தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, November 25, 2014

காவியத் தலைவன் படத்துக்கு வரிவிலக்கு




வசந்த பாலன் இயக்கத்தில் வரும் 28-ம் தேதி வெளியாகவுள்ள காவியத் தலைவன் படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. முன்பெல்லாம் படத்தின் தலைப்பு தமிழில் இருந்தாலே போதும், வரி விலக்கு நிச்சயம் என்ற நிலை இருந்தது. அதிமுக அரசு பதவிக்கு வந்த பிறகு அந்த நிலை மாறியது. தமிழில் தலைப்பு, ஆபாசமில்லாத காட்சி அமைப்பு, அனைவரும் பார்க்கத்தக்க வகையில் யு சான்று என்று பல அம்சங்கள் சிறப்பாக அமைந்தால் மட்டுமே வரிவிலக்கு என்ற கட்டுப்பாடுகள் வந்தன.

இந்தக் கட்டுப்பாடுகள் இன்னொரு பக்கம் அரசியல் ரீதியான நெருக்கடிகளுக்குப் பயன்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் விமர்சித்தாலும், மக்களுக்குச் சேர வேண்டிய வரிச்சலுகை குப்பைப் படங்களை எடுத்தவர்களுக்கும் போகாமல் தடுக்க ஓரளவு உதவி வருகிறது. படங்களுக்கு வரிச் சலுகை பெறுவது அத்தனை சாதாரண விஷயமல்ல என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் வசந்த பாலன் இயக்கத்தில், சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வரவிருக்கும் காவியத் தலைவன் படத்துக்கு முழுமையாக கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க தீவிர ரோந்து பணி: ஐ.ஜி. சங்கர் பேட்டி


ஈரோடு, நவ.23–
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோவை மேற்கு மண்டலத்துக்குட்பட்ட ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. சங்கர் கலந்து கொண்டு பேசினார். கூட்டம் முடிந்த பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த ஆண்டை விட குற்றங்கள் குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு 8 மாவட்டத்திலும் 290 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த ஆண்டு 260 வழக்குகள் தான் பதிவாகி உள்ளது. சங்கிலி (நகை) பறிப்பு வழக்குகள் கடந்த ஆண்டு 211 பதிவானது. இந்த ஆண்டு 144 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
வழக்குகளை விரைவில் முடிப்பதிலும் குற்றங்களை தடுப்பதிலும் அனைத்து மாவட்டங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஈரோடு , நீலகிரி மாவட்ட மற்றும் மாவட்ட வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் கிடையாது. இம்மாவட்ட மலைப்பகுதிகளில் அதிரடி படை வீரர்களுடன் போலீசாரும் இணைந்து ரோந்து சுற்றி தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வனப்பகுதிகளில் எந்த பதட்டமும், தீவிரவாதிகளின் நடமாட்டமும் இல்லை. இவ்வாறு ஐ.ஜி.சங்கர் கூறினார்.

மேதா பட்கருடன் கலந்துரையாடிய பர்கூர் பழங்குடி குழந்தைகள்



ஈரோட்டுக்கு சனிக்கிழமை வந்த சமூகசேவகி மேதா பட்கருடன் பர்கூர் பழங்குடியின குழந்தைகள் கலந்துரையாடினர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப் பகுதியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் சுடர் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி செல்லா, பள்ளி இடைநின்ற மாணவர்களுக்காக உண்டு உறைவிட சிறப்புப் பயிற்சி மையம் செயல்படுகிறது.
பர்கூரை சுற்றியுள்ள கொங்காடை, ஒன்னகரை, தம்புரெட்டி, குட்டையூர், சுண்டப்பூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் நாற்பது மாணவர்கள் இம்மையத்தில் பயின்று வருகின்றனர்.
இம் மையத்தில் பயிலும் மாணவர்கள் பல்வேறு காரணங்களால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என்பதால், இவர்களுக்கு வெறுமனே பாடபுத்தகங்கள் மட்டுமின்றி ஒரிகாமி என்ற காகிதக்கலை, கல்விச்சுற்றுலா, விளையாட்டு என செயல்வழிக்கல்வி அளிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, இம் மையத்தில் பயிலும் மாணவர்கள் சனிக்கிழமை ஈரோட்டுக்கு வந்திருந்த பல்லுயிர் பாதுகாப்பு அறிவியல் ரயிலை காண சுடர் தொண்டு நிறுவனம் மூலம் அழைத்துவரப்பட்டனர். மத்திய அரசின் சார்பில் வந்துள்ள இந்த "அறிவியல் எக்ஸ்பிரஸ்' எனப்படும் இந்த ரயிலின் 16 பெட்டிகளில் ஏறி பல்லுயிர் பாதுகாப்பு குறித்த விளக்கங்களை கண்டு கேட்டு அறிந்தனர்.
அடுத்ததாக ஈரோடு பெரியார் நினைவிடத்துக்குச் சென்று பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்திருந்த சுற்றுச் சூழலியலாளரும், சமூகசேவகியுமான மேத்தா பட்கரை இந்தக் குழந்தைகள் சந்தித்து பேசினர். அவரும் சற்று நேரம் இக்குழந்தைகளிடம், மலைக்கிராமங்களில் உள்ள கல்வி வசதிகள், பள்ளி இடைநிற்றல் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து கலந்துரையாடினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது ஈரோடு செங்குந்தர் கல்விக் கழக செயலர் எஸ்.சிவானந்தன், தமிழக பசுமை இயக்கத் தலைவர் மருத்துவர் வெ.ஜீவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்தப் பயண நிகழ்வில் சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.சி.நடராஜ், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் அருணாச்சலம், தாமரைச்செல்வன், பள்ளி ஆசிரியர்கள் மாதப்பன், பெரியசாமி உள்ளிட்டோர் பங்ககேற்றனர்.

தரமற்ற கசிவு நீர்த் தடுப்புச் சுவர் கட்டுமானப் பணியை நிறுத்திய விவசாயிகள்


புஞ்சைபுளியம்பட்டி அருகே தடுப்பணையில் இருந்து வெளியேறும் கசிவுநீரை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரின் கட்டுமானப் பணியில் தரம் இல்லை எனக் கூறி அப் பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, கட்டுமானப் பணியையும் அவர்கள் தடுத்து நிறுத்தினர்.
சத்தி, தேசிபாளையம் ஊராட்சி கருப்பகவுண்டன்புதூரில் உள்ள தடுப்பணையில் மழைநீர் தேங்காமல் வீணாகிவிடுவதாகவும், அணையில் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் எனவும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தடுப்பணையில் தடுப்புச் சுவர் கட்டுமானப் பணி திங்கள்கிழமை துவங்கியது. தடுப்புச் சுவரை ஒட்டியுள்ள மண்ணை அகற்றிவிட்டு, புதிதாக குழிதோண்டி கான்கிரீட் போடுவதற்கு பதிலாக மண்ணை அகற்றாமல் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதைப் பார்த்த விவசாயிகள் கண்டித்தனர். இதுகுறித்து தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்துக்கு வராத தேசிபாளையம் ஊராட்சித் தலைவரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்ததாரர் மற்றும் கட்டுமானப் பணியாள்கள் தொடர்ந்து பணி மேற்கொண்டதால், விவசாயிகள் திரண்டு பணியை தடுத்து நிறுத்தினர்.
அங்கு வந்த பவானிசாகர் ஒன்றியக் குழுத் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தடுப்புச் சுவர் கட்டுமானப் பணியை பார்வையிட்டனர். சரியான அளவில் சிமெண்ட் கலவையில்லாமல் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்துமாறு அவர்கள் ஒப்பந்ததாரை கேட்டுக்கொண்டனர்.தடுப்பணை நீர் கசியாதபடி நிலத்தடியில் 5 அடிவரை மண்ணை தோண்டி எடுத்துவிட்டு கட்டுமானப் பணியை தொடங்குவதாக ஒப்பந்ததாரர் உறுதியளித்தையடுத்து விவசாயிகள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.


Sunday, November 16, 2014

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது. நாலரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. பயணிகள் கடுங்குளிரில் அவதி.




சத்தியமங்கலம், நவ.17 . அடுத்த திம்பம் மலைப்பாதையில் லாரி குழியில் இறங்கியதால் தமிழகம் & கர்நாடக மாநிலத்திற்கிடையே நாலரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் & மைசூர் சாலையில் பண்ணாரியை அடுத்து அடர்ந்த வனப்பகுதியில் 27 அபாயகரமான கொண்டை ஊசிவளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை உள்ளது. இம்மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் சரக்கு வாகனங்கள் மற்றும் இருமாநில பேருந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தற்போது பெய்த மழை காரணமாக கொண்டைஊசிவளைவுகளில் சாலையில் குழிகள் ஏற்பட்டுள்ளதால் லாரியின் சக்கரங்கள் குழியில் சிக்கி நகரமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. நேற்று அதிகாலை 5 மணியளவில் மைசூரிலிருந்து பருத்திப்பஞ்சு பாரம் ஏற்றிய லாரி கோவை செல்வதற்காக செல்வதற்காக மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. 15 வது கொண்டை ஊசிவளைவில் லாரி திரும்பியபோது லாரியின் பின்சக்கரம் குழியில் சாலையில் உள்ள சிக்கி லாரி நகரமுடியாமல் நின்றது. இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் மலைப்பாதையின் இருபுறமும் வரிசையில் நின்றன. இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்தை சீர்படுத்தும பணியில் ஈடுபட்டனர். காலை 9.30 மணியளவில் லாரி கிரேன் முலம் மீட்கப்பட்டு போக்குவரத்து சீரானது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கடுங்குளிரில் அவதிப்பட்டனர். மலைப்பாதையில் 3, 6, 12, 15, 20 மற்றும் 24 ம் கொண்டை ஊசிவளைவுகளில் உள்ள குழிகளை மூட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டதாரி ஆசிரியருக்கு இணையான சம்பளத்தை உடற்கல்வி ஆசிரியருக்கும் வழங்க வேண்டும்


சத்தியமங்கலம்,நவ 17:

பட்டதாரி ஆசிரியருக்கு இணையான உடற்கல்வி ஆசிரியருக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் இயக்குநர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் இயக்குநர்கள் நலச சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் சத்தியமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது, காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரிச் செயலாளர் பி.மலர்ச்செல்வி தலைமை தாங்கினார்.பிபிஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சாந்திதங்கவேலு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் தமிழ்நாடு அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் கூட்டமைப்பின் தலைவர் சோலை எம்.ராஜா மாணவ, மாணவிகளுக்கு இலவச பந்துகளை வழங்கினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அனைத்து பள்ளி மாணவர்களும் விளையாட வேண்டும் என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு இலவச பந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் விளையாட்டு திறனை உடற்கல்வி ஆசிரியர்கள் வெளியே கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளியிலும் உடற்கல்வி இயக்குநரை நியமிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியரை போலவே உடற்கல்வி ஆசிரியருக்கும் சம்பளம் வழங்க வேண்டும். பகுதி நேர உடற்கல்வி ஆசிரியரை நிரந்தரப் பணிக்கு மாற்ற வேண்டும். உடற்கல்வி ஆசிரியர் அக்கவுண்ட் டெஸ்டில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசின் கொள்கை தவறானது.தற்போது காலியான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் சாரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ஏ.எஸ்.சக்திபாலாஜி, மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.ராஜேந்திரன், மாநில பொதுச்செயலாளர் ஆர்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Saturday, November 15, 2014

புன்செய் புளியம்பட்டி அருகிலுள்ள காவிலிபாளையம் குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும்.

- தமிழக அரசுக்கு விடியல் சமூகநல இயக்கம் வேண்டுகோள்







புன்செய் புளியம்பட்டியை அடுத்துள்ள காவிலிபாளையத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைத்து சுற்றுலா தலமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடியல் சமூகநல இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு அருகில் காவிலிபாளையம்  ஊராட்சி உள்ளது. இங்கு 1500 குடும்பங்களை சேர்ந்த சுமார் 5000 பேர் வசித்து வருகிறார்கள். இங்கு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் ஒன்று உள்ளது.

வகுத்துகவுண்டன் புதூர், தென்னமாங்குளம், செல்லம்பாளையம், காராபாடி, கண்டிசாலை, கோப்பம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள தடுப்பணை மற்றும் சிறிய குளங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர்கள் கடைசியில் காவிலிபாளையம் குளத்தை சென்று அடைகிறது. அதே போல் புன்செய் புளியம்பட்டி செட்டிகுட்டை, வெங்கநாயகன்பாளையம் குளம், நல்லூர் குளம், புங்கபள்ளி குளம் ஆகியவற்றின் உபரி நீரும் காவிலிபாளையம் குளத்தை வந்தடைகிறது. எனவே இந்த குளத்தில் ஆண்டு முழுமையும் நீர் உள்ளது. மேலும் காவிலிபாளையம் குளத்துக்கு நீர் ஆதாரமாக விளங்கும் சுற்றியுள்ள குளங்களை தூர்வாரினால் உபரி நீர் வீணாகாமல் காவிலிபாளையம் குளத்தை முழுமையாக வந்தடையும்.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 14 பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த 14 சரணாலயங்களை காட்டிலும் பரப்பளவில் காவிலிபாளையம் குளம் மிகவும் பெரிது. ஈரோட்டில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 0.77 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதைவிட மிகவும் அதிக அளவில் 500 ஏக்கர் பரப்பளவில் காவிலிபாளையம் குளம் அமைந்துள்ளது. இதில் ஏராளமான பறவைகள் உள்ளன. அவ்வபோது பிற இடங்களில் இருந்தும் பறவைகள் வருகின்றன. காவிலிபாளையம் குளத்துக்கு அருகிலேய சிறிய மலைக்குன்று ஒன்று உள்ளது. இங்கு இருந்து பார்த்தால் காவிலிபாளையம் குளத்தை முழுமையாக பார்வை இடலாம்.

மேலும் குளத்தை சுற்றிலும் ஏராளமான கருவேல மரங்கள் உள்ளது. பறவைகள் உண்ணக்கூடிய பழ மரங்களை அதிகளவில் நட்டால் இன்னும் அதிக பறவைகள் இங்கு வரக்கூடும். இங்கு தற்போது கொக்கு, நாரை, நீர்காகம் உள்பட பல்வேறு பறவைகள் உள்ளது. அதிக பரப்பளவு, ஆண்டு முழுவதும் நீர், சுற்றிலும் சிறிய மரங்கள், அருகிலேயே மலைகுன்று என பறவைகள் சரணாலயம் அமைக்க அனைத்து வசதிகளையும் காவிலிபாளையம் குளம் இயற்கையாகவே பெற்றுள்ளது. பறவைகளுக்கான வாழ்வாதாரம், உணவு தரும் பழ மரங்கள் என சில வசதிகளை செய்தால் ஆண்டு முழுவதும் பறவைகள் இங்கே வருகை தர ஆரம்பிக்கும்.

மேலும் இங்கு படகுகள் மூலம் சுற்றுபயணம் செய்து பறவைகளை காணவும் வசதி ஏற்படுத்தினால் பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தங்குமிடம், வழிகாட்டி, தொலைநோக்கி, வாகன வசதி, உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தினால் இந்த பகுதி மிகசிறந்த சுற்றுலா தலமாக மாறும். இதன் மூலம் சிறு மற்றும் குறு வியாபாரிகள் பயன்பெறுவார்கள். ஏராளமான பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

வண்ணங்களின் உலகம் பூக்கள் என்றால் வண்ணங்களோடு சேர்த்து இனிமையான குரலையும் கொண்டது பறவைகளின் உலகம். இன்று உலகில் 1300 இகும் மேற்பட்ட பறவை இனங்கள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அழகழகான பறவைகளை இயற்கை சூழ்நிலையில் கண்டு மகிழ்வது அனைவருக்கும் பிடிக்கும். பறவையை கண்டான். விமானம் படைத்தான் என்பார்கள். புதிய புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக பறவைகள் திகழ்கின்றன. கூட்டம் கூட்டமாக பறவைகள் பறந்து செல்வதை கண்டு ரசிப்பது பரவசமான அனுபவம். ‘இந்தியப் பறவையியலின் தந்தை' என அழைக்கப்படும் சாலிம் அலி அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 12 ஆம் தேதி ஆண்டு தோறும் தேசிய பறவைகள் தினமாக கொண்டாடபடுகிறது. இத்தருணத்தில் தமிழக அரசுக்கு விடியல் சமூகநல இயக்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தமிழக அரசு, வனத்துறை மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் கள ஆய்வு செய்து காவிலிபாளையம் குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நிற்கும் பால் லாரி: போக்குவரத்து பாதிப்பு



ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அடுத்த திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.

இதில் சில அபாயகரமான வளைவுகளில் அதிக பாரம் ஏற்றிவரும் லாரிகள் சிக்கி அடிக்கடி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்ந்து அடிக்கடி நடந்து வருகிறது.
நேற்று இரவு 10 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 12–வது வளைவில் ஒரு லாரி திடீரென பழுதாகி நின்றது. இதனால் திடீர் போக்குவரத்து தடை ஏற்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அது சரி செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு பால் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி திம்பம் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது.

5–வது சுற்று பாதையின் வளைவில் அந்த லாரி திரும்பும்போது அதில் உள்ள பள்ளத்தில் அந்த லாரி சிக்கிகொண்டது. தற்போது பெய்து வரும் பலத்த மழையால் திம்பம் மலைப்பாதை ரோடு மிகவும் சிதிலம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. டிரைவர் எவ்வளவோ முயன்றும் லாரியை எடுக்க முடியவில்லை.

இதனால் மலை மேலே இருந்து கீழே வரும் வாகனங்களும் கீழே இருந்து மலை மீது ஏறும் மற்ற லாரிகள், பஸ் மற்றும் இதர வாகனங்களும் தொடர்ந்து செல்ல முடியாமல் நிற்கிறது. போக்குவரத்து ஸ்தம்பித்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பஸ் மற்றும் கார் வேன்களில் உள்ள பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சம்பவ இடத்துக்கு நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் மற்றும் மீட்பு குழுவினரும் விரைந்து உள்ளனர்.
தொடர் மழையால் கடம்பூர் மலைப்பகுதியில் உருவான புதிய அருவிகள்




சத்தியமங்கலம், நவ 14: சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதியில் தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக புதிய அருவிகள் உருவாகியுள்ளன.இந்த அருவிகள் பெரும்பள்ளம் அணையில் கலப்பதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

சில வாரங்களாக சத்தி புலிகள் காப்பகத்தில் கனமழை பெய்து வருவாதல் பெரும்பாலான குளம், குட்டைகள் நிரம்பிவிட்டன. மலைக்கிராமங்களில் நிலத்தடிநீர் உயர்ந்தும் நிலத்தில் ஈரப்பதம் பிடித்துள்ளதால் தொடர்ச்சியாக பெய்யும் மழைநீர் நிலத்தில் தேங்கி நிற்காமல் ஓடைகளில் வழிந்தோடுகின்றன. கடம்பூர்,மல்லியம்மன் துர்க்கம், குன்றி, மாக்கம்பாளையம், அருகியம், கூத்தம்பாளையம், இருட்டிபாளையம் உள்ளிட்ட வனக்கிராமங்களில் சில வாரங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக காய்ந்து கிடந்த வனப்பகுதி பச்சைப்பசேலென மாறியது.

சிற்றோடைகள் மற்றும் பள்ளங்களில் ஓடும் நீர் பாறைகளின் வழியாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அருவியாக கொட்டுகிறது. கே.என்.பாளையத்திலிருந்து கடம்பூர் செல்லும் மலைப்பாதையில் இந்த அருவிகள் தோன்றியுள்ளதால் மலைப்பாதையில் பயணிப்பவர்கள் அருவிகளில் வழியும் வெண்நுரை அருவிநீரை நின்று ரசித்தபடி செல்கின்றனர். அருவியில் கொட்டும் நீர் ஐஸ் போல் குளிர்ந்துள்ளது மட்டுமின்றி வனப்பகுதியிலிருந்து மூலிகைகள் கலந்து வருவதால் குற்றாலத்தில் உள்ள நீருக்கு இணையானது என மலைகிராம மக்கள் கூறுகின்றனர்.

இலைகள் உதிர்ந்து வறண்டு சருகாக காணப்பட்ட வனப்பகுதியானது தற்போது எங்கு பார்த்தாலும் பச்சைகம்பளம் போர்த்தியபடி மரங்கள் தெரிகின்றன. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மண்ணில் ஈரப்பதம் ஏற்பட்டதால் மானாவாரியாக கிடந்த நிலங்களில் உழவு பணி நடந்து வருகிறது. கசிவுநீர்க்குட்டைகள், தடப்பணைகள் நிரம்பிவிட்டதால் வனவிலங்குகள் அந்தந்த குட்டைகளில் நீர் அருந்துவதாலும் யானைகள் நடமாட்டம் குறைந்துவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
விளையாட்டு போட்டிகளில் அம்மா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை



பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மாவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் அம்மா மெட்ரிக் பள்ளி மாணவிகள் மூத்தோர் பிரிவில் இரண்டாம் இடமும், மாணவர்கள் மூன்றாம் இடமும் பெற்றனர். அதேபோல் இளையோர் பிரிவில் மாணவர்கள் மூன்றாம் இடமும் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவர்களை அம்மா மெட்ரிக் பள்ளியின் செயலாளர் திருமதி ராணி அன்பு பாராட்டினார். உடன் உடல்கல்வி ஆசிரியர் வரதராஜ் உள்ளார்.
இலவச கண் சிகிச்சை முகாம் 

 
 



ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, புன்செய் புளியம்பட்டி ட்ரீ அறக்கட்டளை, ஸ்ரீ தனியலக்ஷ்மி ட்ரேடர்ஸ், நல்லூர் வெற்றி நர்சிங் காலேஜ் ஆகியவை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது. இதில் ஏராளமான் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

இவ்விழாவில் புன்செய் புளியம்பட்டி நகராட்சி துணை தலைவர் டி.பாபு, வெற்றி காலேஜ் லோகநாதன், ட்ரீ டிரஸ்ட் ஸ்ரீனிவாசன், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் முத்து, அரவிந்த் கண் மருத்துவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Wednesday, November 12, 2014

சாக்கடை நீர் புகுவதை தடுக்கக்கோரி ஆலத்துக்கோம்பை கிராமமக்கள் சாலை மறியல்



சத்தியமங்கலம்,நவ 13:
கிராமத்துக்கு சாக்கடை நீர் புகுவதை தடுக்ககோரி ஆலத்துக்கோம்பை கிராமமக்கள் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பை அண்ணாநகரில் 100-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தை ஒட்டி பண்ணாரிஅம்மன் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான விவசாய பண்ணையும், பணியாளர் குடியிருப்பும் உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பண்ணையிலிருந்து வெளியேறும் மழைநீரும் பணியாளர் குடியிருப்பு சாக்கடைநீரும் கலந்து அண்ணாநகர் கிராமத்துக்குள் புகுந்து வீட்டு சுவர்களை ஒட்டியவாறு செல்வதால் சுவர்களில் ஈரப்பதம் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளதாக புகார் தெரிவித்தனர்.

இது குறித்து கிராமமக்கள் சர்க்கலை ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். சாக்கடை நீரை மாற்று பகுதியில் கொண்டு செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சதுமுகை ஊராட்சி வார்டு உறுப்பினர் பழனிச்சாமி தலைமையில் 50 -கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் - கொடிவேரி சாலையில் அமர்ந்து புதன்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த பவானிசாகர் எம்எல்ஏ, பி.எல்.சுந்தரம் கிராம மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Tuesday, November 11, 2014





புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் குழந்தைகள் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இன்று நேரு நகர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் LIFE OF PI ஆங்கில திரைப்படம் திரையிட பட்டது. மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் திரைபடத்தை கண்டுகளித்தனர்.

 



புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் குழந்தைகள் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இன்று வெங்கநாயகன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பாரதி திரைப்படம் திரையிட பட்டது. மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் திரைபடத்தை கண்டுகளித்தனர்.
தாளவாடியில் 8 பேர் கைதுக்கு பவானிசாகர் எம்எல்ஏ கண்டனம்


சத்தியமங்கலம்,நவ 11:
தாளவாடி வனப்பகுதியில் வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட 11 பேரை விடுக்கவேண்டும் என்றும் அவர்களை தாக்கி வனஊழியர்கள் மீது வனகொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பவானிசாகர் எம்எல்ஏ, பி.எல்.சுந்தரம் செவ்வாய்க்கிழமை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவின் விபரம்:
சத்தியமங்கலம் வட்டம்,தாளவாடி வனச்க்கிராமத்தைச் சேர்ந் 11 பேரை  தாளவாடி வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.பின்னர் அதில் 3 பேரை மட்டுமே விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்ட மூவரில் சோளகர்தொட்டியைச் சேர்ந்த குமார் என்பவரை சிக்கள்ளி வனச்சரகத்தில வைத்து தாக்கியுள்ளனர். கடுமையாக தாக்கப்பட்ட குமார், சத்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பழங்குடியினர் வனக்குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களை விசாரிப்பதும் குற்றம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில்  அவர்களை சட்டப்படி தண்டணைக்கு உள்ளாக்குவதும் எந்தவிதத்திலும் தவறில்லை.  அதேசமயம், அப்பாவி மலைவாழ் மக்கள் என்பதற்காக விசாரணை என்கின்ற பெயரிலேயே அவர்களை  கடுமையான சித்தரவதைக்கு ஆளாக்குவதும், சட்டநியாங்களுக்கு புறம்பாக அவர்களை அடைத்து வைப்பதும் மனித உரிமைக்கு எதிரானது. எனவே, வன அலுவலர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைதடுப்பு சட்டப்படி வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
தாளவாடி வனத்தில் திரிந்த 8 பேர் கைது: 3 பேர் விடுவிப்பு

சத்தியமங்கலம்,நவ 12:
தாளவாடி வனப்பகுதியில் பிடிப்பட்ட 11 பேரில் 3 பேர் விடுவிக்கப்பட்டபட்டனர். மற்ற 8 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் உதயராஜ் தலைமையில் வனத்துறையினர் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அபோபது, கல்மண்டிபுரம் பகுதியில் சந்தேகப்படும்படி திரிந்த 11 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர்.அதில் கல்மண்டிபுரத்தைச் சேர்ந்த குமார்(27),மாதன்(30) மற்றும் மாருகுட்டி(40) ஆகியோரை விடுவித்தனர். அல்லபரத் தொட்டியைச் சேர்ந்த மா.மணிகண்டன்(18),ப.காளன்(28),
ஐடையன்(50),நாகமல்லன்(28),மாதேவன்(28),மூர்த்தி(45),ஆலமலை(40) மற்றும் கோடம்பள்ளியைச் சேர்ந்த பத்ரன்(30) ஆகியோரை கைது செய்தனர். இது குறித்து ஆசனூர் புலிகள் காப்பக இணை இயக்குநர் சி.ஹெச்.பத்மா செவ்வாய்க்கிழமை கூறியது: தாளவாடி வனப்பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை  விசாரித்து வருகிறோம். முதற்கட்ட விசாரணையி்ல், புலித் தோல்,நகங்கள் மற்றும் புலிகோரைப்பல் மற்றும் தந்தம் கடத்தல் போன்ற குற்றங்களில் தொடர்புடைய  8 பேரை கைது செய்துள்ளோம். அதே பகுதியைச் சேர்ந்த 3 பேரை விடுவித்துள்ளோம் என்றார்.
சத்தியமங்கலத்தில் மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.1800


சத்தியமங்கலம், நவ. 11–

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம், புதுக்குய்யனூர், புதுவடவள்ளி, பவானிசாகர், தாண்டாம்பாளையம், கெஞ்சனூர் போன்ற பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இங்கு உற்பத்தியாகும் பூக்கள் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு விவசாயிகள் மலர் உற்பத்தியாளர் சங்க மார்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற மாநகரங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

மேலும் ஆந்திரா, கேரளா, கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. சத்தியமங்கலம் மல்லிகைப் பூக்களுக்கு தனி மவுசு உள்ளது. தற்போது முகூர்த்த சீசன் தொடங்கி உள்ளதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

முன்பு ரூ.500–க்கு விலை போன ஒரு கிலோ மல்லிகைப்பூ சத்தியமங்கலம் மார்க்கெட்டில் ரூ.1800–க்கு விற்கப்பட்டது. மேலும் முல்லைப்பூ கிலோ ரூ.1000–க்கும், சம்பங்கி ரூ.200–க்கும், காக்கடா ரூ.1250–க்கும், செண்டு மல்லி ரூ.40–க்கும், பட்டுப்பூ ரூ.50க்கும் விற்பனை ஆனது.

சத்தியமங்கலம் பகுதியில் தற்போது கடும்பனிப் பொழிவு உள்ளது. இதனால் மல்லிகை செடியில் உள்ள அரும்புகள் சிறுத்து பூக்கள் உற்பத்தி குறைந்துவிட்டது. இந்த நேரத்தில் தேவையும் அதிகரித்து விட்டதால் பூக்களின் விலை உயர்ந்து விட்டதாக உற்பத்தியாளர் தலைமை சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.முத்துச்சாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொவித்தனர்.
பு.புளியம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய பணிகளை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு


பு.புளியம்பட்டி, நவ.11–
புஞ்சை புளியம்பட்டியில் புதிதாக பஸ் நிலைய கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த பணிகளை ஆய்வு செய்ய ஈரோடு மாவட்ட கலெக்டர் புளியம்பட்டி பகுதிக்கு சென்றார். பின்னர் பஸ் நிலைய கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது ஒரு மாத காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் பஸ் நிலைய பகுதியில் கோழி கழிவுகள் கொட்டி கிடக்கின்றன. அவ்வாறு கோழி கழிவுகளை கொட்டும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

பு.புளியம்பட்டி பகுதியில் நகராட்சி திருமண மண்டபத்தை சீரமைத்தல், சாக்கடைகள் சுத்தம் செய்தல், குடிநீர் வினியோகம் போன்ற பணிகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது புளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் செந்தில்வேல், நில வருவாய் ஆய்வாளர் தாமோதரன், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், பொறியாளர் சோமசுந்தரம், சுகாதார ஆய்வாளர் வீரபாகு, புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் உடன் சென்றனர்.

Friday, November 7, 2014

புன்செய் புளியம்பட்டியில் முதல் முறையாக குழந்தைகள் திரைப்பட விழா -  நவம்பர் 10 முதல் 16 வரை நடைபெறுகிறது.
**********************************************************************










புன்செய் புளியம்பட்டி நவம்பர் 9:
புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டியில் முதல்முறையாக குழந்தைகள் திரைப்பட விழா நடைபெற உள்ளது.

இதுகுறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறியிருப்பதாவது, புன்செய் புளியம்பட்டியில் முதல்முறையாக குழந்தைகள் திரைப்பட விழா  நவம்பர் 10 ஆம் தேதி துவங்கி 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்றைக்கு திரைப்படம் என்பது சக்தி வாய்ந்த ஊடகம். பேச்சு மொழியை காட்டிலும் காட்சி மொழி எளிதில் மனதில் பதியும். அந்த வகையில்  குழந்தைகளிடம் அன்பு, அஹிம்சை, மனிதநேயம், தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் ஆஸ்கார் விருது மற்றும்  உலக திரைப்பட விழாக்களில் பல விருதுகளை பெற்ற சிறந்த குழந்தைகள் திரைப்படங்களும், தமிழில் வெளியாகியுள்ள குழந்தைகளுக்கான குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன. புன்செய் புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள 20 இக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியில் ஒரு படம் வீதம் 7 நாட்கள் படங்கள்  திரையிடப்படும். 

குழந்தைகள் திரைப்பட விழா சில்ரன்ஸ் ஆப் யெவன் (chilrens of heavan), கலர் ஆப் பேரடைஸ் (color of paradise), ரெட் பலூன் (red balloon), தி சாங் ஆப் ஸ்பெரோஸ் (the song of sparrows), life of pie ஆகிய ஆங்கில திரைப்படங்களும், காந்தி, பாரதி, காமராஜர், சுவாமி விவேகானந்தர், பூங்கா, பூக்குட்டி, இப்படிக்கு பேராண்டி, கை, பாலிபேட்ஸ் ஆகிய தமிழ் திரைப்படங்களும் திரையிட பட உள்ளன.

நிறைவு விழா 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் புன்செய் புளியம்பட்டி சிந்தாமணி வித்யாலயா பள்ளியில் நடைபெறுகிறது. 15 ஆம் தேடி  காலை 10 மணிக்கு காந்தி  திரைப்படமும், மாலை 6 மணிக்கு பாரதி திரைப்படமும், 16 ஆம் தேதி காலை 10 மணிக்கு காமராஜர் திரைப்படமும், மாலை 6 மணிக்கு சுவாமி விவேகானந்தர் திரைப்படமும் திரையிட படுகிறது. இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் கலந்து கொள்ளலாம்.  மேலும் விபரங்களுக்கு எஸ்.ஜெயகாந்தன் - 98427 80240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆலை கழிவு நீரால் விவசாய நிலங்கள் பாதிப்பு: சத்தியமங்கலம் விவசாயிகள் வேதனை




சத்தியமங்கலம், நவ 7:
சத்தியமங்கலம் அருகே செண்டுமல்லி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

சத்தியமங்கலம் அடுத்த புதுவடவள்ளி கிராமத்தில் சத்தி மைசூர் சாலையில் தனியார் செண்டுமல்லி ஆலை இயங்கி வருகிறது. இங்கு செண்டுமல்லி பூவிலிருந்து விதைகள் பிரித்தெடுக்கப்பட்டு நாற்றுக்கள் உருவாக்கப்படுகின்றன. பூவில் இருந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கும் போது ரசாயணங்களை பயன்படுத்தி அதன் கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.  இந்த கழிவுநீர் அருகே உள்ள ஓடையில் கலக்கிறது.  இதனால் ஓடைநீர் கறுப்பு நிறமாக நுரை பொங்க துர்நாற்றத்துடன் ஓடுகிறது. விவசாய நிலங்களுக்கு இடையே செல்லும் ஓடைநீர் இறுதியில் அங்கு கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் சேர்கிறது. 

ரசாயண கழிவுகளால் நீண்ட நாள்களாக பாதிக்கப்பட்ட நிலத்தடி நீர்,தற்போது மழை பெய்துள்ளதால் அதன் தாக்கம் அதிகளவில் வெளியே தெரிகிறது.பெரும்பாலான  குடிநீர், விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் கழிவுநீர் கலந்து விவசாயம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனை தண்ணீரை குடிக்க கூடி முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இப்பகுதி விவசாயிகள்.

இந்த மாசுபட்ட நீரால் விவசாயப் பயிர்கள் கருகி விடுவதாகவும், நீரை குடிக்கும் கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன் காரணமாக  சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.  இது குறித்து புதுவடவள்ளி விவசாயி கிருஷ்ணராஜன் கூறியது:

புதுவடவள்ளி பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் ஆயிரம் ஏக்கரில் மல்லிகைப்பூ மற்றும் வாழை பயிரிட்டுள்ளனர். தடுப்பணையில் செண்டுமல்லிப்பூ கழிவுநீர் மட்டுமின்றி காகித ஆலைகழிவுநீர் கலப்பதால் பயிர்கள் கருகி வருகின்றன. குடிநீர் கிடைக்காததாலும், விவசாயம் செய்ய முடியாததாலும் மக்கள் பிழைப்பு தேடி வேறு கிராமங்களுக்கு இடம் பெயர்கின்றனர். ஆலையை சுற்றி 1 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் காற்று மாசுபட்டு மக்களுக்கு அலர்ஜி மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த ஓடையில் செல்லும் நீர் பவானி ஆற்றில் கலப்பதால் ஆற்று நீரும் மாசுபடுவதால்  இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


சத்தியமங்கலம் நகராட்சி மற்றும் அரிமா சங்கம் சார்பில் முழு சுகாதார தமிழகம் என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறார் சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம். உடன், நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) கே.இளங்கோவன், அரிமா சங்க செயலாளர் கே.பி.செல்வராஜ், சுகாதார அலுவலர் கே.சக்திவேல் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் டி.கே.ஈஸ்வரன் உள்ளிட்டோர் 
தாளவாடி:விஷம் வைத்து புலியை கொன்ற வழக்கில் இருவர் கைது

 

 
சத்தியமங்கலம்,நவ 7:
தாளவாடி அருகே தண்ணீர் குடிக்க வந்த புலிக்கு விஷம் வைத்து கொன்ற வழக்கில் இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் மற்றும் தாளவாடி வனத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் குடிக்க வரும் புள்ளி மான், யானை, புலி போன்ற வனவிலங்குகளுக்கு விஷம் வைத்து கொன்று அதன் இறைச்சி மற்றும் தந்தங்களை கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இதையடுத்து,  குற்றவாளிகளை பிடிக்க ஆசனூர் புலிகள் காப்பக இணை இயக்குர் பி.ஹெச். பத்மா, தாளவாடி வனச்சரக அலுவலர் உதயராஜ் மற்றும் வனப்பாதுகாப்பு படையினர் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

தாளவாடி வனத்தில் வனவிலங்குகளை வேட்டையாடிவிட்டு கர்நாடகத்துக்கு தப்பியோடும் மர்மநபர்கள் பற்றி வனத்துறையினர் தகவல் சேகரித்தனர். இந்நிலையில், தமிழக-கர்நாடக எல்லையான தாளவாடி கும்பாரகுண்டி என்ற இடத்தில் வனத்துறையினர் குற்றவாளிகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து அங்கு சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரித்துபோது மூக்கன்பாளையத்தைச் சேர்ந்த 
குமாரநாயக்(35) என்பதும் இவர் மீது பல்வேறு வனக்குற்ற வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. குமாரநாயக் அளித்த தகவலின்பேரில் அதே ஊரைச் சேர்ந்த பொம்மன்(40) என்பவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் எட்டேகவுண்டர்தொட்டி மற்றும் மூக்கம்பாளையம் வனத்தில் உள்ள நீர் நிலைகளில் யூரியாவுடன்  விஷத்தன்மையுள்ள பொருள்களை கலந்து விடுவதும் அதனை குடித்ததும் உயிரிழக்கும் புள்ளிமான் இறைச்சிகளை விற்பதும் யானைகளின் தந்தங்கள் மற்றும் புலி நகங்கள், தோல்களை கடத்துவதும்  போன்ற குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டது தெரியவந்தது. இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தாளவாடி அருகே புலிக்கு விஷம் வைத்து கொன்று அதன் நகங்கள்,தோலை கர்நாடகத்து கடத்தியதாக இவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பிடிப்பட இருவர் மீதும் வனவிலங்குகளை வேட்டையாடியது, சந்தன மரம் மற்றும் யானை தந்தம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தமிழகம் மற்றும் கர்நாடக நீதிமன்றத்தில் உள்ளது தெரியவந்தது. நீண்ட நாள்களாக தலைமறைவாக இருந்த இருவரையும் தாளவாடி வனத்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

Monday, November 3, 2014


செல்லப்பம்பாளையத்தில் 1 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணிகள் தீவிரம்



புன்செய் புளியம்பட்டியை  அடுத்துள்ள செல்லப்பம்பாளையத்தில் மிகவும் குறுகலான பாலம் உள்ளது. இங்கு தனியார் பள்ளி மற்றும் கல்லூரி அமைந்து உள்ளது. பாலம் குறுகலாக இருந்ததால் இங்கு அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்த வண்ணம் இருந்தது. புதிய பாலம் கட்டவேண்டும் என பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் அரசுக்கு  கோரிக்கை விடுத்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது நெடுஞ்சாலை துறை மூலம் சுமார் 1 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் பாலம் கட்டும் பணி முடியும் என பொதுபணிதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வந்தால் விபத்துகள் குறையும் எனவும் பாலம் கட்ட நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு  பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Saturday, November 1, 2014

வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்  லிங்கா திரைப்பட டீசர்








கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற 42 ஆவது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் புன்செய் புளியம்பட்டி எஸ்.ஆர்.சி.மெட்ரிக் பள்ளி மாணவிகள் பவித்ரா மற்றும் இலக்கியா இருவரும் சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்கள். மேலும் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிக்கு இருவரும் தேர்வு பெற்றுள்ளார்கள்.

சாதனை மாணவிகள் பவித்ரா & இலக்கியா இருவருக்கும் மற்றும் அவர்களை பெறுதும் ஊக்குவிக்கும் அவர்களது பெற்றோர்கள் திரு ராஜா சுரேந்திரன் - திருமதி ராதா ஆகியோருக்கும் விடியல் சமூகநல இயக்கம் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.