தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 18, 2014

கம்பன் படைத்த காவியத்தில் உயர்ந்த பாத்திரமாக விளங்குகிறாள் கைகேயி: பழ.கருப்பையா
  

ஒரு தவறைச் செய்து, அந்தத் தவறை உணர்ந்து தெளிந்த கைகேயி என்ற பாத்திரமே கம்ப ராமாயணத்தில் சிறந்த பாத்திரப் படைப்பாக விளங்குகிறது என்று சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா கூறினார்.

வேலூர் நகர அரங்கில் 38-ஆம் ஆண்டு கம்பன் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், "நல்லவெல்லாம் தீயவாம், தீயவும் நல்லவாம்' என்ற தலைப்பில் அவர் சிறப்புரையாற்றியது:

கம்ப ராமாயணத்தில் சில பாத்திரப் படைப்புகள் உயர்வானவை. சில மோசமானவை. இவற்றில் கைகேயி தடங்கலும் செய்தாள், தகைமை உடையவளாகவும் இருந்தாள். தசரதனிடம் கைகேயி இரு வரங்களைக் கேட்கிறாள். "ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும். பரதன் நாடாள வேண்டும்' என்ற இரு வரங்களை தசரதனிடம் அவள் பெறுகிறாள்.

இதைக் கேட்ட வசிஷ்டர், கைகேயியைப் பார்த்து "நீ பெண்ணா, பேயா?' என கடுமையாகப் பேசுகிறார். மக்களும் கைகேயியை கடுமையாகப் பேசுகிறார்கள். கூனி சொல்லும் வரை, பரதன் நாடாள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் இல்லை. அவள் மாறுவதற்கு கூனி காரணமாகிறாள். ராமன் முடிசூடிக் கொண்டால், அதிகாரம் கோசலைக்குச் சென்றுவிடும். நீ தாதியைப் போல் வாழ நேரிடும் என்று கூனி கூறியபோதுதான் அவள் மனம் மாறுகிறாள்.

கூனி எஜமானியின் விசுவாசி. பரதன் முடிசூடிக் கொண்டால் எஜமானி கை ஓங்கும் என்பதுதான் அவளது எண்ணம். ராமன் செல்வாக்கு மிக்கவன், அவனுக்கு முடிசூட்டப் போகிறார்கள் என்றதுமே மக்கள் "இந்த பூமி நம் எல்லோருக்கும் பொதுவானது' என பேசிக் கொள்கிறார்கள். அத்தகைய மேலான நிலை கொண்ட ராமனை வைத்துக்கொண்டு பரதன் நாடாள்வது சிரமம். ராமனை காட்டுக்கு அனுப்பினால் 14 ஆண்டுகளில் மக்கள் ராமனை மறந்துவிடுவார்கள் என்பதுதான் கூனியின் யோசனை.

தசரதன் சொன்னதாக கைகேயி சொல்லும்போது, "தாயே, நீ சொன்னால் நான் காட்டுக்குப் போக மாட்டேனா? பரதன் பெற்ற செல்வம் நான் பெற்ற செல்வம். மன்னன் என்ன சொல்வது, தாயே, நீ சொல் நான் கேட்கிறேன்' என்கிறான் ராமன்.

பதவி என்பது சுகம் என்ற நிலை வந்துவிட்டால், ஆட்சி அதிகாரம் நமக்குத் தேவையில்லை என்று வெளியேறுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆட்சி என்பது பொறுப்பு மட்டுமே என்ற நிலையை ராமன் கொண்டிருந்ததால் அவனால் அது முடிந்தது.

தசரதன் அளவுக்கு பரதனை கைகேயி அறிந்தவள் இல்லை. "உன் மகன் ஆட்சியை ஏற்கமாட்டான். அப்படியே அவன் ஏற்றுக் கொண்டாலும், இந்த உலகம் அவனை ஏற்றுக்கொள்ளாது. அதை விட்டுவிடு' என்று கூறுகிறான் தசரதன்.

பரதன் வந்ததும், தசரதன் வானுலகம் சென்றுவிட்டார். "ராமனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டேன். இந்த உலகத்தை உனக்காக ஏற்படுத்தியுள்ளேன்' என்று கைகேயி கூறியபோது, "நீ இவ்வளவு பெரிய கொடுமையைச் செய்துவிட்டு இன்னும் உயிரோடு இருக்கிறாயா?' என்கிறான் பரதன்.

தசரதன் சொன்னபோதும், வசிஷ்டர், நாட்டு மக்கள் திட்டியபோதும் கலங்காத கைகேயி, பரதன் சொன்ன சொல்லால் அரண்டு போனாள். யாருக்காக வரத்தின் மூலம் நாட்டைப் பெற்றாளோ, அதை அவன் ஏற்கவில்லை. மகன் நாட்டை ஆள வேண்டும் என்பது ஒரு சாதாரண பெண்ணின் நிலை.

ஆனால், மகன் நாட்டை ஆள விரும்பவில்லை என்று தெரிந்ததும், தனது தவறை அவள் உணர்கிறாள். ராமனை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் கூட்டத்தோடு கைகேயியும் செல்கிறாள். சும்மா இருந்த கைகேயியை நாம்தான் தவறு செய்ய வைத்துவிட்டோம் என்று கூனியும் அவளோடு செல்கிறாள்.

தான் செய்த தவறை உணர்ந்துவிட்ட கைகேயி, மனமுருகி கண்ணீர் கசிந்து நல்லவளாக, கோசலையைவிட, சுமித்திரையைவிட உயர்ந்தவளாக, சிறந்த பாத்திரமாக திகழ்கிறாள் என்றார் பழ.கருப்பையா.

விழாவுக்கு, கம்பன் கழகப் புரவலர் தெ.சமரசம் முன்னிலை வகித்தார். தலைவர் வெ.சோலைநாதன் வரவேற்றார். செயலர் ச.இலக்குமிபதி, பொருளாளர் வி.எல்.சச்சிதானந்தம், புதுவை கம்பன் கழகச் செயலர் தி.முருகேசன், துணைத் தலைவர் வி.பி.சிவக்கொழுந்து, வேலூர் திருக்குறள் பேரவைத் தலைவர் இரா.ப.ஞானவேலு ஆகியோர் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment