தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, December 31, 2013

விவசாயிகள் பம்பு செட்  வைத்து தண்ணீர் எடுக்க முதலமைச்சரை சந்தித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்
- விவசாயிகளிடம் தா.பாண்டியன் பேச்சு

************************************************************

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன்  கிணறு மற்றும் விவசாய நிலங்களை பார்வையிட்டார்
பவானிசாகர் அருகே உள்ள வெள்ளியம்பாளையம்  கிராமத்தில் பவானி ஆற்றோரப்பகுதிகளில் பட்டாநிலங்களில் உள்ள கிணறுகளில் நீர் எடுத்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் நேரில் சந்தித்து கிணறு மற்றும் விவசாய நிலங்களை பார்வையிட்டார்.


தா.பாண்டியன் பேச்சு
 பின்னர் தா.பாண்டியன் விவசாயிகளிடம்  பேசியதாவது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றின் கரையோரங்களில் மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வந்தது. பைப்லைன் மூலம் கிணற்றுநீர் கொண்டு செல்வதற்கு அரசு அனுமதி அளிக்கப்பட்ட பின்புதான் இப்பகுதியில் உள்ள புஞ்சை நிலங்கள் நஞ்சையாக மாறியுள்ளது. இப்பகுதியில் கரும்பு, தென்னை, வாழை மற்றும் மல்லிகை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். இதனால் உணவு உற்பத்தி வெகுவாக அதிகரித்துள்ளது. கிணறு வெட்ட வருவாய்த்துறையும், அதற்கு வங்கிகள் கடனுதவியும், சுயநிதித்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பும் வழங்கியுள்ளது. மேலும் விவசாயிகள் பைப்லைன் பதித்தற்கான தண்டத்தீர்வையும் அரசுக்கு செலுத்தி வருகின்றனர். இவ்வாறு முழு அனுமதி பெற்று நீர் எடுத்து விவசாயம் செய்து வருபவர்களின் மின்இணைப்பை நீதிமன்ற உத்தரவை காட்டி  துண்டிப்பு செய்வது தவறாகும். நீதிமன்ற உத்தரவில் சட்டவிரோதமாக நீர் எடுத்தால் துண்டிப்பு செய்யலாம் என மட்டுமே கூறப்பட்டுள்ளது. எம்ஜிஆர் ஆட்சியில் வைகை நதியில் விவசாயிகள் பம்ப்செட் வைத்து தண்ணீர் எடுக்க அனுமதியும், அதற்கு அரசு மானியமும் வழங்கப்பட்டுள்ளது. கெயில் எரிவாயு பைப்லைன் விவகாரத்தில் தமிழக அரசு விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டது போல் இப்பிரச்சினையிலும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும். முதலமைச்சரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது இந்த விபரங்களை விளக்கி கூறி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் மின்இணைப்புகளை துண்டிப்பதை கைவிடவேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் எம்எல்ஏ சுந்தரம், வால்பாறை எம்எல்ஏ ஆறுமுகம், சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன், மாவட்ட துணைசெயலாளர் வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர்கள் பி.என்.ராஜேந்திரன், ஸ்டாலின் சிவக்குமார், மாநிலக்குழு உறுப்பினர் மோகன்குமார், தமிழ்நாடு மலர்கள் உற்பத்தியாளர்கள் தலைமைச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.முத்துச்சாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய சங்க பிரதிநிதிகள் டி.கே.சின்ராஜ், ரவி மற்றும் பவானிசாகர், சத்தியமங்கலம் சுற்று வட்டார விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment