தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 11, 2014

இலக்கியத்தால் இதயம் வளரும்: இலங்கை ஜெயராஜ்

 

இலக்கியத்தால் இதயம் வளரும் என்று சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் பேசினார்.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் திங்கள்கிழமை நடைபெற்ற சிந்தனை அரங்கில் கம்பன் என்றொரு மானுடன் என்னும் தலைப்பில் அவர் பேசியதாவது:

ஒப்பற்ற புலவர் கம்பன். அவரை தமிழர்கள் மிகப்பெரிய சொத்தாக கருதவேண்டுóம். இலக்கியவாதியாக, பக்தியாளராக அவரை பார்த்த தமிழர்கள், சமுதாய சிந்தனையாளராகப் பார்க்கத் தவறிவிட்டனர்.

இன்று இலக்கியத்தை தேடும் இளைஞர்களைவிட, அறிவியலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். அறிவியலைத் தேடினால் புத்தி வளரும். இலக்கியத்தை தேடினால் இதயம் வளரும். இதயம் வளர்ந்தால் மனித இனம் வளரும். புத்தி வளர்ந்தால் சுயநலம் அதிகரித்து சமுதாயம் கெட்டுவிடும். இதயத்தையும், புத்தியையும் ஒருசேர வளர்க்கவேண்டும்.

புத்தி விரிய விரிய மனம் சுருங்கிவிடுகிறது. குடும்பங்களில் கூட ஒவ்வொரு உறுப்பினர்களும் தனித் தனியாக வாழப் பழகிவிடுகின்றனர். அறிவியல் கருவிகளால் நேரம் மிச்சமாகியுள்ளது. ஆனால் அந்த மிச்சமான நேரத்தைப் பார்க்க முடிவதில்லை. மனம் ஓடத் தொடங்கிவிட்டதால் நேரம் தொலைந்துவிட்டது. மனம் ஓடத் தொடங்கிவிட்டதால் எந்த ஒரு செயலிலும் மனிதனுக்கு அனுபவம் இல்லாமல் போய்விடுகிறது. 

காலத்தை தமிழர்கள் 4 யுகமாக பிரித்துப் பார்த்தனர். இது கலியுகம். இதில் மனிதநேயம் மிகவும் அரிதாக இருக்கும் என்று தமிழர்கள் கணித்துவைத்துள்ளனர்.

தனி மனிதன் திருந்தினால் உலகம் திருந்திவிடும். அறம் பற்றி உபதேசிக்கும் பெரியவர்கள் அதைப் பின்பற்றுவதில்லை. அதனால், பெரியவர்களை இளைஞர்கள் மதிப்பதில்லை. இன்றைய இளைஞர்கள் படித்தவர்களாக இருக்கின்றனர். ஆனால், பலசாலிகளாக இல்லை. அறிவாளியாகவும், பலசாலிகளாகவும் இருக்க இளைஞர்கள் பயிற்சி பெற வேண்டும்.

அக்காலத்தில் தலைவர்கள் சாதாரண மக்களைப் பற்றிக் கவலைப்பட்டனர். அதனால், மக்கள் தலைவர்களைப் பற்றிக் கவலைப்பட்டனர். ஆனால், இன்று தலைவர்கள் மக்களைப் பற்றிக் கவலைப்படுவது போல நடிக்கின்றனர். மக்களும் தலைவர்களைப் பற்றி கவலைப்படுவது போல நடிக்கின்றனர். பதவி வரும்போது ராமன் இன்பமும், துன்பமும் அடையாமல் சமநிலையில் இருந்தான். ஆனால், இன்றைய தலைவர்கள் பதவி வந்தால் இன்பமும், பதவி தொலைந்தால் துன்பமும் அடைகின்றனர்.

கடவுள் கம்பனைத் தூக்கி எறிந்துவிடலாம். இலக்கிய கம்பனைத் தூக்கி எறிந்துவிடலாம். ஆனால், மனிதநேயக் கம்பனை ஒதுக்கிவிட முடியாது என்றார்.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்.எஸ்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றினார்.

 

0 comments:

Post a Comment