தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, August 21, 2014

பெண் கல்விக்கு வித்திட்டது பாரதி, பெரியார்: த.ஸ்டாலின் குணசேகரன்



பெண் கல்விக்கு வித்திட்டது பாரதி, பெரியார்தான் என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினார்.

ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக் பள்ளியில் கடந்த 10,12-ஆம் வகுப்புத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கும், சாதனை படைத்த மாணவியருக்கும் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் தலைமை வகித்து ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். பள்ளித் தாளாளர் எஸ்.மங்களவதி வரவேற்றார்.

இதில், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது:

பாரதி, பெரியார் ஆகியோர்தான் பெண்களின் கல்வி, விடுதலை, சமத்துவம், உரிமைக்கு வித்திட்டவர்கள். இந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்தவர்களில் முக்கியமானவர் கலைமகள் கல்வி நிலையத்தை தோற்றுவித்த மீனாட்சி சுந்தரம் முதலியார்.

பெண்கள் கல்வி பெற்றால் ஒரு குடும்பமே கல்வி பெற்றதற்குச் சமம் என்று கருதியவர் மீனாட்சி சுந்தரம். லாப நோக்கமின்றி அந்தக் காலத்திலேயே பெண் கல்விக்காக குரல் கொடுத்தவர்.

விடுதலை வேள்வியில் தமிழர்களின் பங்கு என்ற நூலின் முதல் மற்றும் 2-ஆம் பாகத்தை நான் எழுத தூண்டுகோலாக இருந்தது காந்தி எழுதிய சத்தியசோதனை புத்தகம்.

இப்பள்ளியில் நான் படிக்கும்போது வெள்ளிகிழமைதோறும் மாலை 4 முதல் 6 மணி வரை 2 மணி நேரம் சத்தியசோதனை நூலை வைத்து மீனாட்சி சுந்தரனார் எங்களுக்கு கற்றுத் தருவார். அன்று அவர் விதைத்த விதையே நான் விடுதலை வேள்வியில் தமிழர்களின் பங்கு என்ற நூலை எழுத வித்தாக அமைந்தது. தற்போது இப்புத்தகத்தின் 3-ஆம் பாகத்தை எழுதி வருகிறேன் என்றார்.

விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) குணசேகரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மல்லிகா, மகேந்திரா பொறியியல் கல்லூரி முதல்வர் மைதிலி, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இந்திராணி, சித்ரா, மாலினி, பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் ரகு, துணைத் தலைவர்கள் செந்தில்குமார், ராஜா, மெட்ரிக் பள்ளி பிடிஏ தலைவர் ராஜுசுப்ரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment