தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, October 29, 2014

2015ல் கமல் ஆதிக்கம்! கால் நூற்றாண்டுக்கு பிறகு கமலின் 3 படங்கள் ஒரே வருடத்தில் ரிலீஸ்




சென்னை: சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 3 படங்கள் ஒரே ஆண்டில் ரிலீசாக உள்ளன. அந்த வகையில் அடுத்த ஆண்டு கமல் ரசிகர்களுக்கும், கலை ரசிகர்களுக்கும் தித்திக்கும் ஆண்டாக அமையப்போகிறது. கமல்ஹாசன் இந்தாண்டு முழுவதுமே மூன்று படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருந்தார். உத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம்-2 ஆகிய மூன்று படங்களுக்காக ஆண்டு முழுவதையுமே அவர் செலவிட்டார். ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகும், உத்தமவில்லன் இந்த மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் நிலுவையிலுள்ளதால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தம வில்லன் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. அதையடுத்து பாபநாசமும், மூன்றாவதாக விஸ்வரூபம்-2 ஆகிய படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகி கமல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தப்போகின்றது. ஓராண்டில், கமலின் மூன்று படங்கள் வெளியாகி சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாவது இருக்கும் என்கிறார், திரைப்பட எழுத்தாளர் தனஞ்சயன் கோவிந்த். அந்த வகையில் இரு கால் நூற்றாண்டு சாதனையாகும். உத்தமவில்லன் படத்துக்கான சவுண்ட் மிக்சிங் பணிகளுக்காக, கமல்ஹாசன் விரைவிலேயே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல உள்ளார். அதே ஸ்டூடியோவில் விஸ்வரூபம்-2 படத்தின் சவுண்ட் மிக்சிங்கையும் முடித்துவிடப்போகிறார் கமல். மூன்று படங்களுக்குமான சூட்டிங் முடிந்துவிட்ட நிலையில், பிந்தைய பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் புதன்கிழமை டேங்கர் பழுதாகி நின்றதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அங்கு வந்த நெடுஞ்சாலை போலீஸார் மீட்பு வாகனம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
சத்தியமங்கலம் பகுதியில் 2-ஆவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு




சத்தியமங்கலம், அக் 28: தொடர்ந்து பெய்யும் மழையால் சத்தி பகுதியில் 2-ஆவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்ப்டடது.

சத்தியமங்கலம் வட்டாரத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெரும்பள்ளம் அணை, பெரியகுளம், வனக்குட்டைகள் உள்ளிட்ட தடுப்பணைகள் மழைநீர் நிரம்பி வழிகின்றன. குளம்,குட்டைகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் பள்ளங்கள் வழியாக வெளியேறி பவானிஆற்றில் கலக்கின்றன.

வனப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் ஓரிடத்தில் சேர்ந்து காட்டாற்று வெள்ளமாக மாறி பள்ளங்களில் கரைபுரண்டு ஓடுகின்றன. மழை வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி செல்வதால் சத்தி-அத்தானி சாலை, சத்தி-கொமாரபாளையம் சாலை, தாசப்பகவுண்டர்புதூர்-கொடிவேரி சாலை ஆகிய வழித்தடத்தில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியில் இருந்து காடகநல்லி, மாக்கம்பாளையம், கேர்மாளம் மற்றும் அத்தானி வழித்தடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தி வாரச்சந்தை சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டன. 4 மணிநேரத்துக்கு பிறகு வெள்ளநீர் தணிந்தால் சத்தி அத்தானி சாலையில் மீண்டும் போக்குவரத்து துவங்கியது.

பெரியகுளம் ஏரி நிரம்பி வழிவதால் அதனையொட்டியுள்ள தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட மழைநீர், சம்பங்கி, மல்லி, கரும்பு மற்றும் வாழைகள் நீரிழ் மூழ்கின. வெள்ளத்தில் பெரியகுளம் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் 2-ஆவது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெள்ளநீர் தேங்கியுள்ள பகுதியில் ஜேசிபி மூலம் வடிகால் ஏற்படுத்தி வெள்ளநீர் தேங்கி நிற்காதபடி மாற்று வழியில் மழைநீர் வெளியேற்றப்பட்டது.
பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றிற்கு தண்ணீர் திறப்பது முற்றிலுமாக நிறுத்துவைக்கப்பட்ட போதிலும், பல்வேறு பள்ளங்களில் பாய்ந்து ஓடும் வெள்ளநீர் பவானிஆற்றில் கலந்து இரு கரைகளை தொட்டிபடி செல்கிறது.

சத்தி அங்கண்ணகவுண்டர்புதூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி தோட்டத்தில் வெள்ளநீர் புகுந்து தேங்கி நின்றதால் மரவள்ளிக்கிழங்கு பயிர் சேதமடைந்தன. தோட்டத்தில் இருந்து பாய்ந்து ஓடிய வெள்ளநீர் காட்டாற்று வெள்ளம் போல காட்சியளித்தது.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்தமழை காரணமாக அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 81.13 அடியாகவும், நீர் இருப்பு 16.2 டிஎம்சியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10377 கன அடியாகவும் உள்ளது. பவானிஆறு மற்றும் கால்வாய்க்கு தண்ணீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

சத்தி கோணமூலை ஊராட்சிக்குபட்ட காலனியில் மழையால் சேதமடைந்த 12 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஜேசிபி மூலம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் சேதமைடந்த பகுதிகளை தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம், மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி நகராட்சித்தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், சத்தியமங்கலம் வட்டாட்சியர் சேதுராஜ், கோணமூலை ஊராட்சித் தலைவர் எஸ்.பத்மின்சண்முகம், அதிமுக ஓன்றிய செயலாளர்கள் சி.என்.மாரப்பன்,வி.ஏ.பழனிச்சாமி மற்றும் வி.சி.வரதராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்


வெள்ளநீரில் மூழ்கிய சத்தியமங்கலம் அத்தானி சாலை


சத்தியமங்கலம் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த பெரியகுளம் சாலையை சீரமைக்கும் பணியை பார்வையிடுகிறார் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம்,மாவட்ட ஆட்சியர் பிரபாகரன்,மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் உள்ளிட்டோர்


சத்தியமங்கலம் மழையால் சேதமடைந்த வீட்டை பார்வையிடுகிறார் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம். உடன், மாவட்ட ஆட்சியர் பிரபாகரன்,மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், கோணமூலை ஊராட்சித் தலைவர் எஸ்.பத்மினிசண்முகம் உள்ளிட்டோர்


சத்தியமங்கலம் அங்கண்ணகவுண்டர்புதூரில் உள்ள விவசாய நிலத்தில் இருந்து வெளியேறும் வெள்ளநீர்
மழையால் வீடுகள் சேதம்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் நிவாரணம் வழங்கல்


சத்தியமங்கலம்,அக் 29:
சத்தியமங்கலம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வெள்ள நிவாரண உதவிகளை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வழங்கினார்.

சத்தியமங்கலம் வட்டாரத்தில் கன மழை பெய்துள்ளதால் பல்வேறு இடங்களில் மண் வீடுகள்,குடிசைகள் இடிந்து விழந்தன.குள்ளங்கரடு, சிக்கரசம்பாளையம், பவானிசாகர் அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து வீடுகள் சேதமடைந்துள்ளன.கோணமூலை ஊராட்சிக்குட்பட்ட நஞ்சப்பகவுண்டர் புதூர் காலனியில் உள்ள 12 வீடுகள் மழையால் இடிந்துவிழந்தன. புன்செய் புளியம்பட்டி சுங்கக்காரன்பாளையத்தில் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.மழையால் பாதிக்கப்பட்ட பெரியகுளம், நஞ்சப்பகவுண்டர் புதூர் ஆகிய இடங்களை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம்,மாவட்ட ஆட்சியர் பிரபாரகன், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரொக்கம் ரூ.5 ஆயிரம்,அரிசி மற்றும் வேஷ்ட-சேலைகளை அமைச்சர் வழங்கி பேசுகையில் பாதிக்கப்பட்ட தகுதியுள்ள குடும்பங்களுக்கு பசுமைவீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் கோணமூலை ஊராட்சித் தலைவர் எஸ்.பத்மினிசண்முகம், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சி.என்.மாரப்பன், வி.ஏ.பழனிச்சாமி,வி.சி.வரதராஜ், ஊராட்சி செயலாளர் எஸ்.மணிகண்ட சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tuesday, October 28, 2014

 சகாயம் குழுவை எதிர்த்து வழக்கு ; தமிழக அரசுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்





சென்னை: கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் தலைமையிலான குழு நியமனத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வழக்கு தொடுத்த தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தது. மேலும் தமிழக அரசின் காலதாமதத்திற்கு நீதிபதிகள் கடும் கண்டனமும் தெரிவிதனர் . இதனையடுத்து சகாயம் தலைமையிலான குழுவினர் கிரானைட் ஊழல் தொடர்பான பிரச்னையை உடனடியாக விசாரிக்க களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோர்ட் தீர்ப்பை பா.ஜ., கம்யூ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.

மதுரை மேலூர் பகுதியைச் சுற்றிலும் அரசுக்கு சொந்தமான கிரானைட் ஏலம் எடுத்தவர்கள் பல கோடிக்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மதுரையில் கலெக்டராக இருந்த சகாயம் கண்டுபிடித்து அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். இதனையடுத்து இந்த விவகாரம் சூடு பிடித்தது. இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்கவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதனையடுத்து சென்னை ஐகோர்ட் கடந்த செப்டம்பர் மாதம் 11ம்தேதி சகாயம் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவும் தள்ளுபடி ஆனது. இந்நிலையில் சகாயம் நியமனம் தொடர்பாக மறு சீராய்வு செய்ய வேண்டும் என மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கவுல் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோரை கொண்ட பெஞ்ச் தமிழக அரசை கடுமையாக கண்டித்தனர்.

சகாயம் விசாரிப்பதால் ஏன் நீங்கள் அச்சப்படுகிறீர்கள் ? எங்களின் உத்தரவை இன்னும் அமல் படுத்தாமல் இவ்வளவு நாள் ஏன் காலம் தாழ்த்தினீர்கள் என்றும் கேள்வி கேட்டு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சோமயாஜியை , நீதிபதிகள் அதிர வைத்தனர். இதற்கு அரசு தரப்பில் போதிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்று பல காரணங்கள் சொல்லியும் நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்தததுடன், தமிழக அரசுக்கு ரூ. 10 ஆயிரமும் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சகாயத்துக்கு துப்பாக்கி போலீஸ் ; மேலும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் , அதிகாரி சகாயத்தை துறையில் இருந்து உடனே விடுவிக்க வேண்டும். இவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட வேண்டும். இவரது விசாரணைக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் . சகாயம் தலைமையில் 4 நாட்களில குழுவை அமைக்க வேண்டும் என்றும் நீதிதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.
சத்தியமங்கலம் பகுதியில் விடிய,விடிய கொட்டித் தீர்த்தது மழை: வெள்ளப்பெருக்கால் சாலை துண்டிப்பு; மண்ச்சரிவு





சத்தியமங்கலம்,அக் 28:
சத்தியமங்கலம் பகுதியில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தததால் பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலை துண்டிப்பு; மண் சரிவு மற்றும் பயிர்ச்சேதம் என மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.


சத்தியமங்கலம் பகுதியில் சில வாரங்களாக கனமழை பெய்து வந்ததால் விளைநிலங்கள், வனங்கள் மற்றும் காடுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. தொடர்ந்து பெய்து வந்த மழையால் சிறிய குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் பள்ளங்களில் மழைநீர் தேங்கி இருந்தது. தற்போது, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை காலை வரை விடிய,விடிய மழை பெய்ததால் எங்கு பார்த்தாலும் செந்நிறத்தில் ம்ழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஓடைக்குட்டை, சுண்ணாம்புகரடு ஆகிய மலை அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டிய மழைநீர் சத்தி பெரியகுளத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால் 25 அடி நீர்மட்டம் கொண்ட பெரியகுளம் முழுகொளளளவை எட்டியது.பெரியகுளத்தின்  ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக மாறி இரு கரைகளையும் தொட்டபடி  பாய்ந்து ஓடியது.அப்போது, பள்ளத்தையொட்டி இருந்த விவசாயி செல்வம் என்பவரின் தோட்டத்தில் இருந்த 2 தென்னை மரங்கள் வேரோாடு சாய்ந்தன. அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.பி.சென்னியப்பன் தோட்டத்து பட்டியில் இருந்த 2 ஆடுகள்,3 கிடா குட்டிகள் மற்றும் 20 கோழிகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும், மஞ்சள், வாழை மற்றும் சம்பங்கி சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தன.சத்தி-கொளத்தூர் தரைப்பாலத்தின் தார்சாலை பெயர்ந்து அதன் ஒரு பகுதி  சேதமடைந்தது. இதனால் இரு கிராமங்களிடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


கொண்டப்பநாயக்கன் பாளையத்தில் பெய்த மழையால் சத்தி அத்தானி சாலையில் உள்ள தரைப்பாலத்தில் வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரதுத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறுகட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 2 மணிநேரத்துக்கு பிறகு வெள்ளநீர் தணிந்ததால் மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து துவங்கியது.

சத்தி கடம்பூர் சாலையில் மல்லியம்துர்க்கம் என்ற இடத்தில் மழை அருவியில் இருந்து கொட்டிய வெள்ளநீர் சாலைகளில் கரைபுரண்டு ஓடியது. அப்போது, அங்கு மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இரவு முழுவதும் பெய்த மழையால் சத்தி பிரிட்டோ காலனி குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் தூங்காமல் பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்றனர்.
சத்தியமங்கலம் அடுத்துள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிரிகளில் வெள்ளம் சூழந்தது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம்,சத்தி அதிமுக ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்  வெள்ளச் சேதபகுதிகளை பார்வையிட்டு ஜேசிபி மூலம் வடிகால் ஏற்படுத்தி வெள்ளநீரை அப்புறப்படுத்தினர்.

சத்தியமங்கலம் பகுதியல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அனைத்து கிராமமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Monday, October 27, 2014

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமனம்

 

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாருக்கு பதிலாக சந்தீப் சக்சேனா நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  

இத்தகவலை தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் மோகன் வர்கீஸ் வெளியிட்டுள்ளார். சந்தீப் சக்சேனா இதற்கு முன்பு தமிழக வேளாண் துறை முதன்மைச் செயலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கொடிவேரி அணையில் குளிக்கத் தடை 

கோபி, அக். 26: நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதியில் பெய்யும் கனமழையால் கொடிவேரி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. சனிக்கிழமை 300 கனஅடியாக இருந்த நீர் வந்தது, நேரம் செல்ல செல்ல 3,700 அடியாக அதிகரித்தது. பவானி ஆற்றின் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.

நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் அணை பகுதிக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையளவு, நீர் வரத்து குறைந்த பின் பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவர் என்று பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்.

மழையால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 16-ம் தேதி முதல் நீர் நிறுத்தப்பட்டுள்ளது. குண்டேரிப்பள்ளம் அணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் ஓரிரு வாரங்களாக மழை பொழிவதால், அணையில் 42 அடி நீர் உள்ளது.

 

தாளவாடியில் சாணியடித் திருவிழா

 

சத்தியமங்கலம், அக். 25: ஈரோடு மாவட்டம், தாளவாடி, கும்டாபுரத்தில் சனிக்கிழமை சாணியடித் திருவிழா நடைபெற்றது.

தாளவாடி அருகே உள்ள கும்ட்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் தீபாவளி பண்டிகையை அடுத்துவரும் 4-ஆவது நாள் சாணியடித் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான விழா சனிக்கிழமை காலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. முன்னதாக கிராமத்தில் உள்ள அனைத்து பசுமாடுகளின் சாணங்கள் சேகரிக்கப்பட்டு கோவிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து, ஊர்குளத்தில் இருந்து கழுதை மேல் சுவாமியை வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து, ஊர் தெய்வமான பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. ஆண்கள் மேலாடை அணியாமல் கோவிலுக்குள் சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர்.
பின்னர், அங்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த சாணத்தை உருண்டைகளாகச் செய்து அங்கு கூடியிருக்கும் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மீது சாணத்தை வீசி மகிழ்ந்தனர். இப்பாரம்பரிய நிகழ்ச்சிக்குப்பின் பக்தர்கள் அனைவரும் குளத்தில் நீராடி, பீரேஸ்வரரை வழிபட்டனர்.

இதுகுறித்து விழாக் கமிட்டியினர் கூறியது:
சில நூறு ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தை பக்தர் ஒருவர் எடுத்துச்சென்று சாணங்கள் கிடக்கும் குப்பை மேட்டில் எறிந்துவிட்டார். ஒருநாள் மாட்டு வண்டி குப்பைமேட்டின் மீது ஏறிச்செல்லும்போது, ஒரு இடத்தில் ரத்தம் வழிந்துள்ளது. 

அதைக்கண்ட மக்கள் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது அங்கு சிவலிங்கம் இருந்தது தெரியவந்தது. அப்போது ஒரு சிறுவனின் கனவில் வந்த சுவாமி, தீபாவளி முடிந்த நான்காவது நாள் சாணத்திலிருந்து தான் மீண்டெழுந்ததன் நினைவாக சாணியடித் திருவிழா நடத்தவேண்டும் எனக் கூறினாராம். இதையடுத்து, மூதாதையர் வழிகாட்டுதலின் படி, இந்த விழாவைக் கொண்டாடி வருகிறோம் என்றனர்.



சத்தியமங்கலத்தில் நேற்று இரவு பெய்த கன மழையினால் அனைத்து
பள்ளங்களிலும் வெள்ளம் நிரம்பியது.  இதனால் பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருந்தும்  பவானி ஆறில் வெள்ளம் இருகரை முழுவதும் பெருகி ஓடியது ! புதுவெள்ளம் செந்நிற வண்ணத்தில் ஓடிய காட்சி

இடம் : சத்தி - ஆத்துப்பாலம்

Saturday, October 25, 2014

ஜம்மு காஷ்மீர்,ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு! 5 கட்டமாக நவ.25- டிச.2 வரை வாக்குப் பதிவு

 

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நவம்பர் 25-ந் தேதி முதல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் 87, ஜார்க்கண்ட்டில் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றின் ஆயுட் காலம் முறையே ஜனவரி 19, ஜனவரி 3-ந் தேதி முடிவடைவதைத் தொடர்ந்து இரு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 72.25 லட்சம் வாக்காளர்களும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 கோடி வாக்காளர்களும் உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 10,015 வாக்குச் சாவடிகளும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 24,648 வாக்குச் சாவடிகளும் உள்ளன. இரு மாநிலங்களிலும் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டா முறை வாக்குப் பதிவு இயந்திரத்தில் இடம்பெறும். இரு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகின்றன. இவற்றுடன் டெல்லியில் 3 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும். முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 25-ந் தே, 2வது கட்டம்- டிசம்பர் 2; 3வது கட்டம்- டிசம்பர் 9; 4வது கட்டம்- டிசம்பர் 14; 5வது கட்டம்- டிச. 20-ந் தேதி என வாக்குப் பதிவு நடைபெறும். ADVERTISEMENT முதல் கட்ட வாக்குப் பதிவான நவம்பர் 25-ந் தேதியே டெல்லியின் 3 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும். இரு மாநிலங்கள் மற்றும் டெல்லி இடைத்தேர்தல் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்படும்.


 அவிநாசியில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை


அவிநாசி: அவிநாசியில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துள்ளதால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நகரிலுள்ள முக்கிய குளங்களான தாமரைக்குளம், சங்கமாங்குளம், சேவூர் குளம் ஆகியவற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு அவிநாசியில் தற்போது மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சோதனைகள் கடந்து வெற்றி பெறுவேன்; ஜெ.,



சென்னை: ஜெ., சிறை சென்றதால் உயிரிழந்த மேலும் 26 பேருக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்குவதாக அறிவித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 19.10.2014 ஆம் தேதியிட்ட எனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்த 193 பேர்களோடு, மேலும் 26 பேர் பல்வேறு வழிகளில் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்று தற்பொழுது வந்திருக்கும் தகவல் என்னை பெரும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்த 26 பேர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். இவர்களது குடும்பத்தினருக்கும் அ.தி.மு.க.வின் சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா சோதனைகளையும் கடந்து நான் வெற்றி பெறுவேன். அதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. இறை அருள் எனக்கு என்றைக்கும் துணை நிற்கும் என்பது தான் எனது நம்பிக்கையின் அடிப்படை. எனவே, என் அன்புக் குரிய தமிழக மக்கள் யாரும் இனிமேல் இது போன்ற உயிரை மாய்த்துக் கொள்ளும் செயல்கள் எதிலும் ஈடுபட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
சத்தியமங்கலம்: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலி- ஒருவர் மாயம்



ஈரோடு: சத்தியமங்கலம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலத்தை பைக்கில் கடக்க முயன்ற போது அடித்து செல்லப்பட்ட 3 பேரில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கஸ்தூரி நகரில் உள்ள தரைப்பாலத்தில் 3 தொழிலாளர்கள் இரு சக்கர வாகனத்தில் கடக்க முயற்சித்துள்ளனர். அப்போது, வெள்ளத்தில் மூன்று பேரும் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 பேரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது, 3 பேரில் வடபழனியை சேர்ந்த வினோத் மற்றும் சுரேந்திர பிரசாத் ஆகிய இருவரின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். வினோத் அந்த பகுதியில் உள்ள மளிகைக்கடையில் வேலைப்பார்த்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஒருவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 இந்த சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் கூறும்போது, ''இரவு நேரத்தில் 3 பேரும் தரைப் பாலத்தை கடந்ததால் காற்றாட்டு வெள்ளத்தில் அவர்கள் அடித்து செல்லப்பட்டுள்ளனர். மேலும், இரவு நேரங்களில் மக்கள் வெள்ளப் பகுதியில் ஆற்றை கடக்க வேண்டாம்" என்றார்.

கனமழையால் நிரம்பிய தாளவாடி வனக்குட்டைகள்




சத்தியமங்கலம்,அக் 27:

தாளவாடி வனத்தில் பெய்து வரும் தொடர்மழையால் வனக்குட்டைகள், தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகின்றன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்ட தலமலை, தாளவாடி, கேர்மாளம், தொட்டபுரம், முதியனூர் உள்ளிட்ட வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிற்றோடைகளில் வெள்ளநீர் பாய்ந்து ஓடுகிறது. அடர்ந்த காட்டுபகுதியில் ஆங்காங்கே வனத்தில் புதிய அருவிகள், நீரோடைகள் உருவாகி உள்ளன. இதன் காரணமாக அங்கிருந்து வெளியேரும் வெள்ளநீர் ஓரிடத்தில் சேர்வதால் வனஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.   வனத்தில் அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. புதுவெள்ளத்தால் அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.


வனத்தையொட்டியுள்ள தலமலை,நெய்தாளபுரம், மாவநத்தம், ராமர்அணை, தொட்டபுரம் வனக்குட்டைகளில்  கசிவுநீர்க்குட்டைகளில் நீர் நிரம்பி வழிகின்றன. தாளவாடி-தலமலை வனச்சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.தொட்டபுரம், முதியனூர்,தலமலை, நெய்தாளபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட ராகி, மக்காச்சோளம், முட்டைக்கோஸ் பயிர்கள் நீரில் மூழ்கியது.தொடர் மழையால் பயிர்கள் அழுகியதால் மகசூல் பாதிக்கப்பட்டது.

பலத்த மழையால் மலைவாழ்மக்கள் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதி குழந்தைகள் மழையில் நனைந்துபடி சென்றுவருகின்றன.

வனக்குட்டைகளில் நீர் நிரம்பி வருவதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்துவிடுவது குறைந்துள்ளது. வனக்குட்டைகளில் நீர் நிரம்பியுள்ளதால் யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் அந்தந்த குட்டைகளை பயன்படுத்துவதால் சாலைகளில் அவற்றின் நடமாட்டமும்  குறைந்துள்ளது. வனக்கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Thursday, October 23, 2014

புன்செய் புளியம்பட்டி காமாட்சியம்மன் கோவிலில் கேதார கௌரி பூஜை

 



 
புன்செய் புளியம்பட்டி அக்டோபர் 25:

புன்செய் புளியம்பட்டி சேரன் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சியம்மன் திருகோவிலில் கேதார கௌரி பூஜை நடைபெற்றது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் கேதார கௌரி பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 10 ஆம் ஆண்டாக கேதார கௌரி பூஜை இன்று காலை நடைபெற்றது. அருள்மிகு காமாட்சியம்மை உடனமர் ஏகாம்பரநாதருக்கு திருகல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாங்கல்ய பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். ஒருவருக்கொருவர் அட்சதை தூவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். பின்னர் மதியம் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 500 இக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 24 மனை தெலுங்கு செட்டியார் மகளிர் அணியினர் செய்து இருந்தனர்.
இணையத்தில் குவியும் சினிமா விமர்சனங்கள்: என்ன நினைக்கிறார் கமல்?



இணையதளத்தில் வரும் விமர்சனங்களுக்கு தடை போட முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல வார இதழில் தமிழ் திரையுலகினர் கேட்கும் கேள்விகளுக்கு கமல் பதிலளித்து வருகிறார். அதில் நடிகர் விவேக் கேட்ட கேள்வி:

"சமூக வலைத்தளங்களில் படம் நன்றாக இல்லை என்று மெசேஜ் அனுப்புகிறார்கள். இதனால் படத்திற்கு வரவேண்டியவர்களையும் தடுத்து விடுகிறார்கள். சமூக வலைத்தளங்களின் கமென்ட்களில் நேர்மை இருப்பதாக தெரியவில்லை. எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் சிவகார்த்திகேயன் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்புகிறார்கள். இது சரியா.. இதற்கு அரசாங்கம் சென்சார் கொண்டு வருமா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு கமல், "இன்டர்நெட் வருவதற்கு முன்பே நானும், அண்ணன் ஜேசுதாஸும் ஒரே நாளில் இறந்துபோன வதந்தி எங்கள் காதுக்கே எட்டியது. சிரித்தபடி, பரஸ்பரம் இரங்கல் தெரிவித்துக் கொண்டு 35 வருடங்கள் ஆகிவிட்டன.

விமர்சனத்துக்கு வரம்போ, தணிக்கையோ இருக்கக் கூடாது. தரம் குறையும்போது விமர்சகனே விமர்சனத்தின் மதிப்பெண்ணை கோடிட்டுக் காட்டி விடுவான். இன்டர்நெட் விமர்சகனுக்குத் தடை போடுவது, பெண்ணுக்குத் தாலி கட்டுவது அவர்களின் கற்புக்கு உத்தரவாதமாகாது. அவர்கள்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

நம் கலையும், திறமையும் மக்கள் ஆதரவுடன் எல்லா சமகால விமர்சனங்களையும் கடந்து வாழ உழைக்க வேண்டும் என்பதே என் பணிவிலாக் கருத்து" என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Monday, October 20, 2014

புன்செய் புளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் புத்தக திருவிழா
- ரூ 15 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை




புன்செய் புளியம்பட்டி அக்டோபர் 20:

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புன்செய் புளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலத்தில் தலா 5 நாட்கள் நடைபெற்ற புத்தக திருவிழாவில்   ரூ 15 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

இது குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, ஆண்டுதோறும் புன்செய் புளியம்பட்டியில் புத்தக திருவிழா நடைபெறுகிறது. 3 ஆவது ஆண்டாக அக்டோபர் 8 முதல் 12 வரை நடைபெற்ற புத்தக திருவிழாவில் முன்னணி பதிப்பகங்கள் புத்தக அரங்குகளை அமைத்து இருந்தனர். அனைத்து புத்தகத்துக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்க பட்டது. ரூ 100 மதிப்புள்ள புத்தகங்களை வாங்கிய மாணவர்களுக்கு நூல் ஆர்வலர் என்ற சான்றிதல் வழங்கப்பட்டது. நாள்தோறும் நடைபெற்ற மாலை நேர கருத்தரங்கில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன், பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன், முனைவர் இளசை சுந்தரம், பழ.கருப்பையா, கம்பம் பெ.செல்வேந்திரன், ஸ்டாலின் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்று பேசினார். மேலும் இயற்கை உணவு திருவிழா, மேஜிக் ஷோ, கிராமிய கலை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றது.

புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவை 50000 இகும் மேற்பட்ட பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் பார்வை இட்டுள்ளனர். சுமார் 9 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது.

அதேபோல் சத்தியமங்கலத்தில் அக்டோபர் 15 முதல் 19 வரை நடைபெற்ற  புத்தக திருவிழாவை 25000இகும் மேற்பட்ட பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் பார்வை இட்டுள்ளனர். சுமார் 6 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. புன்செய் புளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் புத்தக திருவிழாக்களில் மொத்தம் ரூ 15 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. புத்தக திருவிழா சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Saturday, October 18, 2014

மக்கள் பயன்படுத்தாத மதங்கள் சடங்குகளாகிவிடும் - எழுத்தாளர் ஜெயமோகன்




சமூகத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தாத மதங்கள் வெறும் சடங்குகளாகிவிடும் என எழுத்தாளர் ஜெயமோகன் கூறினார்.

மதுரை அரசரடி இறையியல் கல்லூரியில் பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற "பெளத்தத்தின் இன்றைய தேவை' எனும் கலந்துரையாடலில் பங்கேற்று அவர் பேசியது:

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியிலிருந்த நாட்டு மக்களின் மதம், கலாசாரத்தைத் தொகுத்துள்ளனர். அதன்படியே பெளத்தம் குறித்த கருத்தும் ஐரோப்பிய அறிஞர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.

மியான்மார், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெளத்தமிருந்தாலும் அவற்றுக்கிடையே வேறுபாடு உள்ளது. புத்தர் மறைவுக்கு பிறகு சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகே அவரது போதனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய அறிஞர்களான பால்காரஸ், ரைஸ் வில்லியம்ஸ், ஹென்றி ஸ்டீல் ஆகியோர் தொகுத்தவையே தற்போது பெளத்தக் கருத்துகளாக உள்ளன. பெளத்தம் இந்தியாவிலிருந்த இந்து மதத்துக்கு அறைகூவலாக இருந்ததாகக் கூறுவதை ஏற்க முடியாது. வணிகர்கள் மத்தியிலே பெளத்தம் பரவலாக இருந்துள்ளது. பெளத்தர்களது குகைகளின் அருகே சமணர் வாழ்ந்த தடயங்கள் உள்ளன.

ஆசிய நாடுகளில் கடந்த 25 ஆண்டுகளில் பெளத்தம் தாக்கத்தை இழந்துவருவதைக் காண முடிகிறது. அதே சமயம், ஐரோப்பிய நாடுகளில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.

மக்கள் பயன்படுத்தாத மதங்கள், அதன் கொள்கைகள் மறைந்து வெறும் சடங்குகளாகிவிடும். ஆகவே, மதங்களின் தத்துவங்களை மக்கள் பின்பற்றுவது முக்கியம். அறிவியலுக்கு நெருக்கமான மதமாக பெளத்தம் இருந்தும், மக்களால் எளிதில் ஏற்க முடியாத நிலையில், அதன் செல்வாக்கு சரிந்தது என்றார்.

நிகழ்ச்சியை இயக்க ஒருங்கிணைப்பாளர் முதல்வன் தொடங்கி வகித்தார். நிகழ்ச்சியில், லூர்துநாதன், ஞானஅலாய்சியஸ், யாழன் ஆதி மற்றும் மைத்ரி யாழினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

கம்யூனிசம் வீழ்ந்து விடவில்லை. அது உலகெங்கும் பரவிக் கிடக்கிறது என எழுத்தாளரும் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத் தலைவருமான பொன்னீலன் தெரிவித்தார்.

ஸ்சிவகங்கையைச் சேர்ந்த பேராசிரியர் நா.தர்மராஜன் எழுதிய மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றிய விமர்சனத் தொகுப்பு நூல், மொழிபெயர்ப்புச் செம்மல் நா.தர்மராஜன்-80. இந்த நூல் வெளியீட்டு விழா மதுரை காந்தி நினைவு அருங்காட்சிய நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் எழுத்தாளர் பொன்னீலன் நூலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியது: 

பாரதியின் கனவை நனவாக்கும் விதத்தில் நா.தர்மராஜன் 101 நூல்களை மொழிபெயர்த்துள்ளார். வெளிநாட்டு இலக்கியங்களை மொழிபெயர்க்கும்போது அந் நாட்டின் சித்தாந்தம், அதன் உள் அர்த்தம் என்ன என்பது நமக்குப் புலப்படும். அன்னகரீனா நூல் ரஷியாவின் மனசாட்சியாக வெளிவந்தது. அந்த நூலை சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.

ரஷியாவின் ஆன்மா வலுவானது. உலகின் முன்மாதிரி ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்கியவர்கள் அவர்கள். அவர்கள் வீழ்ந்துவிட்டதாக நினைக்கிறோம். கம்யூனிசம் வீழ்ந்து விடவில்லை. அது உலகெங்கும் பரவிக் கிடக்கிறது. மார்க்சியத் தத்துவ நூல்களின் மொழிபெயர்ப்பு சுதந்திரமாக நடைபெறவில்லை. இதனால் அதன் சித்தாந்தத்தைப் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், கம்யூனிச சித்தாந்த நூல்களை தமிழில் புரியும்படி எளிய நடையில் மொழி பெயர்த்துள்ளார். காந்தியவாதிகளுக்கு நிகராக கம்யூனிஸ்டுகள் நேர்மையானவர்கள். போராட்டமே அவர்களது வாழ்க்கையாக இருக்கிறது. இருவரும் நாட்டின் இரண்டு கண்களாக இருóக்கின்றனர். காந்தியடிகள் காரைக்குடி வந்தபோது அவர் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவை சிராவயலுக்குச் சென்று சந்தித்தார். இந்தியாதான் எனது சொத்து என்றார் ஜீவா. நீங்கள்தான் இந்தியாவின் சொத்து என்றார் காந்தி. அந்த அளவுக்கு பெருமை பெற்றவர் ஜீவாவின் வளர்ப்பு மகன் நா.தர்மராஜன். கம்யூனிசமும் காந்தியமும் அவரிடம் உள்ளது. இந்திய மொழி நூல்களை அவர் மொழிபெயர்த்தால் அவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைப்பது நிச்சயம் என்றார்.

நிகழ்ச்சியில், காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலர் மா.பா.குருசாமி, நெல்லை வணிக வரி இணை ஆணையர் பா.தேவேந்திரபூபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நா.தர்மராஜன் ஏற்புரையாற்றினார். தமிழ்நாடு சர்வோதய இலக்கியப் பண்ணைத் தலைவர் மா.பாதமுத்து தலைமை வகித்தார். தமிழ்நாடு சர்வோதய மண்டல் தலைவர் க.மு.நடராஜன் வரவேற்றார். சர்வோதய இலக்கியப் பண்ணை செயலர் வே.விஜயராஜன் நன்றி கூறினார்.
சத்தியமங்கலம் வனத்தில் கனமழை:வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்





சத்தியமங்கலம் வனப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

சத்தியமங்கலம், புளியம்கோம்பை வனப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வன அருவிகளில் இருந்து வரும் தண்ணீர் அங்குள்ள பள்ளத்தில் கலப்பதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வன அருவிகள், பள்ளங்களில் இருந்து வரும் வெள்ளம் சூரிப்பள்ளம் என்ற இடத்தில் சனிக்கிழமை கலந்ததால் அங்கு திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், சத்தி - கொமாரபாளையம் தரைப் பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. 

பள்ளத்தில் முள்செடிகள் மற்றும் மரக்கிளைகள் அடித்துச் செல்லப்பட்டதால் சத்தி - கொடிவேரி அணை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், பள்ளிநேரம் முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவிகள் வெள்ளம் வடியும் வரை காத்திருந்தனர். 

சுமார் 2 மணி நேரத்துக்குப் பின் மழைநீர் வடிந்ததால் அப்பகுதி சேறும் சகதியுமாக காணப்பட்டது. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக மேலும் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
 

கோவில்பட்டி தேசிய பொறியியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் புன்செய் புளியம்பட்டி எஸ்.ஆர்.சி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர். பவித்ரா முதல் பரிசு வென்றுள்ளார். ரூபாய் 15000 ரொக்க பரிசு மற்றும் 25000 ரூபாய் மதிப்புள்ள LCD projecter பரிசாக வேண்டுள்ளார். முதல் பரிசுக்கான காசோலையை கூடங்குளம் அணுமின் திட்ட இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் வழங்க பவித்ரா பெற்று கொண்டார். தொடர் வெற்றிகளை பெற்று வரும் பவித்ராவுக்கு விடியல் சமூகநல இயக்கம் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

Thursday, October 16, 2014

நக்சல் ஊடுருவலை தவிர்க்க இரு மாநில வன எல்லையில் போலீசார் கண்காணிப்பு. - முன்னாள் அதிரடிப்படை தலைவர் விஜயகுமார் பேட்டி

 

சத்தியமங்கலம், அக்.17. தமிழகத்தில் நக்சல் நடமாட்டம் இல்லையென்றாலும்
அண்டை மாநிலங்களில் உள்ள நக்சல் பாதிப்பு காரணமாக தமிழகத்தில்
அதிரடிப்படையினர் தமிழகம் கர்நாடகம் மற்றும் கேரள மாநில வன எல்லைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே நக்சல் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்ய  முன்னாள் அதிரடிப்படை தலைவரும், மத்திய உள்துறை முத்த பாதுகாப்பு ஆலோசகருமான விஜயகுமார் நேற்று சத்தியமங்கலம் வந்தார்.

இவர் இருமாநில எல்லையில் உள்ள வனகிராமங்களான கெத்தேசால், கேர்மாளம், திம்பம், தலமலை உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த கிராம மக்களை சந்தித்து புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. தமிழக வனப்பகுதியில் தேனி, ஒகேனேக்கல், ஜவ்வாது மலை, தமிழக ஆந்திர எல்லைகளில் ஒன்றும் அறியாத அப்பாவி மக்களிடம் மாவோயிஸ்ட்டுகள் பழைய அநியாயங்களை மீண்டும் மீண்டும் கூறி அவர்களின் மனநிலையை மாற்றியதால் மேற்கண்ட இடங்களில் நக்சல் அமைப்புகள் தலைதூக்கியது. போலீசாரின் தொடர் நடவடிக்கையில் நக்சல் அமைப்பு ஒடுக்கப்பட்டது. இதையடுத்து நக்சல் நடமாட்டம் குறித்து போலீசார் நுண்பிரிவு போலீசார் தகவல் சேகரித்து தமிழகத்தில் நக்சல் ஊடுவலை முற்றிலுமாக தடுத்துள்ளனர். கேரளா மற்றும் ஆந்திர வனப்பகுதிகளில் நக்சல் பாதிப்பு இருப்பதால் அவை தமிழகத்தில் நுழையாவண்ணம் 3 மாநில போலீசார் கூட்டாக தகவல் சேகரித்து நக்சல்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.  சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள கெத்தேசால் கிராமத்தில் வசித்த 7 பேரை வீரப்பன் வெட்டிக்கொன்றான்.

இச்சம்பவம் 1994 ம் ஆண்டு நடந்தது. அன்று முதல் கிராம மக்களின்
குலதெய்வமாக கருதப்பட்ட ஜடையருத்ரசாமி கோயிலை முடினர். 10 ஆண்டுகளுக்கு பின்பு 2004 ல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட பின்பு மீண்டும் கோயிலை கிராம மக்கள் திறந்தனர். பொதுவாக நக்சல்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை ஜனநாயக ரீதியாக அரசிடம் முன்வைத்தால் உள்துறை அமைச்சகம் பரிசீலிக்கும். ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தால் நக்சல் குடும்பத்திற்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. நக்சல் மற்றும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து  அதிநவீன தகவல் தொழில்நுட்ப உதவியுடன் கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

படம் புட்நோட்
நக்சல் மற்றும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்ய  முன்னாள்
அதிரடிப்படை தலைவரும், மத்திய உள்துறை முத்த பாதுகாப்பு ஆலோசகருமான
விஜயகுமார் நேற்று சத்தியமங்கலம் வந்தார்.





புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்
- ஸ்டாலின் குணசேகரன்


விடியல் சமூகநல இயக்கம் மற்றும் சத்தியமங்கலம் கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை சார்பில் சத்தியமங்கலத்தில் அத்தாணி ரோட்டில் அமைந்துள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் நாள் மாலை நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்சிக்கு நிகழ்ச்சியில் விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை தலைவர் வி.வைத்தீஸ்வரன் தலைமை தாங்கினார்.சாரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் டாக்டர் ஏ.சாமியப்பன் முன்னிலை வகித்தார்.

ஈரோடு மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும் போது புத்தகங்கள் தனி மனித வாழ்கைக்கு மட்டுமல்ல சமுதாய முன்னேற்றத்துக்கும் காரணமாக இருந்கின்றான். ஒரு புத்தகம் மனிதனின் வாழ்வை மாற்றி விடும். மாணவர்கள் மீது நாம் அளவற்ற நம்பிக்கை வைக்க வேண்டும்.  மாணவர்களை மட்டும்  நாம் சரியாக  வழிநடத்தினால் அவர்களை விட சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. மாணவ மாணவியர்கள் பாட புத்தகத்தோடு பிற புத்தகங்களை படிக்க வேண்டும். பாடபுத்தகங்களை படிக்கும் போது அறிவாளியாகலாம். பாடம் அல்லாத புத்தகங்களை பாதிக்கும் போது நல்ல மனிதன் ஆகலாம். மாணவர்களை பண்படுத்தும், பக்குவபடுத்தும் ஆயுதம் புத்தகம். அடுத்த தலைமுறை கையில்தான் இந்த சமுதாயம் இருக்கிறது. புத்தகங்களை வாசிக்கும் போது ஈடுபாட்டோடு மனபூர்வமாக வாசிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் இல்லந்தோறும் சிறிய நூலகம் அமைக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் நாள் நூல்கள் நமக்கு நண்பன்.

உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல் பைபிள். அடுத்த இரண்டாம் இடம் குரான். மூன்றாம் இடத்தில் இருப்பது திருக்குறள். திருக்குறளில் இல்லாத விசயங்களே இல்லை. அய்யன் திருவள்ளுவரால் 2000 ஆண்டுகளுக்கே முன்பே  நம் வாழ்கைக்கு வேண்டிய அத்தனை விசயங்களையும் தந்த நூல் திருக்குறள். திருக்குறள் இல்லாத வீடே இருக்க கூடாது. மாணவ மாணவியர்கள் திருக்குறளை முழுவதுமாக படிக்க வேண்டும். மலேசிய அரசாங்கம் திருக்குறளை தமிழில், ஆங்கிலத்தில், மலாய் மொழியில் அச்சிட்டு ஆண்டுதோறும் மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. நம் தாய்மொழியில், தமிழ் மொழியில் திருக்குறளை படிக்கும் இனிமை, இன்பம் மொழிபெயர்ப்பு நூலில் கிடைக்காது.

சத்தியமங்கலம் புத்தக திருவிழாவை அனைத்து பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் முழுமையாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.





Tuesday, October 14, 2014

சத்தியமங்கலத்தில் புத்தக திருவிழா துவக்க விழா புகைப்படங்கள்







சத்தியமங்கலத்தில் புத்தக திருவிழா துவங்கியது
*******************************************************


சத்தியமங்கலம் அக்டோபர் 15 :

விடியல் சமூகநல இயக்கம் மற்றும் சத்தியமங்கலம் கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை சார்பில் சத்தியமங்கலத்தில் முதல்முறையாக புத்தக திருவிழா நேற்று அத்தாணி ரோட்டில் அமைந்துள்ள கொங்கு திருமண மண்டபத்தில் துவங்கியது

விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை தலைவர் வி.வைத்தீஸ்வரன் புத்தக அரங்கினை திறந்து வைத்தார். முதல் புத்தக விற்பனையை பண்ணாரி அம்மன் பள்ளிகளின் செயலாளர் எ.என்.குழந்தைசாமி வழங்க ஆடிட்டர் மயில்சாமி பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளையின் துணை தலைவர்கள் ஏ.கே.பெருமாள்சாமி, எஸ்.பி.குமாரசாமி, ஆர்.பெருமாள்சாமி, சாரு மெட்ரிக் பள்ளி தாளாளர் டாக்டர் ஏ. சாமியப்பன், இ.என்.செந்தில்குமார், விடியல் தலைவர் தருமராசு, சக்திவேல், நுகர்வோர் & சாலை பாதுகாப்பு செயலாளர் சி.பரமேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இது குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறி இருப்பதாவது. இளைய தலைமுறையிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சத்தியமங்கலத்தில் முதல்முறையாக புத்தக திருவிழா அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 5 நாட்கள் அத்தாணி ரோட்டில் அமைந்துள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் 25 இகும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்கங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு தலைப்புகளில் இலட்சகணக்கான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்க உள்ளது. புத்தக கண்காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்கபடுகிறது.

தினசரி மாலை 6 .30 மணிக்கு தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழுவுகள் நடைபெறுகிறது. அக்டோபர் 15 ஆம் தேதி மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசுகிறார். அக்டோபர்16 ஆம் தேதி பேராசிரியை புனிதா ஏகாம்பரம் தலைமையில் வழக்காடு மன்றம் நடைபெறுகிறது. அக்டோபர் 17 ஆம் தேதி பேராசிரியர் செ.சு.பழனிசாமி பேசுகிறார். அக்டோபர் 18 ஆம் தேதி இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.சென்னியப்பன் பேசுகிறார். அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவு விழாவில் சிந்தனை கவிஞர் டாக்டர் கவிதாசன் பேசுகிறார்.

சத்தியமங்கலம் புத்தக திருவிழாவின் ஐந்து நாட்களிலும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களும், பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என விடியல் செயலாளர் எஸ். ஜெயகாந்தன் கேட்டு கொண்டுள்ளார்.

Monday, October 13, 2014

மொழி என்பது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு மனிதனின் அடையாளம்.  - கம்பம் பெ.செல்வேந்திரன் 




புன்செய் புளியம்பட்டி அக்டோபர் 13 :

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புத்தக திருவிழா நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் கம்பம் பெ.செல்வேந்திரன்  கலந்து கொண்டு தமிழுக்கும் அமுதென்று பேர்  என்ற தலைப்பில் உரையாற்றினார்.

விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். தி.மு,க மாவட்ட இலக்கியஅணி செயலாளர் கோ.வெ.குமணன் தலைமை தாங்கினார். நகர தி.மு.க செயலாளர் பி.ஏ.சிதம்பரம், நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கம்பம் பெ.செல்வேந்திரன் அவர்கள் தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற தலைப்பில் பேசும் போது, புன்செய் புளியம்பட்டிக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாணவ மாணவியர்களிடம் புத்தகம் வாசிக்கும்  பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில்  விடியல் சமூகநல இயக்கம் இந்த புத்தக திருவிழாவை நடத்தி வருகின்றனர். ஏராளமான பொதுமக்களும், மாணவர்களும் புத்தகங்களை வாங்க ஆர்வமுடன் இங்கே வருகை தந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சமுகம் நல்ல விடியலை பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு அவர்கள் விடியல் என்ற பெயரை இயக்கத்துக்கு வைத்து இருக்கிறார்கள். ஒரு நல்ல முயற்சி என்பது பாதி வெற்றிக்கு சமம் என்பார்கள். புளியம்பட்டி புத்தக திருவிழா முழு வெற்றி பெற்றுள்ளது. அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

இந்த உலகில் தீவிரமாக புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை 5 சதவிகிதம். படிப்பு என்பது சுவையான விஷயம். புத்தகம் என்பது ஒரு சிலருக்கு தோழன். புத்தகம் என்பது ஒரு சிலருக்கு வழிகாட்டி. புத்தகம் என்பது ஒரு சிலருக்கு சிகிச்சை. ஆனால் ஒரு சிலருக்கு புத்தகம் மட்டும் தான் உலகம். அவர்கள் புறஉலகில் வாழ்வதை விட புத்தக உலகில் வாழ்கிறார்கள். புத்தக வாசிப்பு என்பது ஒரு மனிதனை பண்படுத்துகிறது. பக்குவபடுத்துக்கிறது. புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஊடகங்களின் தாக்கம் காரணமாக குறைந்து விடுமோ என்ற அச்சம் எல்லோருக்கும்  இருக்கிறது. ஆனால் இத்தகைய புத்தக திருவிழாக்கள் காரணமாக படிக்கும் ஆர்வம் அவ்வளவு சீக்கிரம் குறிந்து விடும்  என்று தோன்ற வில்லை.

உலகில் பேசபடும் மொழிகள் எல்லாம் எண்ணங்களை வெளிபடுத்தும் கருவியாக தான் உள்ளது. ஆனால் தமிழ்மொழி மட்டும் தான் உயிர் என்று நேசிக்கபடுகிறது. உலகில் மொத்தம் 6800 மொழிகள் பேசப்படுகின்றன. இதுவரையில் 372 மொழிகள் அழிந்து விட்டன. ஆண்டுக்கு 10 மொழிகள் அழிந்து வருகின்றன. இந்த மொழிகளில் 10000 மக்கள் மட்டுமே பேசபடுகின்ற மொழி 50 சதவிகிதம். 1000 மக்கள் மட்டுமே பேசபடுகின்ற மொழி 25 சதவிகிதம். 10 அல்லது 100 பேசுகின்ற மொழி 184 மொழி. மொழி என்பது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு மனிதனின் அடையாளம். இந்த உலகில் அதிகமான இன்னலுக்கு ஆளான இனம் இரண்டு. ஒன்று யூத இனம். மற்றொன்று ஈழ தமிழினம்.

ஒரு மொழி எப்போது சாகிறது தெரியுமா? யாரிடமிருந்து சாகிறது தெரியுமா?  குழந்தைகளிடம் இருந்து. அவர்கள் தாய் மொழியில் பேசி பழகவிட்டால் அந்த மொழி மெல்ல மெல்ல அழிந்து போய் விடும். மொழியை வளர்த்தெடுக்க வேண்டும். நம் தாய்மொழியை மறக்க கூடாது. குறைந்த பட்சம் நம் வீட்டிலாவது தமிழிலேயே பேச வேண்டும்.

ராமாயணம் என்பது 6 கண்டங்களை கொண்டது. 12000 பாடல்கள் உடையது. இதை மூன்றே சொல்லில் சொல்லி விடலாம். ஒரு சொல்! ஒரு வில்! ஒரு இல்! இப்படி மூன்றே சொல்லில் ஒரு இதிகாசத்தையே சொல்லும் வல்லமை தமிழ் மொழிக்கு உண்டு. ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை வைரமுத்து அவர்கள் ஒரே வார்த்தையில் சொல்லுகிறார். ஒருத்தி சிரிக்க கூடாத இடத்தில் சிரித்து தொலைத்தாள். அது மகாபாரதம். ஒருத்தி சிரிக்க கூடிய இடத்தில் சிரிப்பை தொலைத்தாள். அது ராமாயணம். இத்தகைய சிறப்பு மிக்க தமிழை போற்றி பாதுகாப்பு நம் அனைவரின் கடமை என்றார்.

அதனை தொடர்ந்து பசுமை பேராயம் தலைவர் கௌரவ தலைவர் சுந்தராமன் ஏன் வேண்டும் நஞ்சில்லா விவசாயம் என்ற தலைப்பிலும், நல்லகீரை அமைப்பை சார்ந்த வழக்கறிஞர் சிவா நீங்கள் உண்பது உணவா? நஞ்சா? என்ற தலைப்பிலும் நல்ல சோறு அமைப்பின் ராஜமுருகன் நாம் தொலைத்த சிறு தானியங்களின் மகத்துவம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இவ்விழாவில் திமுக நகரமன்ற உறுப்பினர்கள், அரிமா ராமசாமி,  பசுமை பேராயம் சுந்தரம், நந்தகுமார், கோவிந்தராஜன், கொங்கு தமிழ் இளைஞர் சங்கம் கார்த்திக், மோகன்ராஜ், ஆசிரியர் தங்கவேல் முருகையன், கே.தருமராசு ஆகியோர் உள்பட பலர் பங்கு கொண்டனர். 

Sunday, October 12, 2014

சத்தியமங்கலத்தில் முதல்முறையாக புத்தக திருவிழா
**********************************************************
 
 
சத்தியமங்கலம் அக்டோபர் 14 :

விடியல் சமூகநல இயக்கம் மற்றும் சத்தியமங்கலம் கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை சார்பில் சத்தியமங்கலத்தில் முதல்முறையாக புத்தக திருவிழா அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 5 நாட்கள் அத்தாணி ரோட்டில் அமைந்துள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இது குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறி இருபதாவது. இளைய தலைமுறையிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சத்தியமங்கலத்தில் முதல்முறையாக புத்தக திருவிழா அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 5 நாட்கள் அத்தாணி ரோட்டில் அமைந்துள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரதி புத்தகாலயம் , விகடன் பதிப்பகம், தமிழ் தேசம் புத்தக நிலையம் ஸ்டுடண்ட் புக் ஹவுஸ், லாவா புக்ஸ், ட்ரேடிங் இந்தியா புக்ஸ், நாகஜோதி புத்தக நிலையம், வள்ளலார் புத்தக நிலையம்,  விவேகானந்தா புத்தகாலயம்  உள்ளிட்ட 25 இகும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்கங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு  தலைப்புகளில் இலட்சகணக்கான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் ஒரே இடத்தில கிடைக்க உள்ளது.கல்வி குறுந்தகடுகளும் கிடைக்கும். புத்தக கண்காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்க படுகிறது.

தினசரி மாலை 6 .30 மணிக்கு  தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழுவுகள் நடைபெறுகிறது. அக்டோபர் 15 ஆம் தேதி மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசுகிறார். அக்டோபர்16 ஆம் தேதி பேராசிரியை புனிதா ஏகாம்பரம் தலைமையில் வழக்காடு மன்றம் நடைபெறுகிறது. அக்டோபர் 17 ஆம் தேதி பேராசிரியர் செ.சு.பழனிசாமி பேசுகிறார். அக்டோபர் 18 ஆம் தேதி இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.சென்னியப்பன் பேசுகிறார். அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவு விழாவில் சிந்தனை கவிஞர் டாக்டர் கவிதாசன் பேசுகிறார்.

சத்தியமங்கலம் புத்தக திருவிழாவின் ஐந்து  நாட்களிலும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களும்,  பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என விடியல் செயலாளர் எஸ். ஜெயகாந்தன் கேட்டு கொண்டுள்ளார்.