தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 27, 2014

பாரத மாதாவின் பாதமாக இருப்பது தமிழே! - தமிழண்ணல்
பாரத மாதாவின் பாதமாக இருப்பது தமிழ் மொழிதான் என தமிழறிஞர் தமிழண்ணல் கூறினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை கோரி நடைபெற்ற உண்ணாவிரதத்தில் அவர் பேசியதாவது: தமிழ்த் தாத்தா உ.வே.சா., பரிதிமாற் கலைஞர் பெயர்களில் தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. அதே சமயத்தில், ஆரம்பக் கல்வியில் ஆங்கிலத்தைப் புகுத்திவருவது ஏற்புடையதல்ல.

தமிழகத்தில் தமிழைப் பாதுகாக்க திராவிட இயக்கங்கள் தவறிவிட்டன. தமிழை வளர்க்கும் தொலைநோக்குப் பார்வையுடைய தலைவர்கள் இல்லை. மாநில அரசு மொழிக் கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும்.

தாய் மொழிக் கல்வி மற்ற மாநிலங்களில் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிய தமிழக அரசு தமுஎகச போன்ற அமைப்புகளை இணைத்து ஆய்வு செய்து, அந்த குழு பரிசீலனை அடிப்படையில் தமிழை அனைத்து நிலைகளிலும் கொண்டு வர வேண்டும்.

பாரத மாதாவின் பாதங்களாக தமிழ் உள்ளது. ஆனால், தமிழை நீதித் துறையில், நிர்வாகத் துறையில், உயர் கல்வியில் கொண்டுவருவதற்கு இன்னும் போராட வேண்டியுள்ளது.

தமிழ் மொழி எனும் தீபத்தை அணையாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்துக்கு உள்ளது என்றார்.

போராட்ட நோக்கை விளக்கி பேராசிரியர் அருணன் பேசியது: நம் நாட்டில் 40 சதவிகிதம் பேர்தான் இந்தி பேசுகிறார்கள். இந்தி தவிர, 21 மொழிகளுக்கான சம அந்தஸ்தை மத்தியில் ஆட்சியிலிருப்போர் தர மறுக்கிறார்கள். மொழி என்பது அவரவர் திறமையை வெளியே கொண்டுவரும் சாதனம். ஆகவே, அன்னிய மொழியில் தேர்வை எழுதினால் தனித் திறனை வெளிக்கொண்டு வர முடியாது. ஆகவே, மத்திய அரசு இந்தி அறிந்தோர் அந்த மொழியிலும், மற்றவர் ஆங்கிலத்திலும் தேர்வெழுத கூறுவது சரியானதல்ல.

தமிழகத்தில் தரமான கல்வியை அளிக்க அம்மா கல்விக்கூடத்தையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்க வேண்டும் என்றார்.

உண்ணாவிரதத்துக்கு தலைமை வகித்து தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் பேசியதாவது: தமிழைக் காக்க மொழிப் போர் நடத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சமூகத்தின் மனசாட்சியான எழுத்தாளர்கள், கலைஞர்கள் மொழியைக் காக்க நடத்தும் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது அவசியம் என்றார்.

மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் ரா.அண்ணாதுரை வாழ்த்துரையில், இடதுசாரிகளின் தொடர் முயற்சியாலே தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. ஆனால், மக்களவையில் இந்தி, ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழிகளில் பேச முடியாத நிலை உள்ளது என்றார்.

போராட்டத்தில் தமுஎகச மாநிலத் தலைவர்கள் எஸ்.ஏ.பெருமாள், என்.நன்மாறன், தேனி சீருடையான், ஆர்.நீலா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

புரட்சிக் கவிஞர் மன்றம் பி.வரதராசன், செந்தமிழ்க் கல்லூரி குருசாமி மற்றும் நந்தலாலா, நா.முத்துநிலவன், தெ.முத்து, மயிலை பாலு, மதுக்கூர் ராமலிங்கம், லெட்சுமணப் பெருமாள் ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் பேசினர். தப்பாட்டம், கவிதை, பாடல்கள் நிகழ்ச்சியும் நடைபெற்றன. தமுகஎகச மாவட்டத் தலைவர் ப.கவிதாகுமார் வரவேற்றார்.

0 comments:

Post a Comment