தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, September 29, 2015

சத்தியில் அரசு கலைக் கல்லூரி அறிவிப்பு:  அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
 
 

சத்தியமங்கலம்,செப் 29:
சத்தியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்ததையடுத்து சத்தியில் அதிமுவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்.

சத்தியமங்கலம் பகுதியில்  பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகமாக வசிப்பதால் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் சத்தியமங்கலத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என முதலவர் அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்து ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் தலைமையில் அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ஊர்வலமாக சென்று சத்தி-கோவை சாலையில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். இதில் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் சி.என்.மாரப்பன், வி.ஏ.பழனிச்சாமி, வி.சி. வரதராஜ், சத்தி இந்திய கம்யூ கட்சி தாலுக்கா செயலாளர் ஸ்டாலின் சிவக்குமார், சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், அரியப்பம்பாளையம் பேரூராட்சித் தலைவர் எம்.பி,துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Friday, September 25, 2015

ஒதிமலை முருகன் கோவில் மலைப்பாதையை சுற்றி சாலை வசதி செய்ய பக்தர்கள் கோரிக்கை - மேலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுகோள் 




புன்செய் புளியம்பட்டி செப்டம்பர் 25 : புன்செய் புளியம்பட்டியை அடுத்துள்ள ஒதிமலை முருகன் கோவில் மலைப்பாதையை சுற்றிலும் சாலை வசதி செய்யவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புன்செய் புளியம்பட்டியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் இரும்பறை அருகே ஒதிமலை அமைந்துள்ளது. சுமார் 5 ஹெக்டேர் பரப்பளவில் ஒதிமலை பரந்து விரிந்து காணபடுகிறது. ஒதிமலையை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயம், ஆடு - மாடு மேய்ச்சல் நடைபெறுகிறது. ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் 5 முகம், 8 கரம் கொண்ட ஸ்ரீ முருகபெருமான் வீற்றுள்ளார். ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது.

படைப்புக்கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு, முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். அவர் தெரியாது நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது. படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார்.

இந்த அமைப்பு ஆதிபிரம்ம சொரூபம்' எனப்பட்டது. முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறக்கவே, பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார்.



சுவாமிமலை தலத்தில் சிவனுக்கு பிரணவத்தின் விளக்கம் சொன்ன முருகன், இந்த ஓதி மலை தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் ஓதிமலை' என்றும், சுவாமிக்கு ஓதிமலை முருகன்' என்ற பெயரும் ஏற்பட்டது.


ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன. இங்கு மொத்தம் 1800 இக்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ளது. பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்கு உள்ளிட்ட விலங்குகளும், பல வண்ண பறவைகளும் உள்ளன. இது சித்தர்கள் வாழ்ந்து வரும், தவமிருக்கும் மலையாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒதிமலைக்கு புன்செய் புளியம்பட்டி, சத்தியமங்கலம் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சிங்கபூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினமும் வருகிறார்கள்.





இங்கு திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் மற்றும் முக்கிய விசேச தினங்களில் அர்ச்சகர் கோவிலுக்கு வருகை தருகிறார். அதேபோல் ஒவ்வொரு அமாவாசை, சஷ்டி, கிருத்திகை நாட்களில் இங்கு விசேச பூஜை நடைபெறுகிறது. பல்வேறு சிறப்பு மிக்க இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எனவே ஒதிமலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என பக்தர்கள் கூறி உள்ளனர். குறிப்பாக மலையேறும் பக்தர்களுக்கு ஆங்காங்கே குடிநீர், நிழல்குடை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஞாயற்றுகிழமைதோறும் அதிகளவு பக்தர்கள் இங்கு வருகின்றனர். ஆனால் அர்ச்சகர் வருவதில்லை. சுமார் 1800 படிக்கட்டுகள் ஏறிய பின்பு அர்ச்சகர் இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். எனவே ஞாயற்றுகிழமைதோறும் கோவிலை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகளவு பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் கோவிலுக்கு வருவதால் மலைபாதையை சுற்றி சாலை அமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புன்செய் புளியம்பட்டியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஐம்பெரும் விழா 


புன்செய் புளியம்பட்டி செப்டம்பர் 25: தமிழக ஆசிரியர் கூட்டணி பவானிசாகர் கிளையின் ஐம்பெரும்விழா புன்செய் புளியம்பட்டி ராஜ்மகாலில் நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு வட்டார தலைவர் ஜான் பாஸ்கோ தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் இரா.முத்து வரவேற்றார். வட்டார மகளிர் அணி செயலாளர் கிறிஸ்டி இயக்க உறுதிமொழியை வாசித்தார். வட்டார துணை தலைவர் ராஜ்குமார் அறிக்கை வாசித்தார். வட்டார பொருளாளர் அருள்முருகன் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். 

இந்நிகழ்ச்சியில் ஐபெட்டொவின் அகில இந்திய செயலாளராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள வா.அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க பட்டது. அதே போல் பணிநிறைவு பெற்ற ஆசிரியர்கள் புஷ்பவதி, வேலுமணி, முத்துராஜ், ராமசாமி, குமாரசாமி, காளியண்ணன், நாகரத்தினம் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்க பட்டது. அதேபோல் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நேருநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி ஆசிரியர் ஜான் பாஸ்கோ அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி பவானிசாகர் கிளையின் சார்பில் நடைபெற்ற பல்வேறு சமுக பணிகள் குறித்தும், வரும் ஆண்டுகளில் செய்யவேண்டிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்க பட்டது. பாராட்டு பெற்ற அனைத்து ஆசிரியர்களும் ஏற்புரை வழங்கினார்கள்.

இவ்விழாவில் மாநில பொறுப்பாளர்கள் வின்சென்ட் பால்ராஜ், கோ.முருகேசன், நம்பிராஜ், ராமதாசு, எழிலரசன், முனியாண்டி, செந்தில்குமார், துரை பாலகிருஷ்ணன், ராஜசேகரன், மார்க்கரேட் சில்வியா , ஜெரோம், சரவணன், வேலுசாமி, பழனிசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிறைவில் வட்டார துணை தலைவர் ரமாதேவி நன்றி கூறினார்.

Monday, September 21, 2015

திம்பம்-ஆசனூர் சாலையில் யானைகள் உலா
 

 

சத்தியமங்கலம்,செப் 21:
திம்பம்-ஆசனூர் சாலையில் குட்டியுடன் யானைகள் உலாவுவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்,  ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. திம்பம் முதல் தாளவாடி எல்லை வரை 25 கிமீ தூரம் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த வழித்தடத்தில் தமிழகம் கர்நாடக வாகனங்கள் 24 மணி நேரமும்  பயணிக்கின்றன. இங்குள்ள யானைகள் தீவனம் மற்றும் குடிநீர் தேவைக்காக இடம் பெயரும் போது குறுக்கே செல்லும் சாலையை கடந்து செல்கின்றன. ஓரிரு யானைகள் சாலையோரம் நின்றுகொண்டிருப்பதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. 

இந்நிலையில், தாளவாடியைச் சேர்ந்த கேஜிஆர் பிரகாஷ், சம்பத் ஆகியோர் காரில் திங்கள்கிழமை சத்தி நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆசனூர் சாலையில் குட்டியுடன் நின்றுகொண்டிருந்த யானையை பார்த்து காரை நிறுத்தினர். அந்த யானை சாலையை விட்டு நகராமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. யானை சாலையோரமாக நிற்கும்நேரத்தை பயன்படுத்தி பிரகாஷ் காரை வேகமாக ஓட்டியபோது யானை அவர்களை துரத்தியது. இதனால் பின்தொடர்ந்து வந்த வாகனங்கள் நீண்ட நேரமாக காத்திருந்தன. யானைகள் அடிக்கடி சாலையில் நிற்பதால் வாகனப்போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் வனத்துறை சார்பில்  அதிவிரைவு படை ஏற்படுத்தி வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புன்செய் புளியம்பட்டியில் சர்வதேச அமைதி தினம்


 புன்செய் புளியம்பட்டி செப்டம்பர் 21: புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் சர்வதேச அமைதி தின விழாவை முன்னிட்டு நேரு நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவ மாணவியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ, விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட சுமார் 500 பேர் பங்கேற்றனர்.

Saturday, September 19, 2015

சத்தியமங்கலத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்
 



 

சத்தியமங்கலம்,செப் 19:
சத்தியமங்கலம் இந்து முன்னணி சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஊர்வலத்தில் 90 விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டு அங்குள்ள பவானிஆற்றில் கரைக்கப்பட்டன. 

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சத்தியமங்கலம் நகர்ப்பகுதி, கொத்துக்காடு, அரியப்பம்பாளையம்,இண்டியம்பாளை
யம், தாசம்பாளையம், பவானிசாகர், பகுத்தம்பாளையம்,உப்புப்பள்ளம், புன்செய் புளியம்பட்டி, கணபதிபாளையம் மற்றும் சாணார்பதி ஆகிய இடங்களில் இந்துமுன்னணி சார்பில் 90   விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, சத்தியில் விநாயகர் சிலை ஊர்வலம்  சனிக்கிழமை நடைபெற்றது.  எஸ்.ஆர்.டி கார்னரில் துவங்கிய  விநாயகர் சிலை ஊர்வலத்தை ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இந்த ஊர்வலம் மைசூர் சாலை, ஆற்றுப்பாலம், கோட்டுவீராம்பாளையம், கடைவீதி, பெரியபள்ளிவாசல் வீதி, சத்யா தியேட்டர், திப்புசுல்தான் சாலை வழியாக பவானிஆற்றை சென்றடைந்தது.  அங்கு இந்து முன்னணியினர் விநாயாகர் சிலைகளு்க்கு சிறப்பு பூஜைகள் செய்து  ஆற்றில் கரைத்தனர். ஊர்வலத்தையொட்டி, சத்தி டிஎஸ்பி மோகன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
சத்தி ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
 
 

சத்தியமங்கலம்,செப் 19:
சத்தியமங்கலம் அருள்மிகு வேணுகோபாலசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற முதல் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால் பக்தர்கள் விரதம் இருந்து  பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இதையொட்டி, சனிக்கிழமை அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ரங்கநாதருக்கு திருமஞ்சனமும் அதனைத் தொடர்ந்து அலங்காரபூஜையும் நடைபெற்றது. நின்ற, அமர்ந்த மற்றும் படுத்த என மூன்று  நிலைகளில் உள்ள மூவருக்கு புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.

பாமா ரூக்குமணியுடன் மூலவர் புல்லாங்குழல் அலங்காரத்தில் காட்சியளித்தார். லட்சுமி நாராயணசுவாமிக்கு மலர் மற்றும் துளசியால் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.   அதனைத் தொடர்ந்து,  ஸ்ரீதேவி, பூதேவியுடன் ரங்கநாதர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் துளசி மற்றும் பூமாலைகளை கொண்டுவந்து சுவாமிக்கு படைத்து பெருமாளை தரிசித்தனர்.

சத்தி கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடைபெற்றன.

Friday, September 18, 2015

ஆசனூர் மலைச்சரிவில் தவறிவிழுந்து குட்டியானை பலி



சத்தியமங்கலம்,செப் 18:
தாளவாடி அருகே மலைச்சரிவில் குட்டியானை தவறிவிழுந்து பலியானது.
சத்தியமங்கலம் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இங்குள்ள யானைக்கூட்டத்தில் குட்டிகள் இருப்பதால் அவை குட்டிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். இதற்கிடையில், பனகனஹள்ளி என்ற வனச்சரிவில் யானைகள் குட்டிகளுடன் இறங்கும்போது ஒரு வயதுள்ள ஆண் குட்டியானை தவறி சரிவில் விழுந்தது. அது கிடு கிடு பள்ளத்தில் உருண்டுபடி பாறை மீது மோதியதில் பலத்த காயம்ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலறிந்து அங்கு வந்த ஆசனூர் புலிகள் காப்பக இணை இயக்குநர் சி.ஹெச்.பத்மா, வனச்சரக அலுவலர் பழனிச்சாமி மற்றும் திம்பம் கால்நடை மருத்துவர் நல்லசாமி ஆகியோர் யானையின் உடலை கைபற்றி ஆய்வு செய்தனர். பிரேத பரிசோதனை பிறகு யானையின் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

Thursday, September 17, 2015

புன்செய் புளியம்பட்டியில் இன்று 1008 திருவிளக்கு பூஜை 

இடம் : ஸ்ரீ சௌடேஸ்வரி மஹால், புளியம்பட்டி
நேரம் : மாலை 5 மணி
தலைமை : திருமதி வானதி ஸ்ரீனிவாசன்
மாநில பாரதீய ஜனதா கட்சி துணை தலைவர்


புன்செய் புளியம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா 




புன்செய் புளியம்பட்டி செப்டம்பர் 16: புன்செய் புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் ஆலயங்கள் மற்றும் 75இக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் ப்ரிதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 

புன்செய் புளியம்பட்டி நேரு நகர் பகுதியில் வின்னர்ஸ் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 15 அடி பிரமாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.
புன்செய் புளியம்பட்டியில் சுமார் 3 அடி முதல் 15 அடி வரை விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. புளியம்பட்டி பேருந்து நிலையம் எதிர்புறம் 11 அடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அனைத்து வீதிகளிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

புன்செய் புளியம்பட்டி முழுவதும் 75 இக்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணி, பல்வேறு அமைப்புகள், சிறுவர்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பிரச்னைக்குரிய இடங்களில் விநாயகர் சிலைகளுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புன்செய் புளியம்பட்டியில் உள்ள விநாயகர் சிலைகள் வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானிசாகர் நீர்நிலைகளில் கரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடியில் பேருந்து நிலைய வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 10 அடி உயர விநாயகர் சிலைக்கு வழிபாடு நடத்தும் இந்துமுன்னணியினர்

பெரியார் பிறந்தநாளையொட்டி, சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையம் சமத்துவபுரத்தில் இந்திய கம்யூ கட்சியின் வட்டார செயலாளர் எஸ்.மகாதேவன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் கட்சித் தொண்டர்கள். 


சத்தியில் சாலைப் பணியாளர்கள் சங்கக்கூட்டம்

சத்தியமங்கலம்,செப் 17:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கக்கூட்டம் செயலாளர் எஸ்.எஸ்.பாலமுருகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.தலைவர் கே.வேலுச்சாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பணியாளர்களுக்கு பணி வழங்காத 41 மாத காலத்தை பணிகாலமாக அறிவித்து ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை மற்றும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சத்தியில் விநாயகர் சதுர்த்தி விழா
 
 

சத்தியமங்கலம், செப் 17:
சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள விநாயகர் கோவில்களில்  சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாப்பட்டது.

விழாவையொட்டி,  அனைத்து கோவில்களிலும்  அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமத்துடன் விநாயகர் பூஜை துவங்கியது. சத்தியமங்கலம் பவானிஆற்றுப் பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு கொழுக்கட்டை படையல் படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து  விநாயகர் அருங்கம்புல் மாலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பவானீஸ்வரர் ஆலயம், வடக்குப்பேட்டை வரசித்தி விநாயகர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 120 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன

Friday, September 11, 2015

எங்கெங்கு காணினும் பாரதி!


புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் வகுத்துகவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பாரதி நினைவு நாள் அனுசரிக்கபட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் அனைவரும் பாரதி உருவம் பதித்த முகமூடி அணிந்து பங்கேற்றனர்.
புன்செய் புளியம்பட்டியில் பாரதி நினைவு நாள்
 






புன்செய் புளியம்பட்டி செப்டம்பர் 11: புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புன்செய் புளியம்பட்டி  அருகேயுள்ள வகுத்துகவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பாரதி நினைவு நாள் அனுசரிக்கபட்டது. 

பள்ளியின் இடைநிலை ஆசிரியர் அருள்முருகன் வரவேற்றார். விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வி.கே.சின்னசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மகாகவி பாரதியாரின் திருஉருவ படத்துக்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பாரதியாரின் பாடல்களை மாணவ மாணவியர்கள் பாடினார்கள். மதியம் பாரதி வாழ்கை வரலாற்று படம் திரையிட பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் அனைவரும் பாரதி உருவம் பதித்த முகமூடி அணிந்து பங்கேற்றனர். நிறைவாக முன்னாள் மாணவர் கே.சக்திவேல் நன்றி கூறினார்.

Thursday, September 10, 2015

தாளவாடி தனி தாலுகா - பி.எல்.சுந்தரம் எம்.எல்.ஏ விற்கு வரவேற்பு 


தாளவாடி, செப் 10:
தாளவாடி மக்களின் நீண்ட நாள் கனவான தனி தாலுகா நனவாக பெரிதும் முயற்சி எடுத்த பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் திரு பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு இன்று தாளவாடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊரின் நுழைவாயிலிலேயே பொது மக்களும், கட்சி தோழர்களும் திரண்டிருந்து வரவேற்பு அளித்தனர். பறை முழங்கிட ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். மாலைகளையும், துண்டுகளையும் அணிவித்தனர்.

பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், இந்த அறிவிப்பினை மாண்புமிகு. முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள். நமது மாவட்ட அமைச்சர் மாண்புமிகு. என்.டி.வெங்கடாசலம், மாவட்ட ஊராட்சி தலைவர். திரு.எஸ்.ஆர்.எஸ், நமது மாவட்ட அதிகாரிகள், தலைமை செயலகத்தில் பணியாற்றும் பல அதிகாரிகள் ஆகிய அனைவரின் முயற்சியில் இந்த நல்லகாரியம் நடந்துள்ளது. உங்கள் சார்பில் அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நகராட்சி எருக்கிடங்கில் புகைமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி


சத்தியமங்கலம், செப் 10:
சத்தியமங்கலம் நகராட்சி எருக்கிடங்கில் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு புகை சூழ்ந்து புகைமண்டலமாக மாறியதால் வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அவதியுற்றனர்.
சத்தியமங்கலத்தில் இருந்து 2 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது நகராட்சி எருக்கிடங்கு. நகராட்சிப் பகுதியில் உள்ள கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு லாரி,டெம்போ மூலம் எருக்கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு கொட்டப்படும் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் அப்பகுதி அவ்வவ்போது புகைமண்டலமாக மாறி சுகாதார கேடு ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை எருக்கிடங்கில் தீப்பிடித்ததால் அங்கு புகைமூட்டமாக காணப்பட்டது. அதில் எழும் புகையின் துர்நாற்றம் காரணமாக அரசு மருத்துவமனை நோயாளிகள் சுவாசகோளாறால் அவதிப்பட்டனர்.மேலும், கொமராபாளையம் பகுதியில் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டனர். பள்ளி மற்றும் கல்லூரி மாலை நேரத்தில் ஏற்பட்ட புகைமூட்டத்தில் பள்ளி மாணவ,மாணவியர்கள் அப்பகுதியில் செல்லமுடியாமல் காத்திருந்தனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி புகைமூட்டம் இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. நகராட்சி எருக்கிடங்கில் அடிக்கடி ஏற்படும் இந்த புகைமூட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவதால் இப்பிரச்னைக்கு நகராட்சி தீர்வு காண வேண்டும் என சத்தி மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
மல்லன் குழியில் சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் பீதி



சத்தியமங்கலம்,ஆக 10:
தாளவாடி வனத்தையொட்டி உள்ள மல்லன்குழி கிராமத்தில் உள்ள பாறை மீது சிறுத்தை அமர்ந்திருப்பதை பார்த்து கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஆசனூர் புலிகள் காப்பகம், தாளவாடி வனச்சரகத்தில் உள்ளது மல்லன்குழி கிராமம். வனத்தையொட்டியுள்ள இக்கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் பயிர்களை காட்டுயானைகள், காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகள் சேதப்படுத்துகின்றன. இரவு நேரத்தில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுவிலங்குகளை கிராமமக்கள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, மல்லன் குழி பகுதியில் அரசு உண்டு உறைவிடப்பள்ளிக்கான கட்டுமான நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானப் பணிக்கு தேவையான பொருகள்களை சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர் சரவணன் என்பவர் செவ்வாய்க்கிழமை தாளவாடி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, சாலையில் இருந்து 50 அடி தொலைவில் உள்ள மல்லன்குழி பாறை மீது சிறுத்தை அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் தனது செல்போனில் சிறுத்தையை படம் பிடித்தார். இது குறித்து அவ்வழியாக வந்து கொண்டிருந்த கிராம மக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பட்ட பகலில் கடும் வெயிலில் பாறை மீது அமர்ந்திருந்த சிறுத்தை, அதே இடத்தில் நீண்ட நேரமாக காணப்பட்டது. 1 மணி நேரத்துக்கு பிறகு சிறுத்தை காட்டுக்குள் சென்றுவிட்டது. மல்லன்குழியில் முதன்முறையாக சிறுத்தையை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து வனஅலுவலர் கூறுகையில் சிறுத்தை தனக்கு தேவையான இரையை சாப்பிட்டதால் அது அங்கு ஓய்வெடுத்திருக்கலாம்.இதனால் அது எவரையும் அச்சுறுத்தவில்லை என்றார்
சத்தி அருகே சிறுகதை நூல் வெளியீட்டு விழா - சிந்தனை கவிஞர் கவிதாசன் பங்கேற்பு 



சத்தியமங்கலம்,செப்.9:
சத்தியமங்கலம் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த எழுத்தாளர் உமையவன் என்கிற ப. ராமசாமி எழுதிய ‘சிறுவர் நீதிக்கதைகள்’, ‘வண்டிமாடு’ ஆகிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
நூலாசிரியர் பெற்றோர் பி.பழனிச்சாமி-சரஸ்வதி தலைமைத் தாங்கினா். முனைவர் கவிதாசன் மற்றும் முனைவர் செல்லப்பன் ஆகியோர் நூல்களை வெளியிட, தேவநகவுண்டர் பெற்றுக்கொண்டார். விழாவின் ஒருபகுதியாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் படத் திறப்பு விழாவும், ஏர்க் கலைப்பை சமூக அமைப்பின் தொடக்கவிழாவும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் ஊர்மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
கோவில் இடிப்பு விவகாரம்: சத்தியில் அமைதிக் கூட்டம்



சத்தியமங்கலம்,செப் 9:
உதயமரத்திட்டு அருகே கோவில்கள் இடிக்கப்பட்டதற்கு ஊர்பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சத்தி வருவாய் வட்டாட்சியர் வீ.வேணுகோபால் தலைமையில் அமைதிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.இதில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் குருசாமி, சக்திவேல் மற்றும் உதயமரத்திட்டு ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டனர். சத்தி சார்பு நீதிமன்றத்துக்கு சொந்தமான இடம் என்பதால் கோவில்கள் அகற்றப்பட்டதாகவும் கோவில்கள் கட்டுவதற்கு வேறொரு இடம் அரசு சார்பில் ஒதுக்குவதாகவும் அதற்கான செலவுகளை நன்கொடையாளர்களை கொண்டு செய்து தருவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சத்தி அருகே மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற விவசாயி


சத்தியமங்கலம்,செப் 9:
சத்தி அருகே மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற விவசாயியை சத்தி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
சத்தியமங்கலம் அடுத்துள்ள செண்பகபுதூர் சின்னப்புதூரைச் சேர்ந்தவர் த.பொன்னுச்சாமி(65).இவரது மனைவி அய்யம்மாள்(60). இவர்கள் அங்குள்ள தோட்டத்தில் வசித்து வந்தனர்.இந்நிலையில் புதன்கிழமை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது கணவர்-மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்ட கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பொன்னுச்சாமி வண்டிக்கட்டையால் அய்யம்மாளை தாக்கியதில் அவள் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். மனைவி இறந்துவிட்டதை அறிந்த பொன்னுச்சாமி, போலீஸூக்கு பயந்து கத்தியால் உடலை காயம் ஏற்படுத்திக் கொண்டார். தகலறிந்து அங்கு வந்த சத்தி போலீஸார் பொன்னுச்சாமியை கைது செய்து கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த வேன்
 
 
 
சத்தியமங்கலம்,ஆக 8:
சத்தியமங்கலம் அடுத்துள்ள வாணிப்புத்தூர் பகுதியில் நெல் நடவுக்கான எந்திரம் வாடகைக்கு விடப்படுகிறது. இந்த எந்திரத்தை ஏற்றிச் செல்லும் வேன் ஒன்று தூக்கநாயக்கன்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தது. இதன் ஓட்டுநர் வேணுகோபால் அருகில் உள்ள தேநீர் கடைக்கு சென்றார்.அப்போது,சரிவான பாதையில் நின்றுகொண்டிருந்த வேன் எதிர்பாராதவிதமாக நகர்ந்துவந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. தானாகவே செல்லும் வேனை பார்த்த அப்பகுதி மக்கள் அதனை தடுக்க முயற்சி மேற்கொண்ட போதிலும் வேன் விபத்துக்குள்ளானது.அங்கு வந்த போலீஸார் மீட்பு  வாகனம் மூலம் வேனை அப்பறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
சத்தியமங்கலம்- ஆக்கிரமிப்பு பால் பண்ணை, கோவில்கள் இடிப்பு

 
 
சத்தியமங்கலம்,ஆக 8:

சத்தியமங்கலம் சார்பு நீதிமன்றத்துக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பால் பண்ணை மற்றும் கோவில்கள் இடிக்கப்பட்டன.

சத்தியமங்கலம் சார்பு நீதிமன்றம் அமைப்பதற்காக  1996-ஆம் ஆண்டு சத்தி மைசூர் சாலையில் 1.46 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. இப்பகுதி மக்கள் இந்த நிலத்தை ஆக்கிரமித்து முத்துமாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில் கட்டி வழிபட்டு வந்தனர். மேலும் ஒரு பால் பண்ணையும் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த இடத்தில் சார்பு நீதிமன்றம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியல் எஸ்.பிரபாகர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் மற்றும் பால் பண்ணையை அகற்றுமாறு சத்தி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, சத்தி வட்டாட்சியர் வீ.வேணுகோபால்,டிஎஸ்பி மோகன் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அமைக்கப்பட்ட கோவில்கள் மற்றும் பால் பண்ணை அகற்றப்பட்டன. மேலும், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று  அதே பகுதியில் 11 சென்ட் நிலம் கோவில் கட்ட ஒதுக்கப்படுவதாக வட்டாட்சியல் வீ.வேணுகோபால் தெரிவித்தார்.

Monday, September 7, 2015

கர்நாடகத்தில் விவசாயிகள் பந்த் எதிரொலி: தமிழக பேருந்துகள் நிறுத்தம்


சத்தியமங்கலம்,ஆக 5:
கர்நாடகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக விவசாயிகள் சனிக்கிழமை மேற்கொண்ட பந்த் காரணமாக இரு மாநிலங்களிடையே அரசு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு கருதி தமிழக அரசுப் பேருந்துகள் கர்நாடகத்துக்கு இயக்கப்படவில்லை.பந்த் பற்றிய அறிவிப்பு தெரியாத பயணிகள் சத்தி பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். தொடர்ந்து, பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சத்தியில் இருந்து தாளவாடி,புளிஞ்சூர் வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தாளவாடியில் இரு மாநில தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டதால் அங்கிருந்து கர்நாடகத்துக்கு பயணிகள் புறப்பட்டு சென்றனர்.பிற்பகலில் முதல் இரு மாநில அரசுப் பேருந்துகள் வழக்கம்போல இயங்கின.
சத்தியமங்கலம் அடுத்துள்ள தலமலை பகுதியில் பலத்த மழை பெய்துள்ளதால் உழவுப் பணியில் ஈடுபட்டுள்ள பழங்குடியின விவசாயி



சத்தி இந்து மக்கள் சபா நிர்வாகிகள் தேர்வு

சத்தியமங்கலம்,ஆக 5:
சத்தியமங்கலம் இந்து மக்கள் சபா நிர்வாகிகள் தேர்வு அமைப்புச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.இதில், புதிய ஒன்றியத் தலைவராக எம்.மகேதவேன்,  நகரச் செயலாளராக எஸ்.எம்.சரவணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் நிறுவனத் தலைவர் ந.புவனேஸ்வரன் பங்கேற்று பேசினார்.  இந்து மக்கள் சபா சார்பில் சத்தியமங்கலம் பகுதியில் 54 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடத்தப்படும். வரும் 18-ஆம் தேதி விநாயகர் சிலை விஸர்ஜன தரிசன ஊர்வலம் நடைபெறும். அதன்பிறகு பவானிஆற்றில் சிலைகள் கரைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சத்தியில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம்

சத்தியமங்கலம், ஆக 5:
கோகுலாஷ்டமியை முன்னிட்டு சத்தி வேணுகோபாலசுவாமி ஆலயத்தில் சனிக்கிழமை நடந்த சிறப்புபூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
சத்தியமங்கலம் ஶ்ரீ வேணுகோபால சுவாமி ஆலயத்தில் சனிக்கிழமை காலை சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது. இதையொட்டி  மலர் அலங்காரத்தில்  ரங்கநாத பெருமாள், ஶ்ரீ லட்சுமிநாரயணசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோவில் மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற ஸ்ரீமத் கீதா ஹோமத்தில் 50 பெண் பக்தர்கள் கலந்துகொண்டு 700 பகவத கீதை பஜனைகளுடன் காயத்திர மந்திரங்கள் பாடினர்.  நண்பகல் 1 மணிக்கு அபிஷேகமும்  மாலை 7 மணிக்கு சுவாமி புற்பாடும் அதனைத் தொடர்ந்து உறியடி விழாவும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ஆனந்தஐயர் தலைமையில் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.
தலமலை சாலையில் பட்டப்பகலில் நடமாடும் யானைகள்
 
 
சத்தியமங்கலம், செப்.1. திம்பம் & தலமலை சாலையில் நேற்று மாலை பட்டப்பகலில் யானைகள் சர்வசாதாரணமாக சுற்றித்திரிந்தன. திம்பம் & தலமலை சாலை 22 கிலோமீட்டர் தூரம் உள்ள அடர்வனப்பகுதியில் அமைந்துள்ள வனச்சாலையாகும். இவ்வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசிக்கின்றன. இவ்விலங்குகள் இச்சாலையை பகல்நேரங்களில் கடப்பதும், சாலையோரம் நின்றுகொண்டு பொழுதைக்கழிப்பதுமாக இருப்பது இயல்பு. குறிப்பாக யானைகள் சாலையில் வந்து நின்றுகொண்டு பலமணி நேரம் வனப்பகுதிக்குள் செல்லாமல் யானக்குட்டிகளுடன் சாலைகளில் வி¬ளாயாடி மகிழ்கின்றன. நேற்று மாலை 4 மணியளவில் ராமரணை பஸ்நிறுத்தம் அருகே 5 க்கும் மேற்பட்ட யானைகள் சாலையில் நின்றுகொண்டிருந்தன. பொதுமக்கள் இச்சாலையில் செல்ல அனுமதி இல்லாததால் போக்குவரத்து குறைவாக உள்ள இச்சாலை எப்போதும் வெறிச்சோடி கிடக்கும். வனகிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் 2 அரசுப்பேருந்துகள், உரு தனியார் பேருந்து மட்டுமே இச்சாலையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதனால் யானைகள் மணிக்கணக்கில் சாலையின் நின்றுகொண்டிருந்தன. பின்னர் சாலையில் சில வாகனங்கள் வந்ததால் யானைகள் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன.
தாளவாடி மக்களின் கனவு நனவானது. தாளவாடி தனி தாலூகாவாக சட்டமன்றத்தில் அறிவிப்பு. பட்டாசு வெடித்து கொண்டாட்டம் 
 


 
சத்தியமங்கலம், செப்.1. தாளவாடி தனிதாலூகாவாக சட்டமன்றத்தில் நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். கடல்மட்டத்திலிருந்து சுமார் 2000 அடி உயரத்தில் உள்ளது ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி மலைப்பகுதி. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள இந்த தாளவாடி மலைப்பகுதியில் 60 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.  இப்பகுதி மக்களின் அடிப்படைத்தொழில் விவசாயம் ஆகும். கரும்பு, மக்காச்சோளம், முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் அதிகளவில் பயிர் செய்யப்படுகின்றன. தமிழக கர்நாடக எல்லைப்பகுதியில் உள்ள இப்பகுதி ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது. சத்தியமங்கலம் தாலூகாவிற்குட்பட்ட இப்பகுதியில் மட்டும் வனப்பகுதியை தவிர்த்து 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலங்கள் உள்ளன. இதில் புஞ்சை நிலங்கள் 19 ஆயிரம் ஹெக்டேரும், புறம்போக்கு நிலங்கள் 6  ஆயிரம் ஹெக்டேரும் உள்ளன. கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ளதால் தாளவாடி மலைப்பகுதியில் கன்னட மொழி பேசுபவர்கள் அதிகம் உள்ளனர். இது தவிர தமிழ் பேசுபவர்கள், மலைவாழ் மக்கள், பழங்குடியினர் என மொத்த மக்கள் தொகை 2011 ம் ஆண்டு  கணக்கெடுப்பின்படி 65 ஆயிரத்து 548 ஆக உள்ளது.   இதில் ஆண்கள் 32810. பெண்கள் 32718 ஆகும். தாளவாடி வட்டாரத்தில் மட்டும் தாளவாடி, தலமலை, ஆசனூர் மற்றும் கேர்மாளம் ஆகிய 4 வனச்சரகங்கள் உள்ளன. இதனால் வனத்தை நம்பி வாழும் மக்கள் அதிகம். தாளவாடி உள்வட்டத்தில் மல்லன்குழி, அருளவாடி, பனகஹள்ளி, தொட்டமுதுகரை, எரகனஹள்ளி, கெட்டவாடி, கொங்கஹள்ளி, மரூர், தொட்டகாஜனூர், தாளவாடி, சிக்ககாஜனூர், திகினாரை, கரளவாடி, பையனாபுரம், மாதஹள்ளி, நெய்தாளபுரம், இக்கலூர், தலமலை, ஆசனூர், திங்களூர் அ, திங்களூர் ஆ என மொத்தம் 21 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் ஜாதிச்சான்று, வருமானச்சான்று, குடியிருப்புச்சான்று, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றுகளை பெற 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்தியமங்கலத்திற்கு வரவேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர 160 கிலோமீட்டர் பயணிக்கவேண்டும். அடர்ந்த வனப்பகுதியில் 27 அபாயகரமான கொண்டைஊசிவளைவுகளைக் கொண்ட திம்பம் மலைப்பாதையில் கொடிய வனவிலங்குகள் நடமாடும் சாலை வழியாக சுமார் இரண்டரை மணிநேரம் பயணித்தால்தான் சத்தியமங்கலத்தை அடைய முடியும். ஈரோடு செல்வதற்கு நான்கரை மணிநேரம் பயணிக்க வேண்டும். அதிலும் மலைப்பாதையில் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு 8 மணி நேரம் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது சாதாரணமான நிகழ்வாக உள்ளது. சான்று விண்ணப்பத்தை அளிக்க ஒருநாள் மீண்டும் சான்று பெற ஒரு நாள் என 2 நாட்கள் செலவாவதால் அன்றாட கூலிவேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். தாளவாடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் அலுவலகம், பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கிளை, காவல்நிலையம் மற்றும் வனத்துறை  உள்ளிட்ட பல்வேறு  அரசுத்துறை அலுவலகங்கள் இருந்தாலும் மக்கள் அன்றாடம் செல்லும் வருவாய்த்துறையின் தாலூகா அலுவலகம் மட்டும் சத்தியமங்கலத்தில் உள்ளதால் இப்பகுதி மக்கள் பயணநேரம் வீணானது. தாளவாடியை தனி தாலூகாவாக பிரிக்க பலமுறை அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டது. சத்தியமங்கலம் வட்டத்தை இரண்டாக பிரித்து தாளவாடியை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்குதல், புதிய வட்டத்தின் எல்லையை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விபரங்களுடன் முன்மொழிவு அரசுக்கு  அனுப்பப்பட்டது.  பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் தாளவாடியை தனிதாலூகாவாக அறிவிக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் போராடி வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் எம்எல்ஏ சுந்தரம் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்திடம் தாளவாடி மலைப்பகுதியை தனிதாலூகாவாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா சத்தியமங்கலம் தாலூகாவில் உள்ள தாளவாடி மலைப்பகுதியை தனிதாலூகாவாக செயல்படும் என அறிவித்தார். இத்தகவலை கேள்விப்பட்ட தாளவாடி சுற்றுவட்டார பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். தாளவாடி பஸ்நிலையத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் தலைமையில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் மாரப்பன், தாளவாடி ஒன்றியக்குழு தலைவர் கெம்பாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
கர்நாடக பஸ்கள் இயக்கப்படாததால் தாளவாடியில் இயல்பு நிலை பாதிப்பு. இருமாநில போக்குவரத்து பாதிப்பு
 

 
 
சத்தியமங்கலம், செப்.3. அனைத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் கர்நாடக மாநிலத்தில் அரசுபஸ்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக திண்டுக்கல் &  பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழகத்திற்கு வரும் கர்நாடக அரசு பஸ்கள் வராததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சத்தியமங்கலத்திலிருந்து தமிழக அரசு பஸ்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களுரு, மைசூரு, கொள்ளேகால் நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதேபோல் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு, பெங்களுரு, குண்டல்பேட்டை, சாம்ராஜ் நகரிலிருந்து ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கர்நாடக அரசு பஸ்கள் சத்தியமங்கலம் வழியாக இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மத்திய அரசைக்கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்ற பொது வேலைநிறுத்தம் காரணமாக கர்நாடகாவில் அரசுபஸ்கள் இயக்கப்படாததால் சாம்ராஜ்நகரிலிருந்து தாளவாடிக்கு இயக்கப்படும் பஸ்கள் வரவில்லை. இதனால் தாளவாடியிலிருந்து சாம்ராஜ்நகர் செல்லும் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது. இதேபோல் சத்தியமங்கலம் வழியாக தமிழகத்திற்கு வரும் கர்நாடக அரசுபஸ்கள் வராததால் திண்டுக்கல் &  பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடியது. தமிழகத்திலிருந்த கர்நாடக மாநிலத்திற்கு இயக்கபடும் பஸ்கள் கர்நாட மாநில எல்லையான புளிஞ்சூர் சோத¬ன்சாவடி வரை சென்று திரும்பின. இதனால் சத்தியமங்கலத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் பயணிகள் சத்தியமங்கலம் பஸ்நிலையத்தில் காத்திருந்தனர். பஸ்கள் வராததால் ஏமாற்றமடைந்தனர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் பஸ்ஸ்டாண்ட் வெறிச்சோடி கிடந்தது