தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, July 30, 2014





மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் அழகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்த திருநங்கைகள்.



மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவில் 9 வது நாளான நேற்று பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலா  நடந்தது.பூசாரி பரமேஸ்வரன் சிறப்பு பூஜைகள் செய்தார்.உபயதாரர் கெண்டையூர் பி.செல்வராஜ்-முத்துலட்சுமி,மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
லாரி மோதி சோதனைச்சாவடி கட்டிடம் சேதம்

 

சத்தியமங்கலம், ஆகஸ்ட் 1: சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில்
வனத்துறைக்கு சொந்தமான சோதனைச்சாவடி கட்டிடம் உள்ளது. கட்டிடம்
பழுதடைந்தள்ளதால் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்து தாளவாடியிலிருந்து கிரானைட் கல் பாரம் ஏற்றிய லாரி சேலம் செல்வதற்காக பண்ணாரி அருகே வந்துகொண்டிருந்தது. லாரியை திருத்தணியை சேர்ந்த டிரைவர் ரவிச்சந்திரன் ஓட்டி வந்தார். பண்ணாரி சோதனைச்சாவடி அருகே வந்தபோது ரோடு டிவைடர் இருந்ததால் டிரைவர் வேகத்தை குறைக்க முயற்சித்து பிரேக் போட்டபோது பிரேக் பிடிக்காததால் லாரி கட்டுப்பாட்டை இழந்து  வனசோதனைச்சாவடியை ஒட்டியுள்ள வேப்பமரத்தின் மீது மோதி மரம் முறிந்து  வனத்துறை கட்டிடத்தையும் மோதி நின்றது. இதனால் வனசோதனை சாவடி கட்டிடம் இடிந்து சேதம் ஏற்பட்டது. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கர்நாடகாவிற்கு ரேசன் அரிசி கடத்த முயற்சி


சத்தியமங்கலம், ஆகஸ்ட் 1: சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் அருகே
பசுவனாபுரத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற
இருவரை வனத்துறையினர் பிடித்தனர். கேர்மாளம் வனசோதனைசாவடியில் வனச்சரகர்  பெர்னாட் தலைமையில் வனத்துறை பணியாளர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பசுவனாபுரம் சாலையிலிருந்து கர்நாடகா நோக்கி வந்த ஜீப்பை சோதனையிட்டபோது ஜீப்பில் 300 கிலோ எடை கொண்ட 7 மூட்டை ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. ஜீப்பில் வந்த இருவரை விசாரித்தபோது பசுவனாபுரத்தை சேர்ந்த உத்திரன்(35), பொன்னுசாமி(38) என்பதும், ரேசன் அரிசியை கர்நாடகாவில் உள்ள பீப்பிபாளையத்திற்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. வனச்சரகர் பெர்னாட் பிடிபட்ட இருவரையும் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தார். வருவாய்த்துறையினர் இருவர் மீது ஆசனூர் போலீசில் புகார் அளித்ததின் பேரில் ஆசனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Monday, July 28, 2014



மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா,,உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் நா.பழனிக்குமார், உபயதாரர் டி.சீனிவாசன் பானுமதி,கோவில் கண்காணிப்பாளர் வே.செல்வராஜ், அலுவலர்கள் நெல்லைப்பன், கந்தசாமி, திருநாவுக்கரசு,பூசாரி [பொறுப்பு] பரமேஸ்வரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.







மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவில் .இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு  ஏகதின தமிழ்முறை இலட்சார்ச்சனை.நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வனபத்ரகாளி அம்மனுக்கு கோவில் பூசாரி [பொறுப்பு]பரமேஸ்வரன் சிறப்புபூஜைகள் செய்தார்.மூலத்துறை ப.குழந்தை வேல்,ப.சகிதிவேல்,ஆகியோர் தலைமையில்  சிவநெறி தொண்டர்கள் ,மற்றும் பக்தர்கள் இலட்சார்ச்சனை செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் ,ஆர்.வசந்தா,உபயதாரர் ஆனந்தநாராயணன் ஸ்ரீதேவி,உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புஞ்சைபுளியம்பட்டியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.
மாவட்ட ஊராட்சிகுழுத்தலைவர் பங்கேற்பு.

 
 
புஞ்சைபுளியம்பட்டி;ஜூலை;29;

புஞ்சைபுளியம்பட்டியில் நடைபெற்ற  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், 
மாவட்ட ஊராட்சிகுழுத்தலைவர் எஸ்.ஆர்.செல்வம் பங்கேற்றார்.

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூரில்,இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வெற்றி பாராமெடிக்கல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, கல்லூரி தாளாளர் டி.எஸ்.லோகநாதன் தலைமை வகித்தார்.பவானிசாகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வி.ஏ.பழனிச்சாமி,விரிவுரையாளர் கே.எஸ்.ஸ்ரீதர்,குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகம்மது நூருல்லா, புனிதரமலான் சிந்தனைகள் பற்றி கல்லூரி மாணவியர்களிடம்,எடுத்துரைத்தார்.சிறப்பு அழைப்பாளராக,ஈரோடு மாவட்ட ஊராட்சிகுழுத்தலைவர் எஸ்.ஆர்.செல்வம் கலந்துகொண்டு,இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்,ஊராட்சி தலைவர்கள் காராப்பாடி வெள்ளியங்கிரி,விண்ணப்பள்ளி கணேசன்,தேசிபாளையம் மயிலாள் சம்பத்,மூர்த்தி,பரக்கத்துல்லா,
மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 
ஆடி அமாவாசையையொட்டி புன்செய் புளியம்பட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு.
 
 



 
புன்செய் புளியம்பட்டி;ஜூலை;27;

ஆடி அமாவாசையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள புன்செய் புளியம்பட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

புன்செய் புளியம்பட்டியில், மாரியம்மன்,ப்ளேக் மாரியம்மன்,ஊத்துக்குளி அம்மன்  கோவில்கள்  உள்ளது. இங்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பஞ்சாமிர்தம், இளநீர், தேன் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு நின்றநிலையில் அம்மனுக்குபுத்தாடை உடுத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்குபொங்கல்,பிரசாதம்,
 ராகி கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.பின்னர்,அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மாரியம்மன்,ப்ளேக் மாரியம்மன் உற்சவர்,கோவில் உலா நடைபெற்றது.இதில் பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும்,கரிவரதராஜபெருமாள்  கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் காமாட்சி அம்மன்  கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. வனக்கோவில் மற்றும் கிராமங்களில் உள்ள அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதல் ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரால் அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.
காராப்பாடி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம்.179 மனுக்களுக்கு உடனடி தீர்வு.

 
பு.புளியம்பட்டி;ஜூலை;27;

பு.புளியம்பட்டி அருகே உள்ள காராப்பாடி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.இதில்,179 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட,காராப்பாடி ஊராட்சியில்,அம்மா திட்ட முகாம், ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.முகாமிற்கு,மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் தலைமை வகித்து பேசினார்.பவானிசாகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வி.ஏ.பழனிச்சாமி,காராப்பாடி ஊராட்சி தலைவர் கே.வெள்ளியங்கிரி,வட்டார வளர்ச்சி அதிகாரி என்.சாந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சத்தியமங்கலம் வட்டாட்சியர் சேதுராஜ்,சிறப்பு வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு,பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
முகாமில்,மொத்தம் 213 மனுக்கள் பெறப்பட்டன.அதில்,179 மனுக்களுக்கு உடனடியாக  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில்,விண்ணப்பள்ளி ஊராட்சி தலைவர் கணேசன்,ஒன்றிய கவுன்சிலர் சின்னச்சாமி,கிராம நிர்வாக அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன்,லதா, காராப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம்,செல்லம்பாளையம்,பா
றைப்புதூர்,கோட்டபாளையம் கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். 
புதுப்பாளையம் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டைகள். ட்ரீ அறக்கட்டளை வழங்கியது.

 
 

புதுப்பாளையம் அரசு துவக்கப்பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு அடையாள அட்டைகளை ட்ரீ அறக்கட்டளை வழங்கியது.

பு.புளியம்பட்டி அருகே உள்ள புதுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் மொத்தம் 30 மாணவ- மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.இவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு,ட்ரீ அறக்கட்டளை தலைவர் ஆர்.சீனிவாசன் தலைமை வகித்து பேசினார்.பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் சீரங்கசாமி,சிவானந்தம்,ஆர்.சண்முகசுந்தரம்,சக்தி டயர்ஸ் பிரகாஷ்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியை சி.துளசிமணி,ஆசிரியை கே.ஜெயச்சித்ரா ஆகியோர் வரவேற்று பேசினார்.
நல்லூர் ஊராட்சித்தலைவர் காளியம்மாள்  மாணவ- மாணவியர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்கினார்.இப்பள்ளியில் பயிலும்  மொத்தம் 30 மாணவ- மாணவியர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில்,கவுன்சிலர் மலர்விழி,சத்துணவு அமைப்பாளர் அரங்கசிவகாமி, டி.தீபா, ரஞ்சித்குமார்,கிராம கல்விக் குழுவினர்கள்,அங்கன்வாடி பணியாளர்கள்,சமூகநல ஆர்வலர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.அதேசமயம், பவானிசாகர் அணை நீர்தேக்கப்பகுதிகளில்,பயிரிடப்பட்டுள்ள  தட்டைப்பயிர் செடிகள் நீரில் மூழ்குகிறது.இதனால்,இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சிறுத்தை சிக்கியதால் மலைவாழ்மக்கள் மகிழ்ச்சி

இயல்பு நிலைக்கு திரும்பியது தலமலை வனச்சாலை

 
 
சத்தியமங்கலம்,
மனிதர்களை கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் பிடித்துள்ளதால் காளிதிம்பம், தலமலை,பெஜலட்டி ஆகிய கிராமங்களில் இயல்பு நிலை திரும்பியது.

திம்பம் மலைப்பகுதியில் ஆள்கொல்லி சிறுத்தை தென்பட்டதால் திம்பம் வனச்சோதனை சாவடி வழியாக மலைவாழ் மக்கள் செல்ல வனத்துறை தடைவிதித்தது.இதனால், காளிதிம்பம், தலமலை, பெஜலட்டி,ராமரணை போன்ற கிராமமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கிராமமக்கள் அந்தந்தப் பகுதியில் முடங்கி கிடந்தனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும்,காய்கறி வாகனங்கள், திறந்த வெளி வாகனங்களில்  செல்லும் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.தற்போது, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தையை பிடித்து சென்னை வணடலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறுத்தையை பிடித்த வனத்துறையினருக்கு மலைவாழ் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிறுத்தையின் அச்சம் போனதால் தலமலை வனச்சாலை வழியாக மீண்டும் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல துவங்கினர்.தலமலை பேருந்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. 43 நாள்களுக்கு பிறகு தலமலைப்பகுதியில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது

Thursday, July 24, 2014

திம்பம்: வனத்துறை கூண்டில் சிக்கியது ஆள்கொல்லி ஆண் சிறுத்தை

சிறுத்தையை வனத்துறையினர்  உயிருடன் பிடித்தனர்





சத்தியமங்கலம்,ஜூலை 24:
43 நாள்களில் இரண்டு பேரை கொன்ற ஆள்கொல்லி சிறுத்தையை வனத்துறையினர் வியாழக்கிழமை உயிருடன் பிடித்தனர்.பின்னர், சிறுத்தைக்கு மயக்கமருந்து செலுத்தி தனிகூண்டில் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பாரமரிப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்,  திம்பம் மலைப்பகுதியில் ஜூன் 11ம் தேதி தாளவாடி முகமது இலியாஸ்(24), ஜூலை 17ம் தேதி வனக்காவலர் க.கிருஷ்ணன்(57) ஆகியோரை ஆள்கொல்லி சிறுத்தை கடித்து கொன்றது.இதையடுத்து, மனிதர்களை கொல்லும் சிறுத்தை கண்டுபிடிக்க திம்பம் மலைப்பாதை 24 வது வளைவு முதல் 27வது வளைவு வரையிலும் தலமலை சாலையில் சிறுத்தை வழித்தடத்திலும் 30 அதிநவீன தானியங்கி காமிராக்கள்  தினந்தோறும் கண்காணிக்கப்பட்டது. இதில் திம்பம் மற்றும் தலமலை சாலையில் வைக்கப்பட்ட காமிராக்களில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது. அந்த புகைப்படங்களை ஆய்வு செய்த வனத்துறையினர் ஆள்கொல்லி சிறுத்தையை அடையாளம்  கண்டனர். 

அதனை தொடர்ந்து, சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் 5 கூண்டுகள் வைத்து சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிப்பதற்கு கோவை வனக்கால்நடை மருத்துவர் தலைமையில் சிறப்பு பயிற்சி பெற்ற வனச்சரக அலுவலர்கள் கொண்டு தனிப்படையினர்  சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து அதனை பிடிக்க திம்பம் வனப்பகுதியில் முகாமிட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை தலமலை சாலைப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.
அப்போது, கூண்டில் இருந்து தப்பிக்க சிறுத்தை ஆக்ரோஷமாக உறுமியது. பிடிப்பட்ட சிறுத்தை அடையாளம் காண்பதற்காக ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் ஐ.அன்வர்தீன், சத்தி புலிகள் காப்பக கள துணை இயக்குநர்கள் கே.ராஜ்குமார், சி.ஹெச்.பத்மா, வனச்சரக அலுவலர்கள் எஸ்.சண்முகம், ராம்ராஜ், உதயராஜ், பெர்னாட் ஆகியோர் கூண்டின் அருகே சென்றபோது அவர்களை தாக்க முயன்றபோது கூண்டின் கம்பியில் மோதி சிறுத்தையின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து,சிறுத்தைக்கு மயக்கம் மருந்து செலுத்தி அதன் உடல்நிலையை ஆய்வு செய்தனர். . பின்னர், அதனை மேல்பகுதிக்கு கொண்டுவந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தனிக்கூண்டில் சிறுத்தையை வைத்து பூட்டினர். சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்த சிறுத்தையை தனிவேனில் ஏற்றி சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பாரமரிப்புக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு பாதுகாப்பாக, வனப்பாதுகாப்பு படை வீரர்கள் உடன் சென்றனர்.


இது குறித்து ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் ஐ.அன்வர்தீன் வியாழக்கிழமை கூறியது:   இந்த அசாதாரண நிகழ்வுகளில் சிறுத்தைத் தாக்கி இறந்ததால் மனிதர்களை கொல்லும் சிறுத்தை அடையாளம் காணப்பட்டு இச்சிறுத்தையினை பிடிக்க இப்பகுதிகளில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்  இது தொடர்பாக வகுத்துள்ள நெறிமுறைகளுக்குட்பட்டு மேற்படி சிறுத்தையை பிடிக்கும் பணியில் இரவுப்பகலாக வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். பல்வேறு போராட்டத்திற்கு பிறகு, போக்கு காட்டி வந்த  ஆள்கொல்லி சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் உயிருடன்  பிடிபட்டது. சிறுத்தையின் உடல் அடையாளங்களை, காமிராவில் பதிவான அதன் புகைப்படங்களுடன் ஆய்வுசெய்தபோது கூண்டில் சிக்கியது ஆள்கொல்லி சிறுத்தை தான் என்பது உறுதி செய்யப்பட்டது. திம்பம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் நடமாடினாலும் ஒவ்வொன்றும் தனக்கென ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து வாழும் என்பதால் இங்கு மேலும் சிறுத்தைகள் இருக்க வாய்ப்பில்லை. என்றார்

Monday, July 21, 2014

புன்செய் புளியம்பட்டியில்  விடியல் மாணவர் விருதுகள் வழங்கும் விழா- 600 மாணவ மாணவியர்களுக்கு வழங்க பட்டது.

புன்செய் புளியம்பட்டி ஜூலை 22:

           புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம், ஸ்ரீ தேனு சில்க்ஸ், அம்மா மெட்ரிக் பள்ளி சார்பில் 2013 - 2014 ஆம் கல்வி ஆண்டில் மாநில அளவில் மற்றும் பள்ளிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு விடியல் மாணவர் விருதுகள் வழங்கும் விழா புன்செய் புளியம்பட்டி நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது .

           விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன்  வரவேற்றார்.. அம்மா மெட்ரிக் பள்ளியின் செயலாளர் ராணி லக்ஷ்மி அன்பு குத்து விளக்கேற்றினார். ஞானவேல் ஸ்பின்னிங் மில்ஸ் உரிமையாளர் எஸ்.ஞானபண்டிதன் தலைமை  தாங்கினார்.  ஸ்ரீ தேனு சில்க்ஸ் நிறுவனர்கள் ஆர்.மூர்த்தி, ஆர்.தருமன், டாக்டர் சுப்பிரமணியம், பி.கே.சண்முகம், ஞானதண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

       கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைகழகத்தின் அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் மா.பத்மநாபன் , ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம்,  பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி.ஏ.பழனிசாமி, புன்செய் புளியம்பட்டி நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்கள். 

        இந்நிகழ்ச்சியில் கோபி, ஈரோடு, கோவை, திருப்பூர் கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட 200 இக்கும் மேற்பட்ட உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில் 2013-2014 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த  500 மாணவ மாணவியர்களுக்கு விடியல் மாணவர் விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் 100 % தேர்ச்சி பெற்ற 75 பள்ளிகளுக்கு விடியல் சாதனை பள்ளி விருதுகள் வழங்கப்பட்டது. சத்தி, கோபி பகுதிகளில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த 25 மாணவ மாணவியர்களுக்கு விடியல் சாதனை விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 600 மாணவ மாணவியர்களுக்கு விருதுகள் வழங்கபட்டது. அவர்களுக்கு கேடயம், விவேகனந்தர் புத்தகம், தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவின் நிறைவில் விடியல் தலைவர் வாணி கே. தருமராசு நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடியல் சமூகநல தலைவர் கே.தருமராசு, செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், உறுப்பினர்கள் லோகநாதன், சக்திவேல், பாபு, வடிவேலன், ரமேஷ்குமார், பேராசிரியர் சக்திவேல், கிருஷ்ணசாமி, கமலகண்ணன், ஸ்ரீனிவாசன், பிரகாஷ், கந்தசாமி, தாமரைக்கண்ணன், மகேஷ்குமார், சங்கீதா, அருள்மொழி, லாவண்யா, ஹரிப்ரியா மற்றும் பலர் செய்திருந்தார்கள். 

Thursday, July 17, 2014

புன்செய் புளியம்பட்டியில் விடியல் மாணவர் விருதுகள் வழங்கும் விழா
ஜூலை 20 ஞாயற்றுகிழமை நடைபெறுகிறது.




           புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம், ஸ்ரீ தேனு சில்க்ஸ், அம்மா மெட்ரிக் பள்ளி சார்பில் 2013 - 2014 ஆம் கல்வி ஆண்டில் மாநில அளவில் மற்றும் பள்ளிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு விடியல் மாணவர் விருதுகள் வழங்கும் விழா வருகின்ற 20-07-2014 ஞாயற்றுகிழமை காலை 9.30 மணிக்கு புன்செய் புளியம்பட்டி நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

           விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்கிறார். அம்மா மெட்ரிக் பள்ளியின் செயலாளர் ராணி லக்ஷ்மி அன்பு குத்து விளக்கேற்றுகிறார். ஞானவேல் ஸ்பின்னிங் மில்ஸ் உரிமையாளர் எஸ்.ஞானபண்டிதன் தலைமை தாங்குகிறார். ஸ்ரீ தேனு சில்க்ஸ் நிறுவனர்கள் ஆர்.மூர்த்தி, ஆர்.தருமன், டாக்டர் சுப்பிரமணியம், பி.கே.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

        கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைகழகத்தின் அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் மா.பத்மநாபன் விழா சிறப்புரை ஆற்றுகிறார். ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம், பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி.ஏ.பழனிசாமி, புன்செய் புளியம்பட்டி நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார்கள்.

        இந்நிகழ்ச்சியில் கோபி, ஈரோடு, கோவை, திருப்பூர் கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட 200 இக்கும் மேற்பட்ட உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில் 2013-2014 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த சுமார்  600 மாணவ மாணவியர்களுக்கு விடியல் மாணவர் விருதுகள் வழங்கபடுகின்றன. மேலும் 100 % தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விடியல் சாதனை பள்ளி விருதுகள் வழங்கபடுகின்றன. சத்தி, கோபி பகுதிகளில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு விடியல் சாதனை விருதுகள் வழங்கபடுகின்றன.

      இவ்விழாவில் மாணவ மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொள்ளலாம்.  மேலும் விபரங்களுக்கு எஸ்.ஜெயகாந்தன் - 98427 80240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நிறைவில் விடியல் தலைவர் வாணி கே. தருமராசு நன்றி கூறுகிறார்.





Tuesday, July 15, 2014





 எளிமை, நேர்மை. அகராதியும் சொல்லும் அது காமராசர் என்று.
தன்னால் பெற முடியாத கல்வியை தமிழகம் எங்கும் கொண்டு சென்றவர்.
இந்த மனிதர் மன்னில் உதித்த தினம் இன்று



 
 
 
சென்னை: காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கறையில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்.

Monday, July 14, 2014

அனைத்து புத்தக ஆர்வலர்களுக்கு!



சென்னைக்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்திபெற்ற ஈரோடு புத்தக திருவிழா வருகின்ற ஆகஸ்ட் மாதம் 1 முதல் 12 வரை நடைபெறுகிறது. துவக்க விழாவில் இசைஞானி இளையராஜாவும் நிறைவு விழாவில் டாக்டர் அப்துல் கலாம் அவர்களும் பங்கு பெறுகிறார்கள். மேலும் தினமும் மாலை 6 மணிக்கு நடைபெறும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் புகழ்பெற்ற பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பங்கு பெறுகிறார்கள். கொங்கு மண்டலத்தின் மிகப்பெரிய அறிவு திருவிழாவில் அனைவரும் பங்கு கொண்டு பயன் பெறுவோம்!
 
சென்னை: வீடுகளுக்கு பேப்பர், பால் வருவது போல புதிய சினிமா படங்களும் இனி வீடு தேடி வரும் வகையில் இயக்குநர் சேரன் சினிமா டு ஹோம் (C2H) என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி உள்ளார். டி.வி.டி., டி.டி.எச், இணையதளம், செட்ஆஃப் பாக்ஸ், மொபைல், சிடி உள்ளிட்ட வழிகளில் வீடுதோறும் சினிமாவை எடுத்துச் செல்லும் வகையில்தான் சினிமா டு ஹோம் (Cinema to Home) என்ற புதிய நிறுவனத்தை இயக்குநர் சேரன் தொடங்கியிருக்கிறார்.



இந்த நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநரும், சினிமா டு ஹோம் நிறுவனருமான சேரன் பேசியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சி, மக்களின் ரசனை மாற்றம் உள்ளிட்ட பலவற்றால் சினிமா தொழில் நாளுக்குநாள் நலிவடைந்து வருகிறது. நட்சத்திர நடிகர்களின் படங்களைத் தவிர்த்து மற்ற படங்களுக்கு திரையரங்குகள் இல்லாத நிலை அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ளது.

சினிமாவை நம்பி பயணம் செய்பவர்களில் இன்னும் நிறைய பேர் கரை சேரவில்லை. இருந்தாலும் அடுத்த பயணத்துக்கான படகுகளை தினம் தினம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

5 ஆண்டுகளுக்கு முன் இருந்த சினிமாவின் நிலைமை தற்போது மாறியுள்ளது. இதற்கு நாளுக்கு நாள் மாறி வரும் மக்களின் ரசனை மாற்றங்கள், தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி ஆகியவையே காரணம். இதனால் கோடம்பாக்கத்தில் கனவுகளுடன் திரிந்து கொண்டிருப்பவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

நான் இயக்கியுள்ள ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படம் தணிக்கைச் சான்றிதழ் பெற்று 8 மாதங்கள் ஆகியும் வெளியிட முடியாத நிலை உள்ளது. அப்படத்தை இன்றைய சூழலில் திரைக்கு கொண்டு வந்தால், அப்படத்தால் நான் பெற்ற கடனை அடைக்க முடியாது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக எடுத்த முடிவுதான் இது. நண்பர்களின் துணையுடன் பலவிதங்களில் ஆராய்ந்த பின்னர் முடியும் என்கிற நிலையில் இந்நிறுவனம் உதயமாகியுள்ளது.

நடப்பாண்டில் தணிக்கைச் சான்றிதழ் பெற்ற படங்களின் எண்ணிக்கை 298, ஆனால் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 143, வெளிவராத படங்கள் 155 ஆகும். இதுதான் தற்போதைய தமிழ் சினிமாவின் நிலை.

இதை மாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். இது திரையரங்குகளுக்கு எதிரான நிறுவனம் கிடையாது. திரையரங்குகள் மூலம் படம் வெளிவரும் அதே சமயத்தில் இந்நிறுவனம் மூலமும் படம் வெளிவரும். திரையரங்குகளின் நலனை இந்நிறுவனம் ஒரு போதும் பாதிக்காது.

தரமான படங்களை இந்நிறுவனத்தின் மூலம் வெளியே கொண்டு வருவோம். தவறான முறையில் படங்களை பதிவிறக்கம் செய்வோர், பதிவு செய்வோர் ஆகியோரைக் கண்காணிக்க குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம். இதில் 7,000 தொழிலாளர்கள் பணிபுரிய இருக்கிறார்கள். இவ்வாறு சேரன் பேசினார்.

திரை உலகம் வாழ்த்து



இந்த புது முயற்சிக்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், சீமான், அமீர் உள்ளிட்ட திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துப் பேசினர்.










கவிஞர் வைரமுத்து அவர்களின் வைரவிழா நிகழ்ச்சியில் மதன் கார்கி அவர்களுடன் விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன்


கவிஞர் வைரமுத்து அவர்களின் வைரவிழா நிகழ்ச்சியில் கபிலன் வைரமுத்து அவர்களுடன் விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன்


கவிஞர் வைரமுத்து அவர்களின் வைரவிழா கோவை கொடிசியா வழக்கத்தில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், ந.மகாலிங்கம், நீதிபதி விமலா, வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின் சில புகைப்பட துளிகள்.....







சத்தியில் வேளாண் பல்கலைக்கழக மாணவியருக்கு  களப்பயிற்சி
 
 
 
சத்தியமங்கலம்,ஜூலை 14:
கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவியருக்கு பவானிசாகர் வட்டாரத்தில் உள்ள தோட்டங்களில் களப்பயிற்சி அளிக்கப்படுகிறது. 

ஊரக வேளாண் பயிற்சி மற்றும் கிராம தங்கல் திட்டத்தின் கீழ்  கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் சத்தி அரியப்பம்பாளையத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

அவர்கள் கிராமங்களில் தங்கி வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை விற்பனைத் துறை போன்ற வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து பயிற்சி பெற்றனர்.  விவசாயிகளிடமும் நேரடியாகத் தொடர்பு கொண்டு நவீன தொழில் நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும்,பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளிடம் நேரடியாகக் கேட்டறிந்து கள அனுபவம் பெற்றனர்.சிவியார்பாளையத்தில் தென்னை டானிக்கை வேர் மூலம் தென்னைக்கு செலுத்தும் முறையை விவசாயிகளுக்கு மாணவிகள் விளக்கினர். தென்னை டானிக் தமிழநாடு வேளாண் பல்கலைக்கழக பயிர் வினையல் துறையில் தயாரிக்கப்பட்டது.
மது அருந்த அனுமதி:
ஆசனூர் தனியார் தங்கும் விடுதிகளில் மீது வழக்குப்பதிவு



சத்தியமங்கலம்,ஜூலை 14:
ஆசனூரில் மதுஅருந்த அனுமதி அளித்ததாக 5 தங்கும் விடுதிகள் மீது ஆசனூர் போலீஸார் வழக்குப்பதிவு  செய்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனச்சரகத்தில் மது அருந்த அனுமதி கிடையாது.அங்குள்ள தனியார் தங்கும் விடுதிகளுக்கும் கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், தனியார் தங்கும் விடுதிகளில் அனுமதியின்றி மதுஅருந்துவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து தாளவாடி காவல் ஆய்வாளர் பழனியப்பன் தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தனியார் விடுதிகளில் சோதனையிட்டனர்.அப்போது, சுந்தரமூர்த்தி,கற்பூரத்தோட்டம்
, மனோகரன், கேஏஎஸ் மற்றும் மாவள்ளம் முருகன் ஆகியோரது தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்கி மருஅருந்தியது தெரியவந்தது. இது தொடர்பாக, தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் மீது வழங்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்
புன்செய்புளியம்பட்டி ட்ரீ அமைப்பின் சார்பில் 1000 மரக்கன்றுகள் விநியோகம்.  20 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.

 
புன்செய்புளியம்பட்டி;ஜூலை;14;

புன்செய்புளியம்பட்டி ட்ரீ சமூக நல அமைப்பின் சார்பில் 1000 மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியில், ட்ரீ சமூக நல அமைப்பு  
இயங்கி வருகிறது.இந்த இயக்கத்தின் மூலம்,ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு,பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,புன்செய் புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற பகுதிகளில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு,ட்ரீ அறக்கட்டளை தலைவர் ஆர்.சீனிவாசன் தலைமை வகித்தார்.ஆர்.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.வழக்கறிஞர் மு.கனகராஜன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்.

புன்செய் புளியம்பட்டி,ஊத்துக்குளியம்மன் கோவில் பகுதி மற்றும்,அதன் சுற்றுவட்டார பகுதிகளான,நல்லூர்,புங்கம்பள்ளி,அனையப்பாளையம்,தச்சுப்பெருமாள் பாளையம்,அய்யம்பாளையம்,தொட்டிபாளையம்,விண்ணப்பள்ளி,பேரநாயக்கன்புதூர் உள்ளிட்ட, கிராமப்புற பகுதிகளில்,மொத்தம் 1000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.இதில்,புங்கன்,வேம்பு,நாகலிங்கம்,சரக்கொன்றை,சக்கரைப்பழம்,பூவரசன்,பாதாம்,அசோகமரம்,நாவல்,வேங்கை,செண்பகம்,தேக்கு,நெல்லி ஆகிய மர வகைகளின் கன்றுகள் வழங்கப்பட்டன.பின்னர் மரக்கன்றுகள்,அப்பகுதியில் குழி தோண்டி நடப்பட்டன. 

ட்ரீ அறக்கட்டளை தலைவர் ஆர்.சீனிவாசன் பேசும்போது;மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத்தயாரிக்கும் திறனைப்பெற்றுள்ளன.நச்சு வாயுவை உட்கொள்வதும்,பிராண வாயுவை வெளியிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று.வேலை நேரம் தவிர,நாம் பெரும்பாலான நேரம் வீட்டில் தான் கழிக்கிறோம் வீட்டைச்சுற்றிலும் மரங்கள்,செடி,கொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.ஒரு மரம் தன் வாழ் நாளில் 1000 கிலோ கார்பன் டை ஆக்சைடை கிரகித்து கொள்கிறது. மேலும்,மரங்கள் மண் அரிப்பை தடுக்கின்றன.மரத்தை சுற்றி நீர் சேகரமாவதால்,நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கிறது.உயிரோடு இருக்கும் போது மட்டுமின்றி,இறந்த பின்பும் மரங்கள் ஏழை மக்களின் வீடுகளில் விறகாக எரிபொருளாக பயன்படுகிறது.ஆகவே,மரம் வளர்ப்போம்.மழை பெறுவோம்.மரக்கன்றுகள் வைத்து,பராமரிக்க விருப்பமுள்ளவர்கள் 9578903141 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில்,சமுக நல ஆர்வலர்கள்,ஒக்கலிகர் மகாஜன சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள்,மற்றும் இதய வேடர்கள் மன்றம்,நமது கிராமம் ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள்,பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Saturday, July 12, 2014

கீழ்முடுதுறை திம்மராயப்பெருமாள் கோவில் இரண்டாம் ஆண்டு திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.


 
 

 
 
புன்செய் புளியம்பட்டி

புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள கீழ்முடுதுறை திம்மராயப்பெருமாள் கோவில் இரண்டாம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இவ்விழாவில்ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர்.

ஈரோடு மாவட்டம்,புன்செய் புளியம்பட்டி அருகே கீழ்முடுதுறையில்,ஒக்கலிகர் இன பட்டக்காரர் குல மக்களின் குல தெய்வமாக அமைந்துள்ளது,திம்மராயப்பெருமாள் கோவில்.இக்கோவிலின் கும்பாபிசேக விழா கடந்த 2012 ஆம்  ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்றது,தொடர்ந்து,48 நாட்கள் தினசரி மூன்று கால சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 48 ஆம் நாள் மண்டலபூஜை கொண்டாடப்பட்டது.

இந்நிலையில்,திம்மராயப்பெருமாள் கோவில் கும்பாபிசேக விழா நடத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில்,இரண்டாம் ஆண்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு,அறங்காவலர் குழுத்தலைவர் எஸ்.வி.கிரி தலைமையில் விழா துவங்கியது. 

விழாவையொட்டி, ஜூலை 7 ஆம் தேதி காலை திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.தொடர்ந்து, நவகலசஸ்தா பனம், ஹோமத்துடன், திவ்யபிரபந்தம், வேதபாராயணம் ஓதப்பட்டது. அதனைத்தொடர்ந்து, திம்மராயப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி,உற்சவ தெய்வங்களுக்கு அலங்கார  திருமஞ்சனம், திருவாராதனம்  நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர்,வேதபிரபந்த சாற்று முறையுடன், தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது.  

பின்னர்,திம்மராயப்பெருமாள்,ஸ்ரீதேவி, பூதேவி,உற்சவ தெய்வங்களுக்கு  சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாரதனை  பூஜைகள் நடந்தன.

விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அன்னதானம் (ததியாராதனம்) வழங்கப்பட்டது. மேலும்,விழாவில் ஆதிமாதையனூர் பஜனைக்குழுவினரின் பஜனைப்பாடல்களுடன், கோலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,ஆண்கள்,பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு  கோலாட்டம் ஆடினர்.  

விழா ஏற்பாடுகளை,அறங்காவலர் குழுவின் என்.தங்கவேல், ஏ.திம்மையன், என்.நடராஜ்,ஏ.ரவிச்சந்திரன் மற்றும் ஒக்கலிகர் இன பட்டக்கார குல மக்கள் செய்திருந்தனர்.


 சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி சோதனை சாவடியில் காவல்துறை சார்பில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வைக்கப்பட்ட எச்சரிக்கை பேனர்.திம்பம் மலைப்பாதை 27வது வளைவில் அடிக்கடி சிறுத்தை தென்பட்டதையடுத்து இரவு நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது


சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் மதுவிலக்கு சோதனைச் சாவடிக்கு புதியதாக ரோந்து வாகனம்  வழங்கப்பட்டடுள்ளது. தமிழக கர்நாடக இடையே எரிசாராய கடத்தலை தடுக்க இந்த ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

 
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 46 அடியாக சரிந்துள்ளது.அணைக்கு நீர்வரத்து 100 கனஅடியாகவும் அணையில் இருந்து பவானிஆற்றுக்கு 950 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது.