தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, December 31, 2013



புன்செய் குரல் வாசகர்கள் மற்றும் விடியல் நண்பர்களுக்கு இதயம் கனிந்த 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பிறந்திருக்கும் புத்தாண்டு நம் அனைவர்க்கும் இனிமையும் வளமும் சேர்க்கட்டும்.

என்றும் அன்புடன்
எஸ்.ஜெயகாந்தன்
விடியல் செயலாளர்
புன்செய் புளியம்பட்டி புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிமுதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்
*************************************************************************************************************

முதல்வர் ஜெயலலிதா காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய போது எடுத்த படம்

புன்செய் புளியம்பட்டி புதிய பஸ்நிலையம் கட்டுவதற்கான பணியை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

புன்செய் புளியம்பட்டி புதிய பஸ்நிலையம் கட்டுவதற்காக தமிழக அரசு  நிதியிலிருந்து ரூ.2 கோடி மானியமாக வழங்கியது. இதையடுத்து பஸ்நிலையம் அருகில் உள்ள சீரணி அரங்கத்தையும் இணைத்து புதிய விரிவாக்கப்பட்ட பஸ்நிலையம் கட்டுவதற்கான பணியை கோடநாட்டிலிருந்து  தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


பின்னர் புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், நகராட்சி கமிஷனர் செந்திவேல், பொறியாளர் லலிதாமணி, பவானிசாகர் ஒன்றியக்குழு தலைவர் வி. ஏ. பழனிச்சாமி, நகராட்சி துணைத்தலைவர் பாபு, நகர அண்ணா தி.மு.க செயலாளர் எம்.கே.ராஜேந்திரன்,  அண்ணா தி.மு.க நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைத்து 18 நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்குகொண்டு  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

எஸ்.ஆர்.செல்வம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய போது எடுத்த படம்
 புன்செய் புளியம்பட்டி புதிய பேருந்து நிலையம் கட்ட முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய போது எடுத்த படம். அருகில் பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி.ஏ.பழனிசாமி உள்பட அண்ணா தி.மு.கவினர் பலர் உடன் இருந்தனர்.
விவசாயிகள் பம்பு செட்  வைத்து தண்ணீர் எடுக்க முதலமைச்சரை சந்தித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்
- விவசாயிகளிடம் தா.பாண்டியன் பேச்சு

************************************************************

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன்  கிணறு மற்றும் விவசாய நிலங்களை பார்வையிட்டார்
பவானிசாகர் அருகே உள்ள வெள்ளியம்பாளையம்  கிராமத்தில் பவானி ஆற்றோரப்பகுதிகளில் பட்டாநிலங்களில் உள்ள கிணறுகளில் நீர் எடுத்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் நேரில் சந்தித்து கிணறு மற்றும் விவசாய நிலங்களை பார்வையிட்டார்.


தா.பாண்டியன் பேச்சு
 பின்னர் தா.பாண்டியன் விவசாயிகளிடம்  பேசியதாவது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றின் கரையோரங்களில் மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வந்தது. பைப்லைன் மூலம் கிணற்றுநீர் கொண்டு செல்வதற்கு அரசு அனுமதி அளிக்கப்பட்ட பின்புதான் இப்பகுதியில் உள்ள புஞ்சை நிலங்கள் நஞ்சையாக மாறியுள்ளது. இப்பகுதியில் கரும்பு, தென்னை, வாழை மற்றும் மல்லிகை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். இதனால் உணவு உற்பத்தி வெகுவாக அதிகரித்துள்ளது. கிணறு வெட்ட வருவாய்த்துறையும், அதற்கு வங்கிகள் கடனுதவியும், சுயநிதித்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பும் வழங்கியுள்ளது. மேலும் விவசாயிகள் பைப்லைன் பதித்தற்கான தண்டத்தீர்வையும் அரசுக்கு செலுத்தி வருகின்றனர். இவ்வாறு முழு அனுமதி பெற்று நீர் எடுத்து விவசாயம் செய்து வருபவர்களின் மின்இணைப்பை நீதிமன்ற உத்தரவை காட்டி  துண்டிப்பு செய்வது தவறாகும். நீதிமன்ற உத்தரவில் சட்டவிரோதமாக நீர் எடுத்தால் துண்டிப்பு செய்யலாம் என மட்டுமே கூறப்பட்டுள்ளது. எம்ஜிஆர் ஆட்சியில் வைகை நதியில் விவசாயிகள் பம்ப்செட் வைத்து தண்ணீர் எடுக்க அனுமதியும், அதற்கு அரசு மானியமும் வழங்கப்பட்டுள்ளது. கெயில் எரிவாயு பைப்லைன் விவகாரத்தில் தமிழக அரசு விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டது போல் இப்பிரச்சினையிலும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும். முதலமைச்சரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது இந்த விபரங்களை விளக்கி கூறி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் மின்இணைப்புகளை துண்டிப்பதை கைவிடவேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் எம்எல்ஏ சுந்தரம், வால்பாறை எம்எல்ஏ ஆறுமுகம், சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன், மாவட்ட துணைசெயலாளர் வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர்கள் பி.என்.ராஜேந்திரன், ஸ்டாலின் சிவக்குமார், மாநிலக்குழு உறுப்பினர் மோகன்குமார், தமிழ்நாடு மலர்கள் உற்பத்தியாளர்கள் தலைமைச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.முத்துச்சாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய சங்க பிரதிநிதிகள் டி.கே.சின்ராஜ், ரவி மற்றும் பவானிசாகர், சத்தியமங்கலம் சுற்று வட்டார விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Saturday, December 28, 2013

சீரணி அரங்கம் இடிப்பு

சீரணி அரங்கம் இடிப்பு

புன்செய் புளியம்பட்டியில்  புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிக்காக அண்ணா சீரணி கலைஅரங்கம் இடிக்கும் பணி நடைபெற்றது.
பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவு

 
58 அடியாக உள்ள அணையி்ன் நீர்ப்பிடிப்பு பகுதி

சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. தற்போதைய  நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 58 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1800 கனஅடியாகவும் அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 3150 கனஅடிநீரும் திறந்துவிடப்படுகிறது.

வாழைகள் சேதம்


காட்டுயானைகள் அட்டகாசத்தால் சேதமான வாழைகள்

சத்தியமங்கலம் அடுத்துள்ள விண்ணப்பப்பள்ளி நால்ரோட்டைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரின் தோட்டத்துக்குள் சனிக்கிழமை புகுந்த காட்டுயானைகள், அங்கு சாகுபடி செய்யப்பட்ட வாழைகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.குலைதள்ளிய நிலையில் நாசமடைந்த 300க்கும் மேற்பட்ட வாழைத்தார்களுடன் பாதிக்கப்பட்ட விவசாயி திருமூர்த்தி.
 மரம் நடும் விழா


மரம் நடும் விழா

சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் செல்வகணேசபுரம் கால்நடைச் சங்க வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மரம்நடும் விழாவில் மரக்கன்று நடுகிறார் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் எஸ்.முஸ்தபா.உடன், கால்நடை நலச்சங்க மேலாண்மைக் கூட்டுக்குழு உறுப்பினர் கே.வி.கோவிந்தராஜ்,தமிழக கால்நடை பராமரிப்பு 11வது ஐந்தாண்டு ஆராய்ச்சிக்குழு முன்னாள் உறுப்பினர் இரா.ரத்தினசாமி,முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் கே.ஜெகநாதன் உள்ளிட்டோர்.
பேருந்து விபத்து





விபத்துக்கு உள்ளன பேருந்து கிரேன் மூலம் மீட்கபட்ட போது எடுத்த படம்
புன்செய் புளியம்பட்டி அருகே மாதம்பாளையம் ஆதி திராவிடர் காலனி அருகே அரசு பேருந்து சாலையோரம் இறங்கியதால் ஓட்டுனர் ஜோதிபாசு உள்பட 7 பேர் காயமடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டெல்லியின் 7 வது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றார்

அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார்
புதுடில்லி: டில்லியில் 7 வது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நண்பகல் 12 மணிக்கு பதவியேற்றார். துணைநிலை ஆளுநர் நஜிப்ஜங் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஊழலை விரட்டுவோம் என்றும் இது எனது தனிப்பட்ட வெற்றி அல்ல என்றும் பதவியேற்க புறப்பட்டபோது கெஜ்ரிவால் குறிப்பிட்டார். பதவியேற்க கெஜ்ரிவால் மெட்ரோ ரயில் மூலம் புறப்பட்டு வந்தார்.
தகவல் உரிமை பெறும் சட்டம் மூலம் பல விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்தவரும், ஊழல் எதிர்ப்பு போரை துவங்கியவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சட்டசபை தேர்தலில் 28 இடங்களை பிடித்தது. 

தற்போது காங்கிரஸ் வெளியில் இருந்து தரும் ஆதரவை பெற்று இன்று மக்களின் கருத்துக்களை கேட்டு ஆட்சி அமைக்கிறார். இவருடன் 6 பேர் மணீஷ் சிசோடியா , சத்யேந்திரஜெயந்த், அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

ஊழல் களையப்படும்: முதல்வர் ; பதவியேற்றதும் விழா மேடையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில்: ஆம் ஆத்மியை தேர்வு செய்த டில்லி மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நேர்மையாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் என்பது நிரூபணமாகியுள்ளது. கடவுளுக்கும் , மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போதுதான் எங்களின் உண்மையான போராட்டம் துவங்கியிருக்கிறது. இன்று நானும் எம்.எல்ஏ.,க்களும் பொறுப்பேற்கவில்லை. மக்களும் என்னுடன் இணைந்து பதவியேற்றுள்ளனர். இந்த இடத்தில்தான் ஹசாரேயுடன் இணைந்து 2 ஆண்டுகளுக்கு முன் போராட்டத்தை துவக்கினேன். இது போன்ற புரட்சி நடக்கும் என கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. 

மக்கள் இல்லாமல் நாம் ஆட்சியை நடத்த முடியாது. அதிகாரிகள் , போலீசாரின் ஆட்சி இங்கு நடக்காது. மக்களை வைத்துதான் ஆட்சி நடத்துவோம். மின்கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படும். பார்லி., தேர்தலை எதிர்கொள்ள ஆம்ஆத்மி கட்சி தயாராக இருக்கிறது. அழுக்கு நிறைந்ததாக அரசியல் உள்ளது என அன்னா ஹசாரே கூறியுள்ளார். இந்த அழுக்கை நீக்கிட பாடுபடுவோம். எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள ஆம்ஆத்மி தயாராக உள்ளது. எந்தவொரு மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம். ஊழலை ஒழிக்க அயராது பாடுபடுவோம். ஊழல்வாதிகள் மீது கடும் நடடிக்கை எடுப்போம். பா.ஜ., தலைவர் ஹர்சவர்த்தன் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். நாட்டில் முழு சுதந்திரம் கிடைக்க பாடுபடுவோம். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

40 லோக்சபா தொகுதிகளில், அ.தி.மு.க., சார்பில், போட்டியிட விருப்பம் தெரிவித்து, 4,500 பேர் மனு  -  11 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் 


அ.தி.மு.க., தலைமை அலுவலகம் 

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட, 40 லோக்சபா தொகுதிகளில், அ.தி.மு.க., சார்பில், போட்டியிட விருப்பம் தெரிவித்து, 4,500 பேர் மனு கொடுத்துள்ளனர். விண்ணப்பப் படிவம் விற்பனை மூலம், 11 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி உள்ளது. இலக்கை தாண்டி, விண்ணப்பங்கள் விற்பனையானது, அ.தி.மு.க., நிர்வாகிகளிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லோக்சபா தேர்தல் தேதி, பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி விட்டது. 

முதல்வர் ஜெயலலிதா 
விருப்ப மனு:தமிழகத்தில், ஆளும் கடசியான அ.தி.மு.க., அனைத்து கட்சிகளையும் முந்திக்கொண்டு, கட்சி நிர்வாகிகளிடம், விருப்ப மனு வாங்கும் பணியை, முடித்து விட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட, 40 லோக்சபா தொகுதிகளிலும், அ.தி.மு.க., சார்பில், போட்டியிட விரும்புவோரிடமிருந்து, விருப்ப மனு வாங்கும் பணி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இம்மாதம், 19ம் தேதி துவங்கியது. தினமும், காலை, 10:00 மணியில் இருந்து, இரவு, 7:00 மணி வரை, மனுக்கள் விற்பனை செய்யப்பட்டன. அதேபோல், பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, தேர்தலை சந்திக்க, அ.தி.மு.க., முடிவு செய்திருப்பதால், அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் என அனைத்து தரப்பினரும்,முதல்வர் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும்' என, விருப்ப மனு கொடுத்தனர். அதேபோல், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தோரும்,முதல்வர் பெயரில் ஒரு மனு கொடுத்தனர். முதல் நாளே, 700க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.

இலக்கு:விண்ணப்ப கட்டணமாக, 25,000 ரூபாய் கொடுப்போருக்கு மட்டும், விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன. தொகுதிக்கு, 100 விண்ணப்பம் வீதம், 4,000 விண்ணப்பம் விற்பனை செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில், ஆயிரம் பேர், முதல்வர் பெயரில் விண்ணப்பம் கொடுப்பர் என, எதிர்பார்க்கப்பட்டது. நேற்று முன்தினம் வரை, 3,500க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்திருந்தனர்.விருப்ப மனு கொடுக்க, கடைசி நாளான நேற்று, மாநிலம் முழுவதுமிருந்து, ஏராளமானோர் மனு கொடுக்க, கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று, விண்ணப்பங்களை வாங்கி, பூர்த்தி செய்து கொடுத்தனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அமைச்சர் வளர்மதி வாங்கினார். காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, நேற்று பலர் மனுகொடுத்தனர். மாலை, 5:00 மணிக்கு, விண்ணப்பப் படிவம் விற்பனை, 4,500ஐ தாண்டியது. இதன் மூலம், 11.25 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இலக்கை தாண்டி, விருப்ப மனு விண்ணப்பங்கள் விற்பனையானது, கட்சி நிர்வாகிகளிடம், பலத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விண்ணப்பப் படிவம் விற்பனை, இலக்கை தாண்டியதால், விருப்ப மனு கொடுக்கும் தேதி நீட்டிக்கப்படவில்லை. மொத்தம் எத்தனை மனுக்கள் விற்பனையானது? வசூலானத் தொகை எவ்வளவு? முதல்வர் போட்டியிட விருப்பம் தெரிவித்து பெறப்பட்ட மனுக்கள் விவரம், ஆகியவற்றை, முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். 

Friday, December 27, 2013

புன்செய்ப்புளியம்பட்டி தற்காலிக பஸ்நிலையம்  இடமாற்றம்
புன்செய்ப் புளியம்பட்டி தற்காலிக பஸ் நிலையம்

புன்செய்ப் புளியம்பட்டி தற்காலிக பஸ் நிலையம்   இடமாற்றம் செய்யப் பட்டது.

புன்செய்புளியம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பேருந்து நிலையம் கடந்த 1993 ம் ஆண்டு கட்டப்பட்டது. கடந்த 5 ஆண்டுளாக பேருந்து நிலைய மேற்கூரை பலமுறை இடிந்து விழுந்ததால் பயணிகள் காயமடைந்தனர். இதனால்  பேருந்து  நிலையத்தை இடித்து புதியதாக பேருந்து நிலையம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த ஆண்டு பேருந்து நிலையத்தை இடிப்பதற்கான அனுமதி பெற்று தரைமட்டமாக்கப்பட்டது. இதையடுத்து, இதன் அருகில் உள்ள சீரணி அரங்கத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இதுவரை செயல்பட்டு வந்தது. புதிய பேருந்து நிலையம் கட்ட ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் இடிக்கப்பட்ட பேருந்து நிலையத்துடன் சீரணி அரங்கத்தையும் இணைத்து விரிவுபடுத்தப்பட்ட பேருந்து நிலையம் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தற்காலிக பேருந்து நிலையம் வாரசந்தை வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
தீர்த்தக்குடம்


தண்டுமாரியம்மன் கோயில் தீர்த்தக்குடம்

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தண்டுமாரியம்மன் கோயிலில் நடைபெறும் மாங்கல்ய பூஜை திருவிழாவை முன்னிட்டு  பவானி ஆற்றிலிருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பக்திப்பரவசத்துடன் தீர்த்தக்குடம் எடுத்துச் சென்றனர்.
எம்.ஜி.ஆர். நினைவு தினம்




எம்.ஜி.ஆர். நினைவு தினம்
எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் சத்தியமங்கலம் நகரமன்ற தலைவர் ஒ.எம்.சுப்ரமணியம் மற்றும் அ.தி.மு.க நகரமன்ற உறுப்பினர்கள்.
பெரியார் நினைவு தினம்
******************************

 

பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, ஆதிதமிழர் விடுதலை முன்னணி சார்பில் சத்தியமங்கலம் புதுவடவள்ளி சமத்துவபுரத்தில் தாலுகா செயலாளர் எஸ்.முத்துராஜ் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் தொண்டர்கள்.
கிடப்பில் போடப்பட்ட நீர்ப் பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்


கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

கிடப்பில் போடப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என சத்தியில் புதன்கிழமை இரவு நடந்த கொமதே கட்சியின் மாநாடு விளக்க கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தமிழக அரசை கேட்டுக்கொண்டார். 

சத்தியமங்கலம் அத்தாணி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மாநாடு விளக்க கூட்டத்திற்கு ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.முத்துசாமி தலைமை வகித்தார். சத்தி ஒன்றிய செயலாளர் எஸ்.பி.நடராஜன் வரவேற்றார். தலைமை நிலைய செயலாளர் சூரியமூர்த்தி, சென்னை மாவட்ட செயலாளர் இசைபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசியது: 
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்படுகிறது. கரும்பு டன்னுக்கு ரூ.3500 வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தோம். தற்போது ரூ.300 அதிகரித்துள்ளதாக அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பசும்பால் லிட்டருக்கு ரூ.30ம், எருமைப்பால் ரூ.40ம் வழங்க வலியுறுத்தினோம். ஆனால் லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் நீர் எடுத்து விவசாயம் செய்துவரும் விவசாயிகளின் மின்இணைப்பை துண்டிப்பது கண்டனத்திற்குரிய செயலாகும். தொடர்ந்து இப்பணி நடைபெற்றால் பெரும் போராட்டம் நடத்தப்படும். 

 
கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்கள்
கொங்கு நாட்டின் நீர்ப்பாசன திட்டங்களான அவினாசி- அத்திக்கடவு திட்டம், பாண்டியாறு- புன்னம்புழா திட்டம், ஆனைமலை-நல்லாறு திட்டம், திருமணிமுத்தாறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இத்திட்டங்களை நிறைவேற்று தமிழக அரசை இக்கட்சி வலியுறுத்தும். விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். டீசல் பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்தினால் கரும்பு டன் ஒன்றுக்கு ரு.5000 வழங்க முடியும். 

பெற்றோர் அனுமதியில்லாமல் பெண்களுக்கு 21 வயது முடியும் வரை நடைபெறும் திருமணங்களை அரசு அனுமதிக்கக்கூடாது. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கி பவுண்டரி, பனியன் மற்றும் விசைத்தறி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை காப்பாற்ற வேண்டும்.விவசாயகடன்கள் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் வரும் 29 ம் தேதி பெருமாநல்லூரில் நடைபெறும்  அரசியல் எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்படும். குறிப்பாக கவுண்டர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்றால் அனைவரும்  குடும்பத்துடன் தவறாது மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்றார். கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Wednesday, December 25, 2013

தமிழகத்தில் முதன்முறையாக கோணமூலை ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் விற்பனை துவக்க விழா 
சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம்  துவக்கி வைத்தார்
************************************************************

சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம்  துவக்கி வைத்தார்


தமிழகத்தில் முதன்முறையாக கோணமூலை ஊராட்சியில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர கேன் விற்பனையை சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் புதன்கிழமை துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோணமூலை ஊராட்சி காந்திநகரில் ரூ.3.10 லட்சம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் தினமும் 5 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சுத்திகரித்து அதை 20 லிட்டர் கேனில் நிரப்பி பொதுமக்கள் விற்பனை செய்யும் திட்ட துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.



தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் சுத்திகரிப்பு நிலைய எந்திரத்தை இயக்கி விழாவை  துவக்கி வைத்து  பேசியதாவது ஏழை மக்கள் பயன்பெறும் சுத்தி கரிக்கப்பட்ட  தண்ணீரை தயாரிக்கும் பணியில் கோண மூலை ஊராட்சி ஈடுபட்டுள்ளது பாராட்டுக் குரியது.  


தமிழகத்தில் முதன்முறையாக  பயன் பெறும் வகையில் கடம்பூர் மற்றும் ஒங்கல்வாடியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  திமுகவில் அரசுத் திட்டங்கள் நேரடியா மக்களுக்கு சென்றடைய வில்லை. முதல்வர் ஆட்சியில் அரசு திட்டங்களை பயனாளிகளுக்கு அமைச்சர்,ஆட்சியர், எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவர் உட்பட அனைவரும் நேரிடியாக மக்களை சந்தித்து வழங்கி வருகிறோம். முதல்வர் கொண்டு வந்த அம்மா திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோணமூலை ஊராட்சியில் ரூ.47 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்படுகிறது.இப்பகுதியில் 108 பேருக்கு நெசவாளர் பசுமை வீடு கட்டும் திட்டத்திற்கான வேலை உத்தரவுவழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அளவில் வரவேற்பு உள்ளதால்  வரும் 2023ல் முதல்வர் தான் இந்தியாவை ஆட்சி செய்வார் என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.கணேஷ், பவானிசாகர் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம், புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சதுமுகை ஆறுமுகம்,ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி,கோணமூலை ஊராட்சி அதிமுக செயலாளர் மணிகண்ட சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விலையில்லா மிக்ஸி,கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் விழா


விலையில்லா மிக்ஸி,கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் விழா

சத்தியமங்கலம் கோணமூலை ஊராட்சியில் நடைபெற்ற விலையில்லா மிக்ஸி,கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் விழாவில்  மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் எஸ்.ஆர்.செல்வம் வரவேற்றார்.கோணமூலை ஊராட்சித் தலைவி பத்மினிசண்முகம் முன்னிலை வகித்தார். இதில்  815 பேருக்கு விலையில்லா பொருள்களை வழங்கி அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் வழங்கினார்.
குடிநீர் பாதுகாப்பு குறித்து ஊராட்சித்தலைவர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் மாசுபாடு &  பாதுகாப்பு குறித்த பயிற்சி

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் மாசுபாடு குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், குடிநீர் வீணாவதை தடுக்கும் வழிமுறைகள் பற்றி ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
பவானிசாகர் ஒன்றியக்குழு தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கி கையேடுகள் வழங்கி  பயிற்சியினை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மா(வட்டார ஊராட்சி), லியாகத் அலி (கிராம ஊராட்சி) முன்னிலை வகித்தனர். பயிற்சியில் பங்கேற்ற ஊராட்சித்தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு கொடுமுடி சுரபி பவுண்டேசன் இயக்குனர் சுந்தரமூர்த்தி, பயிற்றுநர் சுரேஷ்குமார் ஆகியோர் குடிநீர் தரக்கட்டுப்பாடு மற்றும் சுகாதாரம் குறித்து பயிற்சியளித்தனர்.
பயிற்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் உதவி
செயற் பொறியாளர் மணிவண்ணன், உதவிப்பொறியாளர் சுந்தர்சிங்பால் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கண்ணன் நன்றி கூறினார்.
துண்டிக்கப்பட்ட கிணறுகளுக்கு மீண்டும் மின்இணைப்பு
தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி
********************************************************************

பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுபத்ரா களஆய்வு

பவானிசாகர் அணைப்பகுதியில் இருந்து பவானி கூடுதுறை வரை ஆற்றங்கரையோரம் கிணறு அமைத்து மின்மோட்டார் மூலம் விவசாயிகள் பாசனம் வசதி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக  மின்வாரிய அலுவலர்கள் பவானிசாகர், சத்தியமங்கலம் ஆற்றோர விவசாய கிணற்று மின்இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில நாள்களாக சத்தி, பவானிசாகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பொதுப்பணித்துறை, மின்வாரியம் அலுவலர்கள், காவல்துறை உதவியுடன் ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுக்க அனுமதி இல்லை எனக்கூறி சம்மந்தப்பட்ட 8க்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் துண்டித்தனர். ,பிரச்னைக்குரிய ஆற்று பைப்லைன் மற்றும் மோட்டார்களை விவசாயிகள் அகற்றினால் மீண்டும் இணைப்பு வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதையடுத்து, 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதை நிறுத்திவிட்டு, தண்ணீர் எடுக்கும் விவசாய உபகரணங்களை எடுத்துச் சென்றனர்.
ஆயினும், மின்வாரிய அலுவலர்கள் மின்இணைப்பு தராமல் தாமப்படுத்தினர்.இதைக் கண்டித்து, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்தனர். அங்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி விவசாயிகளை சமாதானப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பொதுப்பணித்துறையினர் ஆற்றில் நேரடியாக தண்ணீர் எடுக்காத விவசாய கிணறுகளை செவ்வாய்க்கிழமை களஆய்வு செய்தனர். உதவி செயற்பொறியாளர் சுபத்ரா ஆற்றில் நேரடியாக களஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்கியதை அடுத்து மின்வாரிய அலுவலர்கள் துண்டிக்கப்பட்ட 8 இணைப்புகளுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கினர். 

மீண்டும் மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
விவசாயிகளை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை:தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமி 
***************************************************************************************
 
 
தமிழக விவசாயிகள் கோரிக்கை
 
பம்ப்செட் மூலம் ஆற்றுநீர் உபயோகிக்கும் விவசாயிகளை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை சத்தியமங்கலத்தில் வெளியிட்ட அறிக்கையின் விபரம்:பவானி ஆற்றில் பல ஆண்டுகளாக அருகாமையில் உள்ள கிராம விவசாயிகள் பம்ப்செட் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த வாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆற்றுநீர் உபயோகிக்கும் பம்ப்செட் மின்இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். கர்நாடகாவிலும், கேரளாவிலும் ஆற்று நீரை பம்ப்செட் உபயோகித்து விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. கரூர், நாமக்கல் மாவட்டங்களில் காவிரி ஆற்று நீர் பம்ப்செட் மூலம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு பைப்லைன் பதித்து நீர் எடுத்து சென்று விவசாயம் செய்ய தமிக அரசு அனுமதி கொடுத்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுத்தால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் உள்ள பயிர்கள் காய்ந்துவிடும். பவானிசாகர் அணையில் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும், பம்ப்செட் பாசனத்திற்கும் தேவையான அளவு தண்ணீர் உள்ளது. கெயில் எரிவாயு பைப்லைன் பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு சாதகமான நிலை எடுத்தது. 

அதேபோல் நீதிமன்ற உத்தரவுப்படி பவானி நீர் பம்ப்செட் மின்இணைப்பை துண்டிப்பு செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் காப்பாற்ற தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறும், நீதிமன்றத்தில் தடையாணை பெற  கால அவகாசத்தை நீட்டித்து தருமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இதுசம்பந்தமாக இப்பகுதி விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு அளிக்குமெனவும், போராட்டத்தில் கலந்து கொள்ளுமெனவும், இது சம்பந்தமான தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக்கூட்டம் இவ்வார இறுதியில் சத்தியமங்கலத்தில் நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சத்தி புலிகள் காப்பக கணக்கெடுப்பில் அனைத்து வகை வனவிலங்குகள் எண்ணிக்கை உயர்வு 
************************************************************************************************************

சத்தியமங்கலம் வனத்தில் தென்பட்ட எறும்புதின்னி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பில் அனைத்து வகையான  விலங்குகளின் எண்ணிகை சராசரியாக உயர்ந்துள்ளது என்றும் கணக்கெடுப்பு பணி திருப்திகரமாக இருந்ததாக புலிகள் காப்பக இணை இயக்குநர் கே.ராஜ்குமார்  தெரிவித்தார்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சத்தியமங்கலம், டி.என்.பாளையம், பவானிசாகர், தலமலை வனச்சரகங்களிலும், ஆசனூர் வனக்கோட்டத்திற் குட்பட்ட ஆசனூர், கேர்மாளம், தாளவாடி வனச்சரகங்களில் வனவிலங்குகள் குறித்த கணக்கெடுப்புப் பணி டிச.17 முதல் டிச 22 வரை நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட வனஉயிரினங்கள் விபரங்கள் குறித்து சத்தி புலிகள் காப்பக இணை இயக்குநர் கே.ராஜ்குமார்  கூறியது:

சிக்கரசம்பாளையம், புளியம்கோம்பை, பண்ணாரி, சீரங்கராயன்கரடு, கேர்மாளம், தலமலை,  எக்கத்தூர், ஜீரஹள்ளி,நெய்தாளபுரம், தட்டவாடி, ராமர்அணை உள்ளிட்ட 48 இடங்களில் நடைபெற்ற கணக்கெடுப்பில் 150 பேர் கலந்துகொண்டனர். வன அலுவலர்களுடன் இணைந்து பணியாற்றிய  தன்னார்வ தொண்டர்கள் மற்றும் வனக்கல்லூரி மாணவர்கள் வனத்தை முழுமையாக புரிந்து கொண்டு அதன் சூழலுக்கேற்ப கணக்கெடுப்பை மேற்கொண்டு பதிவு செய்தனர். நுண்ணிய உயிர்வாழ்வன மற்றும் பல்வேறு வகையான மரம், செடி, கொடி தாவரங்கள் வளர்ச்சி மற்றும் தாவர உண்ணிகள் பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் கணக்கெடுப்பு பணி திருப்திகரமாக உள்ளது.ஆசனூர், தலமலை, கேர்மாளம், பண்ணாரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் புலி, சிறுத்தை, கரடி,கழுதைப்புலி, செந்நாய் போன்ற விலங்குகளின் எச்சம், கால்தடம் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சத்தி புலிகள் காப்பகத்தில் இறப்பை விட அதன் பரிமாண வளர்ச்சியை காட்டுகிறது.
வனகுட்டையில் இரைக்காக காத்திருக்கும் மலைபாம்பு
சராசரியாக அனைத்து வகை விலங்குகளின் இனப்பெருக்கும் இரு மடங்காக உயர்ந்து இறப்பு விகிதம் குறைந்தும் உள்ளது. குறிப்பாக, யானைகள், புள்ளிமானங்கள், காடெருமைகள் வளர்ச்சி அபரிதமாக உள்ளன. 

செந்நாய்களிடமிருந்து தனது வேட்டை இரையை காப்பாற்ற மரத்தில் உச்சியில் மானை உடலை வைத்து சிறுத்தை சாப்பிட்டது தெரியவந்துள்ளது. 

தட்டவாடி என்ற இடத்தில் கணக்கெடுப்பாளர்கள் யானை துரத்தியதால் அவர்கள் சமயோசிதமாக  செயல்பட்டு  தப்பியோடினர். சத்தி வனத்தில் மழையளவு கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. வரும் கோடைகாலத்தை சமாளிப்பது பற்றி ஜனவரி முதல் முதற்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இங்கு சேகரிக்கப்பட்ட  அனைத்து விபரங்களை பிரத்தியேகமாக தயாரிக்கபட்ட மென்பொருளில் பதிவுசெய்து தேசிய வன உயிரின ஆராய்சி நிலையத்துக்கு அனுப்பப்படும். அவர்களும் சில இடங்களில் மாதிரி கணக்கெடுப்பு நடத்தி இறுதியாக வனவிலங்குகள் பற்றி புள்ளிவிபரங்களை அரசுக்கு அனுப்பி வைப்பார்கள் என்றார்.





மண்டல மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் அம்மா மெட்ரிக் பள்ளி சாதனை
********************************************************************************************************

விளையாட்டில் சாதனை படைத்த மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு

புன்செய் புளியம்பட்டி அம்மா மெட்ரிக் பள்ளி மாணவ மாணவியர்கள் சமீபத்தில் நடைபெற்ற மண்டல மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்று சாதனை பிடித்துள்ளனர்.
இளையோர் பிரிவிற்கான எறிபந்து போட்டியில் இரண்டாமிடம் பெற்ற மாணவர்கள்

மூத்தோர் பிரிவிற்கான வளைகோல் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த மாணவிகள் 



சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பிடித்த மாணவிகள் ராகவி, சுபாஷினி
மூத்தோர் பிரிவு கேரம் போட்டியில் ரெட்டையர் பிரிவில் இரண்டாமிடம் பெற்றுள்ள மாணவிகள் கனிஷ்கா, யமுனாதேவி, காருண்யா

மாணவியருக்கான  இளையோர் மற்றும் மூத்தோர் கேரம் போட்டியில் இரண்டாம் பிடித்துள்ளனர். அதேபோல் மாநில அளவிலான கேரம் போட்டியில் அம்மா மெட்ரிக் பள்ளி மாணவியர்கள் 4 பேர் மாவட்ட அளவில் இடம் பிடித்துள்ளனர். ஈரோடு மாவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் முதலிடம் மற்றும் இளையோருக்கான எறிபந்து போட்டியில் இரண்டாமிடம் பிடித்துள்ளனர். மாணவியருக்கான வளைகோல் போட்டியில் மூத்தோர் பிரிவில் இரண்டாமிடம் பிடித்தனர். மாணவியருக்கான சதுரங்க போட்டியில் இளையோர் பிரிவில் இரண்டாமிடமும், மூத்தோர் பிரிவில் மூன்றாமிடமும் பிடித்தனர்.


பல்வேறு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களை அம்மா மெட்ரிக் பள்ளியின் நிர்வாக இயக்குனரும், புளியம்பட்டி நகராட்சி தலைவருமான பி.எஸ்.அன்பு, பள்ளி தாளாளர் சம்பூர்ணம் சாமிநாதன், செயலாளர் எ.ராணி லக்ஷ்மி அன்பு, உடல்கல்வி ஆசிரியர் வரதராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் பாராட்டினர்.

Tuesday, December 24, 2013


புன்செய் புளியம்பட்டியில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நிதிஉதவி - தமிழக ஆசிரியர் கூட்டணி வழங்கியது.
******************************************************************************************************

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் சுதர்சனுக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி ரூபாய் 35000 நிதிஉதவி வழங்கிய போது எடுத்த படம்

      புன்செய் புளியம்பட்டியில்  தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் சுதர்சனுக்கு  தமிழக ஆசிரியர் கூட்டணி பவானிசாகர் கிளை சார்பாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நிதிஉதவி வழங்கப்பட்டது.

       அவினாசி அருகே உள்ள பிச்சண்டம் பாளையத்தை சார்ந்தவர் ராஜேந்திரன். அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சுதர்சன். வயது 4. இவருக்கு தலசீமியா எனப்படும் கடுமையான ரத்த சோகை நோய் உள்ளது கண்டறியப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள 30 லட்சம் வரை செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் விவசாய கூலி வேளைக்கு சென்று வரும் குடும்ப பின்னணியில் உள்ள ஆசிரியர் ராஜேந்திரன் தனது மகனுக்கு உதவுமாறு சக ஆசிரியர்களுக்கும், சமூகநல அமைப்புகளுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

        இந்நிலையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் சுதர்சனுக்கு உதவ தமிழக ஆசிரியர் கூட்டணியின் பவானிசாகர் கிளை முன்வந்தது. இதனை அடுத்து புன்செய் புளியம்பட்டியில் மருத்துவ சிகிச்சைக்கு நிதிஉதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பவானிசாகர் கிளை தலைவர் மார்கரேட் சில்வியா தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முத்து, கிளை பொருளாளர் அருள்முருகன், மாவட்ட துணை தலைவர் வாசுகி, வட்டார துணை தலைவர் ரமாதேவி, வட்டார துணை செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     தமிழக ஆசிரியர் கூட்டணி பொருளாளர் ஜெரோம் கலந்து கொண்டு ரூபாய் 35000 நிதிஉதவி தொகையினை சுதர்சனனின் தந்தை ராஜேந்திரன் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் லோகநாதன், ரமேஷ், குமாரசாமி உள்பட பலர் பங்கு கொண்டனர்.

     தலசீமியா நோயினால் பதிக்கப்பட்ட சிறுவன் சுதர்சனுக்கு உதவு விரும்பும் நல்ல உள்ளங்கள் சுதர்சன் மறுவாழ்வு குழு தொலைபேசி எண் 9443762212, 9865070649 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


கூட்டுறவு வங்கி புதிய தலைவர் தேர்வு


பி.ஜி. 1 நொச்சிக்குட்டை  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி புதிய தலைவராக சி.சக்திவேல் அவர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் புன்செய் புளியம்பட்டி நகர அ.தி.மு.க செயலாளர் எம்.கே.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
திருவாதிரை திருவிழா

திருவீதி உலா

புன்செய் புளியம்பட்டி அண்ணாமலையார் திருகோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு நடராஜர் திருவீதி உலா நடைபெற்றது.




திருவாசக கும்மி

பெண் அடியார்கள் திருவாசக கும்மி அடித்து  திருவீதி உலாவில் கலந்து கொண்டனர்.
பெரியபுராணம் நாடகம்


 புன்செய் புளியம்பட்டி அண்ணாமலையார் திருகோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு 63 நாயன்மார்களில் இருவரான திருக்குறிப்பு தொண்டர் மற்றும் திருநாளைபோவார்(நந்தனார்) குறித்த வரலாற்று நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு நாடகத்தை கண்டுகளித்தனர்.
 "சொல்வேந்தர்" சுகிசிவம்



கோவையில் நடைபெற்ற வெற்றிவாசல் நிகழ்ச்சிக்கு வருகை தந்த பட்டிமன்ற நடுவர், பேச்சாளர் "சொல்வேந்தர்" சுகிசிவம் அவர்களுடன் விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன்
 பர்வின் சுல்தானா



கோவையில் நடைபெற்ற வெற்றிவாசல் நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரபல பேச்சாளர் பேராசிரியை பர்வின் சுல்தானா அவர்களுடன் விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன்

Monday, December 23, 2013

 எழுத்தாளர் பாமரன்

மரண தண்டனைக்கு எதிராக கருத்தரங்கம் கோவை குஜராத்தி சமாஜ் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எழுத்தாளர் பாமரன் அவர்களுடன் விடியல் சமூகநல செயலாளர் எஸ்.ஜெயகாந்தன்
திரைப்பட இயக்குனர் ராம்


மரண தண்டனைக்கு எதிராக கருத்தரங்கம் கோவை குஜராத்தி சமாஜ் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கற்றது தமிழ், தங்கமீன்கள் திரைப்பட இயக்குனர் ராம் அவர்களுடன் விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன்
சகாயம் IAS அவர்களுடன் விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன்



 நாட்டில் எத்தனையோ அதிகாரிகள் இருக்கிறார்கள் ஆனால் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக சில அதிகாரிகள்தான் இருக்கிறார்கள் அவர்களில் முதன்மையானவராக தெரிபவர் சகாயம்தான். காரணம் மிகவும் எளிது., லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வார்த்தையின் வடிவமாக நேர்மைக்கு மிகவும் நெருக்கமானவராக துணிவுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவராக நியாயத்தின் பக்கமே எப்போது நிற்பவராக உண்மையைச் சொல்ல தயங்காதவராக பொய்யான புகழுக்கு மயங்காதவராக தவறுக்கு எப்போதும் துணை போகாதவாரக இருப்பவர் இன்றைய தேதிக்கு இவர் ஒருவர்தான் நீண்ட தொலைவிற்கு தட்டுப்படுகிறார்.

கோ- ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக தற்போது இருந்துவரும் சகாயம் அவர்கள் கோவையில் நடைபெற்ற வெற்றிவாசல் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். அப்போது அவருடன் இருந்த மகிழ்ச்சியான தருணங்கள் மாறாக இயலாது.

Sunday, December 22, 2013

புன்செய் புளியம்பட்டி அருகே மானாவாரி நிலங்களில் நெல் சாகுபடி
நல்லூர் குளத்தையொட்டியுள்ள விளைநிலங்களில் நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயத் தொழிலாளர்கள்

புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள நல்லூர் குளத்தையொட்டியுள்ள விளைநிலங்களில் நெல் நடவுப் பணி நடந்து வருகிறது.

சத்தியை அடுத்துள்ள புன்செய் புளியம்பட்டி பகுதியில் மானாவாரி நிலங்கள் அதிகமாக உள்ளன.வறட்சியான பகுதி என்பதால் நிலக்கடலை, தீவனசோளம் போன்ற பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் பயிரிடுகின்றனர். 

கடந்த சில  மாதங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் நல்லூர், புங்கம்பள்ளி ஆகிய குளங்கள் நிரம்பி வழிந்தன. குளத்தில் வெளியேரும் கசிவுநீர் அதனையொட்டியுள்ள விளைநிலங்களுக்கு சென்று நீர்ஊற்றாக மாறியுள்ளன. இதுதவிர, அப்பகுதி கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதுவரை, மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வந்த விவசாயிகள், இந்த நீர்வரத்தால் 100 க்கும் நிலங்களில் நெல் சாகுபடிக்கு தயாராகி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, நல்லூர் குளத்தையொட்டியுள்ள பகுதியில் தற்போது நடவுப் பணி நடந்து வருகிறது.

நீர் நிறைந்து காணப்படும் நல்லூர் குளம்
இது குறித்து நல்லூர் விவசாயி தங்கராஜ் கூறியது: 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நல்லூர் குளம் நிரம்பியுள்ளது. குளத்தில் இருந்து வீணாக வெளியேறும் கசிவுநீரைக் பயன்படுத்தி  நெல் நாற்றாங்கால் தயார் செய்து தற்போது நடவுப்பணி நடைபெற்று வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன் குளத்தில் நீர்நிறைந்தபோது ஒரே தடவை நெல் பயிரிட்டோம். அதன்பிறகு இப்போதுதான் வறட்சி பகுதியான எங்களது நிலத்திலும் நெல் பயிபிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.இந்த நீரை பயன்படுத்தி சிக்கனமாக நீர்ப்பாசனம் செய்தால் ஓராண்டு வரை தொடர்ந்து விவசாயம் செய்யமுடியும்  என்றார்.
புன்செய் புளியம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம்
மோதி புள்ளிமான் சாவு.
-------------------------------------------------------------------------------------------------------------
புன்செய் புளியம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் இறந்தது.

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி  அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. இங்குள்ள மான்கள் தண்ணீரை தேடி அடிக்கடி காட்டுப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன. அவ்வாறு வரும் மான்கள் வனப்பகுதி ஓரம் உள்ள புன்செய் புளியம்பட்டி  –சத்தி நெடுஞ்சாலை, பவானிசாகர்–மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது வாகனத்தில் அடிபட்டு இறந்து விடுவது வழக்கமாகி விட்டது.
இந்தநிலையில், புன்செய் புளியம்பட்டி –சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்கள். தகவல் கிடைத்ததும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மானின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், இறந்து கிடந்தது 4 வயதுடைய பெண் புள்ளிமான் என்றும், விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இந்த புள்ளிமான், ரோட்டை கடக்க முயன்று உள்ளது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு, இறந்த மானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது.

Friday, December 20, 2013

புன்செய் புளியம்பட்டியில் ஐயப்பன் ஊர்வலம்



புன்செய் புளியம்பட்டி அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவில் சார்பில் ஸ்ரீ தர்மசாஸ்தா உற்சவமூர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. டானாபுதூர் ஸ்ரீ கரிவரதராஜா பெருமாள் திருகோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு கோவை மெயின் ரோடு, மாதம்பாளையம் ரோடு, சுல்தான் ரோடு, சத்தி சாலை வழியாக ஸ்ரீ தர்மசாஸ்தா திருகோவிலை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புன்செய் புளியம்பட்டியில் ஆக்ரமிப்புகள் அகற்றம்!
***********************************************************

கோபி சப் கலெக்டர் சந்திரசேகர சாகமூரி அவர்களின் அதிரடி நடவடிக்கை காரணமாக கடந்த சில நாட்களாக கோபி, பவானி, சத்தியமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலை ஓரங்களில் அமைந்துள்ள வீடு மற்றும் கடைகளுக்கு முன் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி நெடுஞ்சாலை துறை சார்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக புன்செய் புளியம்பட்டி சுல்தான் ரோடு, சத்தி ரோடு, மாதம்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் ஆக்ரமிப்பு பகுதிகளை நேற்று நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.
நான் பிரதமர் வேட்பாளர் என்பது அதிமுகவினரின் விருப்பம்: ஜெயலலிதா பேட்டி
*********************************************************************************

அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்த பிறகு மண்டபத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:
கேள்வி: வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா? 
பதில்: கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். அதற்கான அதிகாரத்தை கட்சி எனக்கு வழங்கியுள்ளது. 
கேள்வி: - உங்களை பிரதமர் வேட்பாளர் என்று சொல்லுகிறார்களே?
 பதில்: அது எங்களது கட்சியினரின் விருப்பம். அதை பற்றி நான் இப்போது சொல்வதற்கு இல்லை. 
கேள்வி: வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.வின் தேர்தல் முழக்கம் என்னவாக இருக்கும்? 
 பதில்:- அமைதி, வளம், வளர்ச்சி இது எங்கள் தேர்தல் கோரிக்கையாக இருக்கும். இவ்வாறு செய்தியாளர்களிடம் ஜெயலலிதா கூறினார்.

புஞ்சைபுளியம்பட்டி  பகுதியில் புகையிலை சாகுபடி தீவிரம்
 

புஞ்சைபுளியம்பட்டி வட்டார பகுதியில் புகையிலை சாகுபடி பணியில் 
விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

நடப்பாண்டு பருவமழை பொய்த்ததால் வறட்சியில் சிக்கி தவிக்கும்  புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயப்பணி முடங்கியது.  இதற்கிடையே, காற்றழத்த தாழ்வு நிலை காரணமாக த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழை காரணமாக புளியம்பட்டி  வட்டார பகுதியில் உள்ள நல்லூர், புங்கம்பள்ளி, நொச்சிக்குட்டை குளங்களும், சிறு தடுப்பணைகளும் நிரம்பின. இதைத் தொடர்ந்து, கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் பயிர் சாகுபடி பணிக்கு நிலங்களை உழுது தயார்படுத்தினர். 

குறிப்பாக, இப்பகுதி விவசாயிகள் புகையிலை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாற்றாங்கால் தயார் செய்து விதைகள் தூவி நாற்றுக்கள் பக்குவமாக வளர்க்கப்பட்டு 60 நாட்கள் ஆனவுடன் அவை  பறிக்கப்பட்டு பின்னர் உழுது தயார் செய்யப்பட்டுள்ள நிலத்தில் பாத்திகள் அமைத்து 2 க்கு 2 அடி இடைவெளியில் நடவு செய்து  நீர்பாய்ச்சினர்.

 தற்போது நாற்றுக்கள்  நன்றாக செழித்து வளர்ந்துள்ளன. புகையிலை பயிரில் வாய்க்கால் ஓரங்களில் ஊடுபயிராக சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளது. 120 நாள் பயிரான புகையிலை பயிருக்கு களைவெட்டுதல், சிம்பு எடுத்தல் போன்ற பணிகளை செய்து நல்ல முறையில் பராமரித்தால் போதுமான லாபம் ஈட்ட முடியும் என பனையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பைய்யன் தெரிவித்தார்.