தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, March 28, 2016

புன்செய் புளியம்பட்டியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி



புன்செய் புளியம்பட்டி மார்ச் 29:

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் 100 % வாக்குபதிவை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் வாக்கு முத்திரை போன்ற வடிவில் நின்று மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். அப்போது மாணவர்கள் தமிழகம் வாக்களிக்கிறது( vote for tamilnadu )  என்றவாறு பதாகைகளை கைகளில் ஏந்தி நின்றனர். மேலும் மாணவ மாணவியர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்!, உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்!, வளமான தமிழகம் அமைய அனைவரும் வாக்களிப்போம்! வாக்களிப்பது பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம் என்பது போன்ற கோசங்களை எழுப்பினர்.

இந்நிகழ்ச்சியில் புன்செய் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் முத்து, விடியல் சமூகநல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், தலைவர் தருமராசு, பொருளாளர் லோகநாதன், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், சிந்தாமணி வித்யாலயா பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் மொழிஸ் பெண்கள் சிறுதொழில் பயிற்சி மைய மாணவிகள் உள்பட 500 இயக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவு. நீர்த்தேக்கப்பகுதியில் முழ்கியிருந்த டணாய்க்கன் கோட்டை கோயில்கள் தெரிகின்றன.


பவானிசாகர் , மார்ச்.29. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் அணை நீர்தேக்கப்பகுதியில் முழ்கியுள்ள டணாய்க்கன் கோட்டை என் அழைக்கப்படும் பகுதியில் உள்ள மாவராய பெருமாள் கோயில் முழுவதுமாக தெரிகிறது. 

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கருர் மாவட்டங்களில் 250000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது. தற்போது அணையின் நீர்மட்டம் 52 அடியாக குறைந்து விட்டதால் அணை நீர்தேக்கப்பகுதியில் உள்ள பழங்கால கோயில்கள் மற்றும் டணாக்கன்கோட்டை வெளியே தெரிகின்றன. கடந்த 1948 ம் ஆண்டு பவானியாறும் மோயாறும் கூடுமிடத்தில் கீழ்பவானி அணை கட்டும் பணி துவங்கியது. இதனால் அணைப்பகுதியில் இருந்த 5 க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பண்ணாரி வனப்பகுதியில் நிலம் வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். அணைக்குள் இருந்த பழமை வாய்ந்த கோயில்களில் உள்ள விக்கிரகங்கள் பத்திரமாக எடுத்து வரப்பட்டு பவானிசாகரில் கீழ்பவானி வாயக்காலின் வலதுபுறத்தில் கோயில் கட்டப்பட்டு விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 1953 ல் குடமுழுக்கு செய்யப்பட்டது. அணைக்குள் நீரில் மூழ்கிய கிராமங்கள் இருந்த சுவடு காணாமல் போய்விட்டன. 

ஆனால் டணாய்க்கன் கோட்டையில் உள்ள மாதவராய பெருமாள் கோயில், சோமேஸ்வரர் மங்களாம்பிகை கோயில், பீரங்கித்திட்டு போன்றவை நீர்மட்டம் கு¬ற்ந்த காலத்தில் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. தற்போது அணையின் நீர்மட்டம் 52 அடியாக உள்ளதால் மாதவராய பெருமாள் கோயில் முழுவதுமாக காட்சியளிக்கிறது. கோயில் உள்பிரகாரத்தில் 32 தூண்கள் அழகாக அமைக்கப் பட்டுள்ளது. இன்னும் 10 முதல் 12 அடி வரை நீர்மட்டம் குறைந்தால் சோமேஸ்வரர் மங்களாம்பிகை கோயில், பீரங்கித்திட்டு முழுவதுமாக காட்சியளிக்கும்.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்கள் இவை என கல்வெட்டுக்கள் மற்றும் வரலாறுகளில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இக்கோயில்களை பொதுமக்கள் சென்று பார்க்க வசதி இல்லை. எனவே அணையில் நீர்மட்டம் குறைந்த காலங்களில் இக்கோயில்களை காண பொதுப்பணித்துறை படகு வசதி ஏற்படுத்தி தரவேண்டுமென பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா. பூசாரி ஒருவர் மட்டுமே தீ மிதிக்க அனுமதி. பொதுமக்கள் தீ மிதிக்க அனுமதி இல்லை.







தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் அபிசேக ஆராதனை, அம்மன் மலர் ஊஞ்சல் வழிபாட்டுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மனுக்கு அபிசேக பூஜை நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை மலர் அலங்கார தரிசனமும், பின்னர் அம்மன் திருவீதி உலா மைசூர் சாலை, திப்பு சர்க்கிள், பஸ்நிலையம், தலமலை ரோடு, ஒசூர் ரோடு, தொட்டகாஜனூர் சாலை, நாயக்கர் வீதி பகுதிகளில் நடைபெற்றது. தாளவாடி நகர்ப்பகுதி முழுவதும் வீதிகளில் கோலமிட்டு அம்மனை வரவேற்று வழிபட்டனர். பின்னர் நேற்று காலை 9 மணிக்கு மலர் ஊஞ்சல் நடைபெற்றது. முன்னதாக சுவாமி அம்பேத்கார் வீதியில் உள்ள விநாயர்கோயிலுக்கு வரும்போது மலர்ப்பாதை மீது நடந்து வந்து விநாயகர் வழிபாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோயில் முன் தயார் செய்யப்பட்ட குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து காலை 9.40 மணியளவில் கோயில் பூசாரி சிவண்ணா குண்டம் இறங்கினார். பின்னர் விசேச பூஜை, தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி கரகாட்டம், நையாண்டி மேளம், சண்டி மேளம், வீரபத்ரா நடனம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தாளவாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தாளவாடி மலைப்பகுதிகளில் உள்ள கோயில் குண்டம் திருவிழா நிகழச்சிகளில் கோயில் பூசாரி மட்டுமே குண்டம் இறங்குவது வழக்கம். மேலும் இப்பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் குண்டம் திருவிழா நடைபெறுவது தனிச்சிறப்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தால் தாளவாடி நகர்ப்பகுதியில் எந்த விழாவிற்கும் மைக் செட் வைக்க அனுமதியில்லை.

Thursday, March 24, 2016

பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா. இலட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 12 மணி நேரம் தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கினர்.





பண்ணாரி , மார்ச்.23. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா இன்று நடைபெற்றது. இலட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டைமாநிலமான கர்நாடகாவிலிருந்தும் இலட்சக்கணக்காண பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் இலட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.





இந்நிலையில் கடந்த 7 ம் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா தொடங்கியது. இ¬த்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திருவீதிஉலா 8 ம் தேதி இரவு புறப்பட்டு சிக்கரசம்பாளையம், இக்கரைநெகமம் புதூர், வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம், வெள்ளியம்பாளையம்புதூர், உத்தண்டியூர், அய்யன்சாலை, ராமாபுரம், தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூர், ஹவுசிங் யூனிட், சத்தியமங்கலம், பட்டவர்த்தி அய்யம்பாளையம், புதுவடவள்ளி, புதுக்குய்யனூர், பசுவபாளையம், புதுபீர்கடவு, பட்டரமங்கலம், ராஜன்நகர் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்று 15 ம் தேதி ம் தேதி இரவு அம்மன் சப்பரம் கோயிலை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து அன்றிரவு நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் இரவு கோயிலில் தினமும் மலைவாழ் மக்கள் தாரை,தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், நித்தியப்படி பூஜையும் நடைபெற்றது. கடந்த 20 ம் தேதி மாலை 3 மணிக்கு பரிவார தெய்வங்களான மாதேஸ்வரன், சருகுமாரியம்மன், வண்டிமுனியப்பன் மற்றும் ராகு கேது தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், காலை 5 மணிக்கு குண்டத்திற்கு தேவையான கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சியும் காலை 6 மணிக்கு அம்மன் மெரவணை ஊர்வலம் நடைபெற்றது. அன்று மாலையில் குண்டத்திற்கு எரிகரும்புகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டது. நேற்று அதிகாலை 2 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அச்சமயம் குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கசரம்பாளையம், இக்கரைநெகமம் புதூர் மற்றும் வெள்ளியம்பாளையம் கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள் மூங்கில் கம்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.



தெப்பக்குளம் சென்ற அம்மன் சரியாக 3.30 மணிக்கு குண்டத்தின் முன்புறம் அம்மன் சப்பரம் வந்தடைந்தது. கோயில் பூசாரிகள் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. சரியாக 3.55 மணிமுதல் தலைமை பூசாரி ராஜசேகர் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து அம்மன் சப்பரம் குண்டத்தில் இறக்கப்பட்டது. இதையடுத்து அரசு அதிகாரிகள் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கினர். கூட்டம் அதிகரித்தததால் மாலை 4 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்கினர். சிறுவர் சிறுமியர், குழந்தையை சுமந்தபடி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் விழாவில் பங்கேற்று குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் இறங்கிய பின் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்கினர். குண்டம் இறங்கும்போது கருவறையில் உள்ள அம்மன் வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குண்டம் இறங்கும் பக்தர்கள் நேரடியாக கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சத்தியமங்கலம் நண்பர்கள் அன்னதானக்குழு சார்பில் நேற்றுமுன்தினம் மதியம் முதல் நேற்று மாலை வரை கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் சிற்றுண்டி தொடர்ந்து வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி மற்றும் ஈரோடு கலெக்டர் பிரபாகர் ஆகியோர் பார்வையிட்டனர். கோயில் துணை ஆணையர் மாரிமுத்து, பரம்பரை அறங்காவலர்கள் புருசோத்தமன், ராஜப்பன், ராஜாமணி தங்கவேல், ராஜேந்திரன், புஷ்பலதா கோதண்டராமன், மற்றும் கோயில் பணியாளர்கள் விழவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் கோயிலில் முகாம் அமைத்து பணியில் ஈடுபட்டனர்.


குண்டத்தில் இறங்கிய விஐபிக்கள் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, தொழிலாளர் துறை ஆணையர் அமுதா ஐஏஎஸ், வைகுந்த் காகித ஆலையின் பொது மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சிக்கரசம்பாளையம் ஊராட்சித்தலைவர் செல்வராஜ், சத்தியமங்கலம் நகராட்சித்தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் எம்பி காளியப்பன், வாசவி தங்க மாளிகை பிரபுகாந்த் மற்றும் காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறப்பு அதிரடிப்படை வீரர்களும் குண்டம் இறங்கினர். கோவை மேற்கு மண்டல ஐஜி ஸ்ரீதர் மேற்பார்வையில் மாவட்ட எஸ்பி சிபிசக்ரவர்த்தி உள்ளிட்ட 4 எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் என பலவேறு மாவட்டங்களை சேர்ந்த 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கோவை, ஈரோடு, திருப்பூர், ஊட்டி, மேட்டுப்பாளையம், கோபி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, அந்தியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

சத்தியமங்கலம் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் தீவிபத்து. விரைந்து அணைத்ததால் பல லட்ச ருபாய் பணம் தப்பியது
 

சத்தியமங்கலம் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.
 
சத்தியமங்கலம், மார்ச்.24. சத்தியமங்கலம் & மைசூர் சாலையில் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே இந்தியன் வங்கி ஏடிஎம் உள்ளது. நேற்று காலை 10 மணியளவில் இந்த ஏடிஎம் அறையிலிருந்து திடீரென புகை வந்தது.  இதைக்கண்ட அப்பகுதி மக்களும் அருகே இருந்த இந்தியன் வங்கி கிளை அதிகாரிகளும்  உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணப்பு நிலைய அலுவலர் ஜெகதீஸ்வரன் தலைமையில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புகை பரவிய இடத்தில் வாயுவை பீய்ச்சியடித்து அணைத்தனர். ஏடிஎம் இயந்திரம் அருகே வைக்கப்பட்டுள்ள யுபிஎஸ் இயந்திரத்தின் மின்சாதனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து புகை ஏற்பட்டுள்ளது என தீயணைப்புத்துறையினர் கூறினர். விரைந்து தீயை அணைத்தால் ஏடிஎம் இயந்திரத்திலிருந்த பல இலட்சம் ருபாய் பணம் தப்பியது. இந்நிலையில் தீ விபத்து காரணமாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படடதால் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஏடிஎம் அறையில் ஏற்பட்ட தீ விபத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tuesday, September 29, 2015

சத்தியில் அரசு கலைக் கல்லூரி அறிவிப்பு:  அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
 
 

சத்தியமங்கலம்,செப் 29:
சத்தியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்ததையடுத்து சத்தியில் அதிமுவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்.

சத்தியமங்கலம் பகுதியில்  பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகமாக வசிப்பதால் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் சத்தியமங்கலத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என முதலவர் அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்து ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் தலைமையில் அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ஊர்வலமாக சென்று சத்தி-கோவை சாலையில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். இதில் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் சி.என்.மாரப்பன், வி.ஏ.பழனிச்சாமி, வி.சி. வரதராஜ், சத்தி இந்திய கம்யூ கட்சி தாலுக்கா செயலாளர் ஸ்டாலின் சிவக்குமார், சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், அரியப்பம்பாளையம் பேரூராட்சித் தலைவர் எம்.பி,துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Friday, September 25, 2015

ஒதிமலை முருகன் கோவில் மலைப்பாதையை சுற்றி சாலை வசதி செய்ய பக்தர்கள் கோரிக்கை - மேலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுகோள் 




புன்செய் புளியம்பட்டி செப்டம்பர் 25 : புன்செய் புளியம்பட்டியை அடுத்துள்ள ஒதிமலை முருகன் கோவில் மலைப்பாதையை சுற்றிலும் சாலை வசதி செய்யவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புன்செய் புளியம்பட்டியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் இரும்பறை அருகே ஒதிமலை அமைந்துள்ளது. சுமார் 5 ஹெக்டேர் பரப்பளவில் ஒதிமலை பரந்து விரிந்து காணபடுகிறது. ஒதிமலையை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயம், ஆடு - மாடு மேய்ச்சல் நடைபெறுகிறது. ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் 5 முகம், 8 கரம் கொண்ட ஸ்ரீ முருகபெருமான் வீற்றுள்ளார். ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது.

படைப்புக்கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு, முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். அவர் தெரியாது நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது. படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார்.

இந்த அமைப்பு ஆதிபிரம்ம சொரூபம்' எனப்பட்டது. முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறக்கவே, பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார்.



சுவாமிமலை தலத்தில் சிவனுக்கு பிரணவத்தின் விளக்கம் சொன்ன முருகன், இந்த ஓதி மலை தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் ஓதிமலை' என்றும், சுவாமிக்கு ஓதிமலை முருகன்' என்ற பெயரும் ஏற்பட்டது.


ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன. இங்கு மொத்தம் 1800 இக்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ளது. பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்கு உள்ளிட்ட விலங்குகளும், பல வண்ண பறவைகளும் உள்ளன. இது சித்தர்கள் வாழ்ந்து வரும், தவமிருக்கும் மலையாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒதிமலைக்கு புன்செய் புளியம்பட்டி, சத்தியமங்கலம் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சிங்கபூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினமும் வருகிறார்கள்.





இங்கு திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் மற்றும் முக்கிய விசேச தினங்களில் அர்ச்சகர் கோவிலுக்கு வருகை தருகிறார். அதேபோல் ஒவ்வொரு அமாவாசை, சஷ்டி, கிருத்திகை நாட்களில் இங்கு விசேச பூஜை நடைபெறுகிறது. பல்வேறு சிறப்பு மிக்க இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எனவே ஒதிமலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என பக்தர்கள் கூறி உள்ளனர். குறிப்பாக மலையேறும் பக்தர்களுக்கு ஆங்காங்கே குடிநீர், நிழல்குடை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஞாயற்றுகிழமைதோறும் அதிகளவு பக்தர்கள் இங்கு வருகின்றனர். ஆனால் அர்ச்சகர் வருவதில்லை. சுமார் 1800 படிக்கட்டுகள் ஏறிய பின்பு அர்ச்சகர் இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். எனவே ஞாயற்றுகிழமைதோறும் கோவிலை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகளவு பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் கோவிலுக்கு வருவதால் மலைபாதையை சுற்றி சாலை அமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.