தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 15, 2014

கருணாநிதிக்கு ஜெயலலிதா சவால்: 'நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?:பா.ஜ., மீது மீண்டும் விமர்சனம்

 

 சென்னை: ''காவிரி நதி நீர் பிரச்னை குறித்து, கருணாநிதியுடன் விவாதிக்க, தயாராக இருக்கிறேன். அவரது சவாலை ஏற்றுக் கொள்கிறேன். அ.தி.மு.க., சார்பில், நான் பேசுவேன். தி.மு.க., சார்பில், கருணாநிதி சட்டசபை வந்து, விவாதத்தில் கலந்து கொள்ள தயாரா?'' என, ஆரணியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா சவால் விடுத்தார். அத்துடன், 'தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளில், பா.ஜ., விற்கு அக்கறை இல்லை' என, பா.ஜ.,வை மீண்டும் தாக்கி பேசினார்.

ஆரணியில் நடந்த, லோக்சபா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:தமிழகத்திற்கு துரோகம் மட்டுமே இழைத்த, தி.மு.க., தலைவர், கருணாநிதி, திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், 'காவிரி பிரச்னை குறித்து, வாதம் செய்ய, சட்டசபையில் நேரம் ஒதுக்கலாம். அதில் விவாதித்து, யார் தவறு செய்தார்கள்; யார் நியாயமாக நடந்து கொண்டார்கள்; யார் நம் உரிமைகளை பெற்றுத்தர முயற்சித்தார்கள்? என்ற உண்மையை, நாட்டு மக்களுக்கு விளக்கட்டும்' எனக் கூறி இருக்கிறார்.

தயார்
அவரது சவாலை, நான் ஏற்றுக் கொள்கிறேன். தேர்தல் முடிந்து, தமிழக சட்டசபை கூட்டப்பட்டதும், காவிரி நதிநீர் பிரச்னை குறித்து, விவாதிக்க தயாராக இருக்கிறேன். கருணாநிதி துரோகங்களை பட்டியலிட, தயாராக இருக்கிறேன்.என் கட்சி சார்பில், நான்தான் பேசுவேன். இதேபோல், கருணாநிதி, சட்டசபை விவாதத்தில், கலந்து கொள்ளத் தயாரா. தி.மு.க., சார்பில், துரைமுருகனோ, வேறு பிரதிநிதிகளோ விவாதிப்பதை, ஏற்றுக் கொள்ள முடியாது. இதை கருணாநிதி ஏற்றுக் கொள்ளத் தயாரா; சட்டசபைக்கு வரத்தயாரா?என்னை நேருக்கு நேர் சந்தித்து, விவாதிக்க தயாரா. இது குறித்த முடிவை, கருணாநிதி அறிவிக்க வேண்டும். இல்லையெனில், 'துரோகம் இழைக்கப்பட்டது உண்மை தான்' என, கருணாநிதி ஒப்புக்கொள்கிறார் என்று அர்த்தம்.

முதல் அணி
'அ.தி.மு.க., - பா.ஜ.,வின் 'பி' டீம்; பா.ஜ.,வை எதிர்த்து ஏன் பேசவில்லை' என்று, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் யாருக்கும், 'பி' டீம் இல்லை. எங்கள் அணி தான் முதன்மையான அணி.காங்கிரஸ் மற்றும் பா.ஜ., அல்லாத ஆட்சி, மத்தியில் அமைய வேண்டும் என்பதே, அ.தி.மு.க.,வின் லட்சியம். இது நிறைவேற, 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெற்றே தீர வேண்டும். அதற்காகத் தான், அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.தேர்தல்
பிரசார கூட்டங்களில், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசையும், அதில் அங்கம் வகித்து, தமிழகத்திற்கு துரோகம் இழைத்த, தி.மு.க.,வையும் எங்களால், கடுமையாக விமர்சிக்க முடியும்.தி.மு.க.,வின் பொய் முகமூடியை கிழித்தெறிய வேண்டும் என்பதற்காகவே, தி.மு.க.,தேர்தல் அறிக்கையை, விமர்சித்து வருகிறேன். அ.தி.மு.க., வெற்றி பெறும்போது, என்ன திட்டங்களை செயல்படுத்துவோம் என்பதையும் கூறி வருகிறேன்.ஆனால், தி.மு.க., மற்றும் இதர கட்சிகள், தாங்கள் என்ன செய்துள்ளோம்; இனி என்ன செய்யப் போகிறோம் என்பதை எடுத்துக் கூறுவதில்லை. அவர்கள் சொல்வது, இரண்டு விஷயங்கள். நான் பாரதப் பிரதமராகி விடக்கூடாது; அடுத்து, அவர்கள் சுட்டிக்காட்டுபவர், பிரதமராக வேண்டும்.

அக்கறை இல்லை
பா.ஜ.,வை பொறுத்தவரை, அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில், காவிரி நதி நீர் பிரச்னை, முல்லை பெரியாறு அணைபிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.எனவே, தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளில், பா.ஜ.,விற்கு அக்கறை இல்லை என்று, நாம் பொருள் கொள்ள வேண்டும்.கடந்த, 1996ல் இருந்து, மத்தியில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தலைமையில், கூட்டணி ஆட்சி நடந்தது. தற்போதைய தேர்தல், முற்றிலும் மாறுபட்ட தேர்தல் முடிவுகளை அளிக்கக் கூடியது.தற்போதுள்ள சூழ்நிலையில், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து, மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை உள்ளது. அதுதான் அ.தி.மு.க., லட்சியம்.இதுபோன்ற ஆட்சியில், அ.தி.மு.க., முக்கிய பங்கு வகிக்க, 40 இடங்களிலும், நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும். அது போன்றதொரு சூழ்நிலையை, நீங்கள் உருவாக்கி கொடுக்க வேண்டும். காங்கிரஸ் - பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தி.மு.க., மற்றும் அதன்
கூட்டணி கட்சி வேட்பாளர்களை, அனைத்து தொகுதிகளிலும், நீங்கள் படுதோல்வி அடைய செய்ய வேண்டும்.எனக்குஎல்லாமே நீங்கள் தான்; உங்களால் தான் நான்; உங்களுக்காகவே நான்; எனக்கு தன்னலம் கிடையாது. எல்லாமே உங்கள் நலன் தான். தமிழ்நாட்டின் நலன் தான். தமிழ் மக்கள் தான் என் மக்கள்.இவ்வாறு, ஜெயலலிதா பேசினார்.

'பா.ஜ., தேர்தல் அறிக்கையில் முரண்'
வேலூரில் நடந்த, தேர்தல் பிரசார கூட்டத்தில், ஜெயலலிதா பேசியதாவது:பா.ஜ., தேர்தல் அறிக்கையில், 'வெளிநாடுகளில் துன்புறுத்தப்படும் இந்துக்களின் புகலிடமாக, இந்தியா விளங்கும். அவர்கள் வரவேற்கப்படுகின்றனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில், இந்திய நாட்டை சேர்ந்த, இந்துக்கள் மட்டும் வசிக்கவில்லை. இஸ்லாமிய, கிறிஸ்துவ, ஜைன, சீக்கியர் என, பல்வேறு சமயங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.துன்புறுத்தப்படும் இந்துக்களுக்கு மட்டும், இந்தியா புகலிடம் அளிக்கும் என்பது, மதசார்பற்ற கொள்கைக்கு எதிரானது. வெளிநாடுகளில் துன்புறுத்தப்படும், இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் புகலிடமாக, இந்தியா விளங்க வேண்டும் என்பது அ.தி.மு.க., கருத்து.இவ்வாறு, ஜெயலலிதா பேசினார்.

0 comments:

Post a Comment