ரோடு வழியாக மட்டும், டூவீலர்கள் அணை மீது சென்று, அங்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும்.நான்கு சக்கர வாகனங்களில், கட்டாயமாக அணை மீது செல்ல அனுமதி இல்லை. அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்திக் கொள்ளவும். அணையில் நீர்மட்டம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் பத்திரமாக அணை மீது சென்று வர வேண்டும், என்றார்.
2 வது வாரமாக தொடரும் மாட்டு வியாபாரிகள் ஸ்டிரைக். புஞ்சைபுளியம்பட்டி மாட்டுச்சந்தை வெறிச்சோடியது.





புஞ்சைபுளியம்பட்டி, ஜூலை.30. மாட்டுவியாபாரிகள் ஸ்டிரைக் எதிரொலியால் 2 வது வாரமாக புஞ்சைபுளியம்பட்டி மாட்டுச்சந்தை மாடுகள் வரத்தின்றி வெறிச்சோடியது. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்கள் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமி£கத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தை புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையாகும். இச்சந்தைக்கு ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்கிளிலிருந்தும், அண்டைமாநிலமான கர்நாடக மாநிலத்திலிருந்தும் கறவைமாடு, எருதுகள், அடிமாடுகள், கன்றுக்குட்டிகள், எருமை உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. கோவை, ஊட்டி, கேரள மாநிலத்திலிருந்து வியாபாரிகள் மாடுகளை விலைபேசி வாங்கி லாரியில் ஏற்றிக் கொண்டு செல்கின்றனர்.ம். இந்நிலையில் மாட்டுச்சந்தையில் மாடுகள் வாங்கி செல்லும்போது போலீசார் வாகனங்களை பிடித்து மாடுகளை அளவுக்கதிகமாக ஏற்றி வந்ததாக கூறி மாடுகளை பறிமுதல் செய்து கோசாலைக்கு அனுப்பி வைப்பதன் காரணமாக தொழில் பாதிக்கப்பட்டதால் மாட்டுவியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 19 ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக 2 வது வாரமாக நேற்று புஞ்சைபுளியம்பட்டி மாட்டுச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ரு.50 இலட்சம் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாட்டுவியாபாரிகள் தெரிவித்தனர்.
புன்செய் புளியம்பட்டியில் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலம்






அணுவிஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர் அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புஞ்சைபுளியம்பட்டியில் அனைத்துக்கட்சியினர், சமுகநல அமைப்புகள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் மவுன ஊர்வலமாக சென்று உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை 11 மணிக்கு பவானிசாகர் சாலையில் உள்ள எஸ்ஆர்டி தியேட்டர் அருகே திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, மதிமுக கட்சியினர், சமுக நல அமைப்புகள், அரசுப்பள்ளி, தனியார் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என 1500 க்கும் மேற்பட்டோர் மவுன ஊர்வலமாக புறப்பட்டு பஸ்நிலையத்தை வந்தடைந்தனர். பஸ்நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்கம், புகைப்படக்கலைஞர்கள் சங்கம், வாடகை வேன், கார் ஓட்டுநர் உரிமையாளர் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். அப்துல்கலாமின் மறைவையொட்டி நேற்று புஞ்சைபுளியம்பட்டியில் வாடகை வேன், கார்கள் ஓடவில்லை.