தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 7, 2014

குடிநீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானைகள்



பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் குடிநீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கின்றன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் நடமாடுகின்றன. நடப்பாண்டு பருவமழை பொய்த்துவிட்டதால், பவானிசாகர் வனத்தில் கடும் வறட்சி நிலவுவதால் அங்கு தீவனம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மரங்களில் இலைகள் உதிர்ந்து அதன் கிளைகள் காய்ந்து கிடக்கின்றன. அங்குள்ள தடுப்பணைகள் மற்றும் வனக்குட்டைகளில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன

பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிந்துவிட்டதால் தெங்குமரஹாடா, நீலகிரி கிழக்குச்சரிவு மற்றும் விளாமுண்டி வனப்பகுதியில் உள்ள யானைகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி மாயாறு மற்றும் பவானி ஆற்றுக்கு பகல் நேரங்களிலேயே வந்து விடுகின்றன. ஆற்றோரம் பசுமையாக உள்ள நிலவெளிகளில் வளர்ந்துள்ள  பசுந்தீவனத்தை மேய்ந்துவிட்டு ஆற்று நீரில் கும்மாளமிடுகின்றன.  கடந்த  இரு தினங்களாக  நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆற்று நீர் செந்நிறமாக பாய்ந்து செல்கிறது.

பவானிசாகர் நீர்த்தேக்கப்பகுதியான சித்தன்குட்டை பவானி ஆற்றில் குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பதால் பொதுமக்கள் அங்கு செல்ல வேண்டாம் என பொதுப் பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

வெயிலின் தாக்கத்தை தணித்துக்கொள்ள யானைகள் ஆற்றில் இறங்கி ஒரு  மணி நேரமாக நீரில் விளையாடி குதூகலிக்கின்றன. அதன்பிறகு, அவை கரையேறி நீலகிரி கிழக்குச்சரிவு வனப்பகுதிக்கு செல்கின்றன.இந்த அற்புத காட்சியை தினந்தோறும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.

இது குறித்து சித்தன்குட்டை விவசாயி ராமசாமி கூறியது: 
தினமும் மாலை நேரங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக ஆற்றங்கரைக்கு படையெடுக்கின்றன. இதில் சில யானைகள் அங்கு கூடியிருக்கும் பொதுமக்களை பார்த்தால் பயந்தபடி வனப்பகுதியில் மறைந்து நிற்கின்றன. பகல்பொழுது முடிந்தவுடன் மாலை நேரத்தில் அவை ஆற்றிற்கு வருகின்றன. அதேசமயம்,மனிதர்களைக் கண்டு பழகிய யானைக்கூட்டங்கள் பகல்நேரங்களிலேயே சாதாரணமாக  ஆற்றிற்கு வந்து செல்கின்றன என்றார்.

0 comments:

Post a Comment