தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 13, 2014

பாரதியின் கனவை நனவாக்க நதிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் - ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்



மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு வ.உ.சி. பூங்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10-ஆவது ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் அவர் பேசியதாவது:

ஈரோடு என்றவுடன் காவிரியும், மஞ்சள், கரும்பு விவசாயமும், பெரியாரும் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. இளைஞர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர், அறிவாளிகள் ஆயிரக்கணக்கில் கூடுவது ஈரோடு புத்தகத் திருவிழா என்பதால்தான் 2-ஆவது முறையாக இங்கு பேச முடிவு செய்தேன்.

தினமும் புத்தகம் படிக்கவேண்டும் என்ற உணர்வு வரவேண்டும். மனித வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் ஆற்றல் படைத்தவை புத்தகங்கள். அறிவார்ந்த எண்ணங்களை புத்தகங்கள் உருவாக்குகின்றன. நல்ல பண்புகளை கற்றுத்தரும் ஆசிரியர்கள்தான் புத்தகங்கள்.

சில நாள்களுக்கு முன் சர் ஹெம்ப்ரிடேவி, மைக்கேல் பாரடே, தாமஸ் ஆல்வா எடிசன் ஆகிய மூன்று அறிவியல் மேதைகள் பற்றிய புத்தகங்களைப் படித்தேன். ராயல் சொசைட்டியில் உறுப்பினராக இருந்த மிகப்பெரிய வேதியியல் அறிஞரான ஹேம்ப்ரிடேவியின் ஆய்வகத்தில் மைக்கேல் பாரடேவுக்கு தாற்காலிகமாக சாதாரண பணி கிடைத்தது.

ஆய்வகத்தை சுத்தம் செய்யும் அந்த சாதாரணப் பணியில் சேர்ந்த பாரடே, ஒரே மாதத்தில் ஹெம்ப்ரிடேவியின் ஆராய்ச்சிகளுக்கு குறிப்பு தரும் அளவுக்கு முன்னேறினார். இதைப் பார்த்த ஹேம்ப்ரிடேவி, பாரடேவுக்கு முழுமையான ஆராய்ச்சி செய்யும் பொறுப்பை ஒப்படைத்தார்.

அப்படிப்பட்ட பாரடே தான் காந்தபுலம் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் விதியை உருவாக்கினார். அது தான் பாரடே விதி என அழைக்கப்படுகிறது. இந்த விதியை பயன்படுத்தித் தான் தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார உற்பத்தி, பல்பு போன்ற புதிய படைப்புகளை உருவாக்கினார்.

தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, மைக்கேல் பாரடே மானசீக குருவாக இருந்தார். பள்ளிக்கு போகாமல் ஆசிரியர்களிடம் படிக்காமல் பொது நூலகத்துக்குச் சென்று படித்தவர் எடிசன். மின்சார செய்முறை ஆராய்ச்சி பற்றி 2 புத்தகங்களை நூலகத்தில் இருந்து எடுத்து படித்ததால் தான் மின் உற்பத்தி செய்யும் முறையை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது.

ஒவ்வொரு வெற்றியாளர்களுக்கும் ஒரு வழிகாட்டி இருப்பர். சில நேரங்களில் வழிகாட்டிகள் ஆசிரியர்களாகவும், பல நேரங்களில் புத்தகங்களாகவும் இருப்பர். எனவே, எந்தப் புத்தகத்தை படித்தாலும் உள்வாங்கி முழுமையாக படிக்கவேண்டும்.

கடந்த நூற்றாண்டில் மிகப்பெரிய கணித மேதையாக விளங்கியவர் ராமானுஜம். தனது 13 வயதில் சிக்கலான கணக்குகளுக்குத் தீர்வுகண்டார். தனக்குப் பிடித்த கணிதத்தை ஆழமாக அவர் படித்ததால்தான் மிகப்பெரிய இடத்துக்கு உயர்ந்தார்.
வெற்றியை கொண்டாடாவிட்டாலும், தோல்வியைக் கொண்டாட கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கைப் பயணம் முழுமை பெறும். தாற்காலிக இன்பங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தால்தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும்.
நமது கலாசாரம், பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல புத்தகங்கள் உதவுகின்றன. 2,000 ஆண்டுகளுக்கு முன் பனை ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்ட இலக்கியங்களை, புத்தக வடிவுக்கு கொண்டுவர பெரும்பாடுபட்டவர் தமிழ் தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சா. அவரது தொண்டை யாராலும் மறக்க முடியாது. அதேபோல வெளிநாட்டில் பிறந்து இந்தியாவுக்கு வந்த ஜி.யு.போப்-இன் தமிழ்த் தொண்டும் அளவிட முடியாதது.

திருவாசகம், மணிமேகலை உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார். உ.வே.சா-வை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட அவர், தனது கல்லறையில் தான் ஒரு தமிழ் மாணவர் என எழுதச் சொன்னார்.

அதேபோல என்னை மிகவும் கவர்ந்த கவிஞர் பாரதியார். 1910-ஆம் ஆண்டிலேயே நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதை போன்று கவிதைகள் பாடி மகிழ்ந்த அவர், வங்கத்துக்கு ஓடி வரும் நதிகளை எல்லாம் மத்திய நாடுகளுக்கு திருப்பி, உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று நதிகள் இணைப்பு பற்றி அப்போதே கனவு கண்டார்.

எனவே, பாரதியின் கனவை நனவாக்க நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு நடப்பு பட்ஜெட்டில் நதிகள் இணைப்புத் திட்டம் குறித்த ஆய்வுப் பணிகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்புக்குரியது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தவேண்டும்.

அருமையான புத்தகங்களைப் படித்தால் கற்பனைத் திறன் ஊக்குவிக்கப்படும். அதனால் படைப்பாற்றல் திறன் உருவாகும். படைப்பாற்றல் திறன் உருவானால் சிந்தனை திறன் வளரும். சிந்தனை திறன் வளர்ந்தால் அறிவு பெருகும். அறிவு பெருகினால் மகான் ஆகலாம்.

எனவே, இளைஞர்களின் சிந்தனையை தூண்டும் தரமான புத்தகங்களை பதிப்பிக்க பதிப்பாளர்கள் முன்வரவேண்டும் என்றார்.

இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம், காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், அக்னி ஸ்டீல்ஸ் நிறுவன இயக்குநர்கள் எம்.சின்னசாமி, ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment