தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 7, 2014

புஞ்சைபுளியம்பட்டி அருகே பாம்பு,தேள்,பூரான் மண்பொம்மைகளை உடைத்து விநோத வழிபாடு





ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள அலங்காரிபாளையம் ஐயன் கோயிலில் விஷ ஜந்துக்களின் உருவ பொம்மையை உடைத்து வழிபடும் விநோத பண்டிகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் காவிலிபாளையத்தை அடுத்த அலங்காரிபாளையத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயன்கோயில் உள்ளது.  கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பண்டிகை நடைபெறுவது வழக்கம். இதன்படி, கோவிலில் ஐயன் சுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் வரத் துவங்கினர். 

கோயில் வளாகத்தில் பாம்பு, தேள், பூரான், பல்லி மற்றும்  சிலந்தி போன்ற  விஷ ஜந்துகளின் மண் உருவபொம்மைகள் ரூ.10க்கு விற்கப்பட்டன.  பக்தர்கள் அதனை வாங்கி ஐயன், கருப்பராயன், தன்னாசியப்பன் மற்றும் பாம்பாட்டி தெய்வங்கள் முன் வைத்து வழிபட்டு அதன்பிறகு கோயில் தெற்கு மதில் சுவர் ஓரத்தில் கற்பூரமேற்றி மண்பொம்மைகளை உடைத்து காணிக்கை செலுத்தினர். 

இவ்வாறு வழிபட்டால்  வீடு மற்றும் தோட்டப்பகுதிகளில் விஷ ஜந்துக்கள் தென்படாது என்பது ஐதீகம். மேலும் இக்கோயிலில் சாம்பல் விபூதியாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

சத்தி, கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, அந்தியூர், சத்தி, புஞ்சைபுளியம்பட்டி, அன்னூர், சேவூர், நம்பியூர், அவினாசி, மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் பவானிசாகர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இங்கு பனைமரங்கள் அதிகமுள்ள பகுதி என்பதால் நுங்கு விற்பனை கோயில் வளாகத்தில் களை கட்டியது.கோயிலுக்கு வரும் பக்தர்கள் மண்பானை வாங்குவதால் மண்பானைகள்  விற்பனையும் ஜோராக நடைபெற்றது.   புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம் மற்றும் நம்பியூர் பகுதிகளிலிருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

0 comments:

Post a Comment