தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 8, 2015

சத்தி பெரியூர் மாகாளியம்மன் கோவில் விழா




சத்தியமங்கலம், ஏப்.8:
சத்தியமங்கலம் அடுத்துள்ள பெரியூர் மாகாளியம்மன் கோவிலில் புதன்கிழமை நடந்த குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

சத்தியமங்கலம் அடுத்துள்ள பெரியூர் மாகாளியம்மன் கோவில் விழா மார்ச் 24-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 31-ஆம் தேதி திருக்கம்பம் சாட்டுதலும் ஏப்.3-இல் கிராமசாந்தி, 4-ஆல் கொடியேற்றம் மற்றும் 6-இல் புதுவரம் காப்புக்கட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி, நாள்தோறும் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை நடந்த கரும்பு கொண்டு வருதல் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பங்கேற்று குண்டத்துக்கு தேவையான வேம்பு மற்றும் ஊஞ்சல் மரங்களை காணிக்கையாக அளித்தனர். அன்றிரவு 60 அடி தீக்குண்டம் வார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புஷ்பப் பல்லாக்கில் மின்விளக்கு அலங்காரத்துடன் அம்மன் அழைத்தல வரம் பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

புகன்கிழமை காலை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூசாரி செல்லி குண்டத்துக்கு சிறப்புபூஜைகள் செய்து முதலில் குண்டம் இறங்கினார். தொடர்ந்து குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கினர்.

பெரியூர், செண்பகபுதூர்,ஜல்லியூர், மில்மேடு, மூலக்கிணறு, கொத்துக்காடு, அரியப்பம்பாளையம், உக்கரம், ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். புதன்கிழமை மாலை நடைபெற்ற தேரோட்டம் நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், அரியப்பம்பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். சத்தியமங்கலம் போலீஸார் பாதுகாப்பு பணயில் ஈடுபட்டிருந்தனர்.
பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

 
சத்தியமங்கலம், ஏப். 7:
சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, வேண்டுதலை நிறைவேற்றினர்.

பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா கடந்த மார்ச் 23-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. அன்றிரவு திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஏப்.6-ஆம் தேதி வரை நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக குண்டம் விழா திங்கள்கிழமை இரவு துவங்கியது. பக்தர்கள் காணிக்கையாக அளித்த வேம்பு, ஊஞ்சல் மரத்துண்டுகளை கொண்டு திங்கள்கிழமை இரவு தீக்குண்டம் வளர்க்கப்பட்டது. முன்னதாக, தீக்குண்டத்தில் 5 டன் வேம்பு, ஊஞ்சல் மரம் போடப்பட்டு கற்பூரம் மூலம் தீ மூட்டப்பட்டது. 6 மணி நேரத்துக்கு பிறகு கோயில் ஊழியர்கள் இதனை 6 அடி நீளமுள்ள குண்டமாக அமைத்தனர். 

குண்டத்தில் மஞ்சள், பூண்டு, புகையிலை, மிளகு மற்றும் உப்பு உள்ளிட்ட பல பொருள்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். மேலும் சில பக்தர்கள் நாட்டுக்கோழிகளையும் நேர்த்திக்கடனாக செலுத்தினர். 

பண்ணாரி அம்மனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டு வீணை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு படைக்கலத்துடன் திருக்குளம் சென்று அம்மன் அழைத்து வரம் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு சருகுமாரியம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, தாரை தப்பட்டை முழங்க, மேளதாளங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டது.

குண்டத்தில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்தும் மலர்களை குண்டத்தில் தூவியும் அதிகாலை 3.55 மணிக்கு முதலில் பூசாரி ராஜசேகர் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார். தொடர்ந்து படைக்கலத்துடன் வந்த பக்தர்கள் உற்சவரை சப்பரத்தில் சுமந்தபடி குண்டம் இறங்கினர்.

அதனைத் தொடர்ந்து, குண்டம் இறங்கிய லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குள் நேரடியாக சென்று அம்மனை தரிசித்து சென்றனர். பக்தர்களுடன் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்தியபாமா, ஐஏஎஸ் அதிகாரி அமுதா, இந்து சமய அறிநிலையத்துறை ஆணையர் மா.வீரசண்முகமணி, சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் குண்டம் இறங்கினர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் குண்டம் பகுதிகளை ஆய்வு செய்து பக்தர்களை வரிசைபடுத்தினர்.

விழாவில் கைக்குழந்தைகளுடன் பெண்கள், திருநங்கைகள், மற்றும் சிறுவர்கள் முதல் முதியோர் வரை குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் அதிகாலை 3.55 மணிக்கு துவங்கிய குண்டம் நிகழ்ச்சி மாலை 5.30 வரை நீடித்தது. அதன்பிறகு கால்நடைகள் குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கர்நாடக மாநிலம் மைசூர்,சாம்ராஜ்நகர், புதுவை மற்றும் தமிழகத்தில் மதுரை, கோவை, சேலம், தருமபு,திருப்பூர், ஈரோடு, கோபி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். பக்தர்கள் நடைபயணமாகவும் அக்னிசட்டி ஏந்தியும், தங்கள் குழந்தைகளுக்கு முடி காணிக்கை அளித்தும் அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் ரகசிய கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் மற்றும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 

விழாவையொட்டி, இன்னிச்சை கச்சேரி, பக்திஇசை, பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் 2000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா: குண்டம் இறங்கும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம்

பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா: குண்டம் இறங்கும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா

பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா: குண்டம் இறங்கும் சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம்

பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா: கைகுழந்தையுடன் குண்டம் இறங்கும் பெண்

பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா: சப்பரத்தை தோளில்சுமந்தபடி குண்டம் இறங்கும் பக்தர்கள

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழாவில் சென்னை லக்ஷ்மன் சுருதி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியில் புரட்சி தலைவர் வேடத்தில் நடனம்

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழாவில் பூசாரி ராஜசேகர் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார். தொடர்ந்து படைக்கலத்துடன் வந்த பக்தர்கள் உற்சவரை சப்பரத்தில் சுமந்தபடி குண்டம் இறங்கினர்.




சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழாவில் கொழுந்து விட்டு எரியும் தீ, மற்றும் தகதக என மின்னும் குண்டம்.




 சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழாவில் மேளதாளங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டது.



Tuesday, April 7, 2015

பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
 


சத்தியமங்கலம், ஏப். 7:
சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, வேண்டுதலை நிறைவேற்றினர்.

பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா கடந்த மார்ச் 23-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. அன்றிரவு திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஏப்.6-ஆம் தேதி வரை நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக குண்டம் விழா திங்கள்கிழமை இரவு துவங்கியது. பக்தர்கள் காணிக்கையாக அளித்த வேம்பு, ஊஞ்சல் மரத்துண்டுகளை கொண்டு திங்கள்கிழமை இரவு தீக்குண்டம் வளர்க்கப்பட்டது.  முன்னதாக, தீக்குண்டத்தில் 5 டன் வேம்பு, ஊஞ்சல் மரம் போடப்பட்டு கற்பூரம் மூலம் தீ மூட்டப்பட்டது. 6 மணி நேரத்துக்கு பிறகு கோயில் ஊழியர்கள் இதனை 6 அடி நீளமுள்ள குண்டமாக அமைத்தனர். 

குண்டத்தில் மஞ்சள், பூண்டு, புகையிலை, மிளகு மற்றும் உப்பு உள்ளிட்ட பல பொருள்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். மேலும் சில பக்தர்கள் நாட்டுக்கோழிகளையும் நேர்த்திக்கடனாக செலுத்தினர். 

பண்ணாரி அம்மனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டு வீணை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு  படைக்கலத்துடன் திருக்குளம் சென்று அம்மன் அழைத்து வரம் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு சருகுமாரியம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, தாரை தப்பட்டை முழங்க, மேளதாளங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டது.

குண்டத்தில் கற்பூரம் ஏற்றி  பூஜை செய்தும் மலர்களை குண்டத்தில் தூவியும் அதிகாலை 3.55 மணிக்கு முதலில் பூசாரி ராஜசேகர் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார். தொடர்ந்து படைக்கலத்துடன் வந்த பக்தர்கள்  உற்சவரை சப்பரத்தில் சுமந்தபடி குண்டம் இறங்கினர்.

அதனைத் தொடர்ந்து, குண்டம் இறங்கிய  லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குள் நேரடியாக  சென்று அம்மனை தரிசித்து சென்றனர். பக்தர்களுடன் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்தியபாமா, ஐஏஎஸ் அதிகாரி அமுதா, இந்து சமய அறிநிலையத்துறை ஆணையர் மா.வீரசண்முகமணி, சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் குண்டம் இறங்கினர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் குண்டம் பகுதிகளை ஆய்வு செய்து பக்தர்களை வரிசைபடுத்தினர்.

 விழாவில் கைக்குழந்தைகளுடன் பெண்கள், திருநங்கைகள், மற்றும் சிறுவர்கள் முதல் முதியோர் வரை குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் அதிகாலை 3.55 மணிக்கு துவங்கிய குண்டம் நிகழ்ச்சி மாலை 5.30 வரை நீடித்தது. அதன்பிறகு கால்நடைகள் குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கர்நாடக மாநிலம்  மைசூர்,சாம்ராஜ்நகர், புதுவை மற்றும் தமிழகத்தில் மதுரை, கோவை, சேலம், தருமபு,திருப்பூர், ஈரோடு, கோபி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர்.  பக்தர்கள் நடைபயணமாகவும் அக்னிசட்டி ஏந்தியும், தங்கள் குழந்தைகளுக்கு முடி காணிக்கை அளித்தும் அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவையொட்டி, கோயில் வளாகத்தில்  ரகசிய கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் மற்றும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 

விழாவையொட்டி, இன்னிச்சை கச்சேரி, பக்திஇசை, பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் 2000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
இன்று பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா
 




பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு துவங்குகிறது.

மார்ச் 31-ஆம் தேதி பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) நடைபெறுகிறது.

இதில், பங்கேற்க தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கடந்த வாரம் முதலே வந்து குவிந்துள்ளனர்.

இதையடுத்து, திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் தீக்குண்டம் வார்க்கப்பட்டது. இந்த தீக்குண்டம் நள்ளிரவு 1 மணியளவில் பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு ஏதுவாக சமன்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு குண்டம் திருவிழா துவங்குகிறது. முதலில் கோயில் பூசாரி குண்டம் இறங்குவார். அதைத் தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கித் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்துவர்.
பவானிசாகர் அணை நீர்மட்டம் 57.96 அடி 



பவானிசாகர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை நிலவரப்படி 57.96 அடியாக இருந்தது.

அணையின் அதிகபட்ச நீர்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 1,028 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து ஆற்றில் 500 கன அடி நீரும், வாய்க்காலில் 1,800 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டது. அணையில் நீர் இருப்பு 6.62 டி.எம்.சி.
 குண்டம் விழாவுக்கு சென்ற பெண் யானை தாக்கி பலி 



பு.புளியம்பட்டி, ஏப்.7–
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மசாத்தாள் (வயது 55). இவரும் இவரது மகன் நாகராஜனும் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவில் கலந்து கொள்ள புளியம்பட்டியில் இருந்து பாத யாத்திரையாக கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
நேற்று இரவு 9.10 மணியளவில் பவானிசாகர் நான்குரோடு பகுதியில் நடந்து சென்றனர். அவர்கள் பின்னால் மேலும் சில பக்தர்களும் நடந்து வந்தனர். ரோட்டின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி ஆகும்.
அப்போது ரோட்டோரம் ஒருமரத்தின் அடியில் யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. தாயும், மகனும் ரோட்டில் நடந்து வந்ததை கண்ட அந்த யானை ஆவேசத்துடன் அவர்களை நோக்கி ஓடி வந்தது.
இதை எதிர்பார்க்காத அவர்கள் சத்தம் போட்டு கொண்டே உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினர். யானையும் விடாமல் விரட்டி பெண் பக்தர் மசாத்தாளை துதிக்கையால் தூக்கி வேகமாக வீசியது.
தன் கண் முன் தாயை யானை தூக்கி வீசியதை கண்ட மகன் நாகராஜன் வெல வெலத்து போனார். கூக்குரலிட்டார். அப்போது பின்னால் நடந்து வந்த மற்ற பக்தர்கள் யானையை விரட்ட ஓசை எழுப்பியபடி வந்தனர். இந்த சத்தத்தை கேட்டு மிரண்ட யானை பிறகு திரும்பி சென்றுகாட்டுக்குள் புகுந்தது. இதனால் நாகராஜன் உயிர் தப்பினார்.
இந்த நிலையில் யானையால் தூக்கி வீசப்பட்ட மசாத்தாள் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு ஒரு டவுன் பஸ்சில் ஏற்றி புளியம்பட்டிக்கு கொண்டு சென்றனர். பிறகு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
யானை தாக்கப்பட்டு பெண் பக்தர் பலியான சம்பவத்தை கேட்டு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினர் யாரும் அங்கு வராததால் ஆத்திரமும் கொண்டனர். பிறகு அவர்களை கண்டித்து பவானிசாகர்– மேட்டுபாளையம் ரோட்டில் அமர்ந்து இரவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதையொட்டி சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்தனர். மேலும் பண்ணாரி குண்டம் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தியும் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியல் நடத்தியவர்களிடம் சமரசம் செய்தார். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு பக்தர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் நள்ளிரவில் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Sunday, April 5, 2015

பண்ணாரி அம்மன் குண்டம் விழா - கனரக வாகனங்கள் செல்லத் தடை

 
பண்ணாரி அம்மன் குண்டம் விழா நடைபெறுவதையொட்டி, திங்கள்கிழமை மாலை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

சத்தியில் இருந்து பண்ணாரி, திம்பம் வழியாக மைசூரு செல்லும் கனகர வாகனங்கள் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி முதல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி வரை கோயில் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகன ஓட்டுநர்கள் புதுவடவள்ளி பகுதியில் தங்களது லாரிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். போக்குவரத்து போலீஸாரின் இந்த தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை மாலை வரை நீடிக்கும். பால், காய்கறி வேன் போன்ற அத்தியாவசிய வாகனங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.

சேலம், ஈரோடு, அந்தியூர், பவானி, கோபி ஆகிய பகுதிகளில் இருந்து குண்டம் இறங்க வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை புதுகுய்யனூர் தாற்காலிக பேருந்து நிறுத்தத்திலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் ராஜன் நகர் பேருந்து நிறுத்தத்திலும் நிறுத்த வேண்டும். விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி மோகன் தெரிவித்துள்ளார்.
நாளை பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா



பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) நடைபெற உள்ளது. இதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர்.

பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா மார்ச் 23-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, கோயிலில் தினமும் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் விழா செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) காலை 4 மணிக்கு நடைபெறும். இதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.

இதையொட்டி, பக்தர்கள் வசதிக்காக கோயில் வளாகத்தில் அலுமினிய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இரவு குண்டத்தில் தீ வார்க்கப்படுவதற்கு தேவையான 5 டன் வேம்பு, ஊஞ்சல் மர விறகுகளை பக்தர்கள் காணிக்கையாக வழங்கி வருகின்றனர். இவ்வாறு வழங்கப்பட்ட விறகுகள் கோவில் குண்டம் முன் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.

குண்டம் இறங்கும் பக்தர்கள் புதன்கிழமை முதலே கோயிலுக்கு வரத் துவங்கிவிட்டனர். கர்நாடகத்தைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மாட்டு வண்டிகளில் குடும்பம், குடும்பமாக வந்து கோயிலில் முகாமிட்டுள்ளனர். மேலும் திருச்சி, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிய துவங்கிவிட்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பக்தர்களின் வசதிக்காக, உணவு, குடிநீர், சுகாதாரம், தங்கும் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர். கோவை, சேலம், உதகை, கோத்தகிரி, குன்னூர், கோபி, அந்தியூர், ஈரோடு மற்றும் கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் ஆகிய இடங்களில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சத்தியில் இருந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து வீதம் நூற்றுக்கணக்கான அரசு சிறப்பு பேருந்துகள் பண்ணாரிக்கு இயக்கப்படுகின்றன.

Thursday, April 2, 2015

குண்டம் விழா: பண்ணாரிஅம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்   
 
 

 
சத்தியமங்கலம்,ஏப்ரல் 2 :
 
பண்ணாரி்அம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி, பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வரத் துவங்கியுள்ளனர். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வதால் வியாழக்கிழமை முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரி்அம்மன் கோவில் குண்டம் விழா ஏப்.7-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, மார்ச் 23-ஆம் தேதி முதல் கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரிஅம்மன் சப்பரம் வீதி உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிக்கரம்பாளையம், புதூர், வெள்ளியம்பாளையம் புதூர் மற்றும் காளிதிம்பம் மலைவாழ்மக்கள் கலந்துகொண்டனர். கோவில் முன் உள்ள பிள்ளையார், முருகன், வனதேவதைகள் சருகு மாரியம்மன், மாதேஸ்வரன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து  அக்னி குழிக்கம்பம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

அப்போது, அக்னி குழிக்கம்பத்தில் இருந்து எழுந்த தீயை சுற்றியபடி மலைவாழ்மக்கள் தாரை, தப்பட்டை பீனாட்சி வாத்தியத்துடன் கூடிய அம்மன் புகழ்பாடும் களியாட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் நிகழ்ச்சி 7-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் 10 இடங்களில் நிழல்தரும் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, சேலம், மைசூர், ஆணைக்கட்டு, பெருந்துறை, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வரத் துவங்கியுள்ளனர்.  இதையடுத்து, பக்தர்களின் பாதுகாப்பு கருதி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது.   
நேரு நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா




நேரு நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் உதவி தொடக்க கல்வி அலுவலர் விஜயராணி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கார்த்திக் மற்றும் பள்ளி கல்வி குழுவினர், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் உள்பட பலர் பங்கு கொண்டனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்க பட்டது. பின்னர் மாணவ மாணவியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

Wednesday, April 1, 2015

பெரும்பள்ளம் அணை நீர்த்தேக்கப் பகுதியில் உயிருக்கு போராடும்  பெண் குட்டியானை
 


சத்தியமங்கலம், மார்ச் 31:
பெரும்பள்ளம் அணையின்  நீர்த்தேக்க பகுதியில் சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் குட்டியானைக்கு வன கால்நடை மருத்துவக் 
குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறது.

சத்தியமங்கலம் அடுத்துள்ள குத்தியாலத்தூர் வனத்தையொட்டி அமைந்துள்ளது பெரும்பள்ளம் அணை. இந்த வனப்பகுதியில் உள்ள காட்டுயானைகள் அங்குள்ள நீர்தேக்கப்பகுதியில் தண்ணீர் குடித்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில்,  செவ்வாய்க்கிழமை காலை அங்கு தண்ணீர் குடிக்க வந்த யானைகூட்டத்தில் 5 வயதுள்ள குட்டியானை மட்டும் சேற்றில் சிக்கிக்கொண்டது. அதனுடன் வந்த யானைகள் குட்டியை மீட்க போராடின.இதற்கிடையில்,நோயால் பாதிக்கப்பட்டு சோர்ந்து போன குட்டியானை சேற்றில் சுருண்டு விழுந்தது.அதனால் எழுந்து நிற்க முடியாதபடி உடல் நிலை மோசமடைந்தது. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு குட்டியை மீட்க முடியாமல் யானைகள் காட்டுக்குள் சென்றுவிட்டது. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் பாதிக்கப்பட்ட குட்டியானைக்கு  குளுகோஸ் செலுத்தி அதனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
திம்பம் மலைப்பாதையில் தீப்பற்றி எரிந்த லாரிகள்
 
 

தீயில் சேதமடைந்த லாரிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்

தீயில் கருகி நாசமான மாவுபவுடர் லாரியை அப்புறப்படுத்தும் ஜேசிபி 

சத்தியமங்கலம்,மார்ச் 30:
திம்பம் மலைப்பாதையில் நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் டீசல் டேங்க் வெடித்து சிதறியது. அப்போது, அதிலி்ருந்து வெளியேறிய தீப்பிளம்புகள்  லாரிகளில் பற்றிக்கொண்டதால் லாரிகளில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. விபத்தில் சிக்கிய ஓட்டுநர் காளிமுத்து உடல் கருகி உயிரிழந்தார். மற்றவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.

மைசூரில் இருந்து திருப்பூருக்கு பனியன்துணி பாரம் ஏற்றிய லாரி ஒன்று திங்கள்கிழமை அதிகாலை திம்பம் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநர் காளியமுத்து(35) ஓட்டினார். நண்பர்கள் செந்தில்(40),ஜாவூதின்(24) ஆகியோர் உடன் வந்தனர். 
அதேபோல், நாமக்கல்லில் இருந்து மைசூருக்கு மாவுபவுடர் பாரம் ஏற்றிய லாரி திம்பம் நோக்கி சென்று கொண்டிருந்த போது 27-ஆவது வளைவில் லாரி பழுதாகி நின்றது.  லாரியை பங்களாபுதூரைச் சேர்ந்த பழனிச்சாமி ஓட்டினர். சிறிது நேரத்தில், அவ்வழியாக வந்த பனியன்துணி பாரம் ஏற்றிய லாரி நின்ற லாரியின் டீசல் டேங்க் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியது. அப்போது, டீசல் டேங்க் பயங்கரசப்தத்துடன் வெடித்து சிதறியது. அதில் இருந்து வெளியேறிய தீப்பிளம்புகள் லாரிகள் மீது விழுந்ததில் இரு லாரிகளிலும் தீப்பீிடித்து கொளுந்துவிட்டு எரிந்தன. விபத்தின்போது, காளிமுத்துவின் கால் லாரியில் சிக்கிக்கொண்டதில் அவர் தப்பியோட முடியாமல் இருக்கையில் அமர்ந்தபடி தீயில் கருகி உயிரிழந்தார்.  இதில் செந்தில், ஜாவூதின் மற்றும் மற்றொரு ஓட்டுநர் பழனிச்சாமி ஆகியோர் காயமின்றி உயிர்தப்பினார்.

அங்கு வந்த ஆசனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் எஸ்.பி.பொன்னாமலை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நீர்தாங்கி வண்டியுடன் சென்று தீயை அணைக்க போராடினர்.  விபத்தின்போது, லாரியில் இருந்த சாயம் ஏற்றப்பட்ட பனியன்துணிகள் சாலையில் சிதறிகிடந்ததிலும் தீப்பற்றிக் கொண்டதால் அவற்றை களைத்து தண்ணீர்  பாய்ச்சி தீயை அணைத்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ பிற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது.

இச்சம்பவத்தையடுத்து, மைசூரில் இருந்து வந்த வாகனங்கள் திம்பம் மலைப்பாதையிலும் சத்தியில் இருந்து வந்த வாகனங்கள் பண்ணாரி மலைப்பாதையிலும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் இரு மாநிலங்களிடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு சேதமடைந்த லாரிகள் அப்புறப்படுத்தப்பட்டன
.
 திம்பம் மலைச்சரிவில் சுற்றுலா வேன் கவிழ்ந்தது 2 பேர் பலி




சத்தியமங்கலம்,மார்ச் 29:
திம்பம் மலைச்சரிவில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் வேன் ஓட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். அதில் பயணம் செய்த 19 பேர் காயமடைந்தனர்.

மதுரையை அடுத்துள்ள மேலூரைச் சேர்ந்தவர்கள் ராஜாமுகமது(72),பர்கானாபேகம்(81). இவர்களுக்கு மகன், மகள், பேரக்குழந்தைகள் என மொத்தமாக 18 பேர் உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள்  வேன் ஒன்றில் சில தினங்களுக்கு முன் மதுரையில் இருந்து புறப்பட்டு மைசூருக்கு சுற்றுலாவாக சென்றனர். வேனை ஓட்டுநர் ஆசைராஜ் நாடார்(41) ஓட்டினார். மைசூரில் சனிக்கிழமை இரவு தங்கி விட்டு, அனைவரும்  ஞாயிற்றுக்கிழமை காலை வேனில் புறப்பட்டு சத்தி நோக்கி வந்துகொண்டிருந்தனர்.  இதில் 9 ஆண்கள் உட்பட 21 பேர் இருந்தனர்.

இந்நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணி அளவில் தி்ம்பம் 3-ஆவது வளைவு பாதையில் வேன்  சென்று கொண்டிருந்தபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அப்போது, வேன் நிலைதடுமாறி சாலையோர தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 40 அடி மலைச்சரிவில் உருண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் ஆசைராஜ்நாடார்(45),  நாசர்அலி(32) ஆகியோர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர்.  விபத்தில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் அலறல் சப்தம் கேட்டு அவ்வழியாக வந்த பயணிகள் பண்ணாரி சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்தனர். 

அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்,லாரி ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள், விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அனைவரும் மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மீட்பு வாகனம் மூலம் வேன் மீட்கப்பட்டு, சத்திக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இச்சம்பவத்தையடுத்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பவயிடத்தை ஆய்வுசெய்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவர்,சிறுமிகளை பார்த்து அவர்கள் ஆறுதல் கூறினர். இந்த விபத்து குறித்து சத்தி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.