தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, July 24, 2014

திம்பம்: வனத்துறை கூண்டில் சிக்கியது ஆள்கொல்லி ஆண் சிறுத்தை

சிறுத்தையை வனத்துறையினர்  உயிருடன் பிடித்தனர்





சத்தியமங்கலம்,ஜூலை 24:
43 நாள்களில் இரண்டு பேரை கொன்ற ஆள்கொல்லி சிறுத்தையை வனத்துறையினர் வியாழக்கிழமை உயிருடன் பிடித்தனர்.பின்னர், சிறுத்தைக்கு மயக்கமருந்து செலுத்தி தனிகூண்டில் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பாரமரிப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்,  திம்பம் மலைப்பகுதியில் ஜூன் 11ம் தேதி தாளவாடி முகமது இலியாஸ்(24), ஜூலை 17ம் தேதி வனக்காவலர் க.கிருஷ்ணன்(57) ஆகியோரை ஆள்கொல்லி சிறுத்தை கடித்து கொன்றது.இதையடுத்து, மனிதர்களை கொல்லும் சிறுத்தை கண்டுபிடிக்க திம்பம் மலைப்பாதை 24 வது வளைவு முதல் 27வது வளைவு வரையிலும் தலமலை சாலையில் சிறுத்தை வழித்தடத்திலும் 30 அதிநவீன தானியங்கி காமிராக்கள்  தினந்தோறும் கண்காணிக்கப்பட்டது. இதில் திம்பம் மற்றும் தலமலை சாலையில் வைக்கப்பட்ட காமிராக்களில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது. அந்த புகைப்படங்களை ஆய்வு செய்த வனத்துறையினர் ஆள்கொல்லி சிறுத்தையை அடையாளம்  கண்டனர். 

அதனை தொடர்ந்து, சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் 5 கூண்டுகள் வைத்து சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிப்பதற்கு கோவை வனக்கால்நடை மருத்துவர் தலைமையில் சிறப்பு பயிற்சி பெற்ற வனச்சரக அலுவலர்கள் கொண்டு தனிப்படையினர்  சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து அதனை பிடிக்க திம்பம் வனப்பகுதியில் முகாமிட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை தலமலை சாலைப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.
அப்போது, கூண்டில் இருந்து தப்பிக்க சிறுத்தை ஆக்ரோஷமாக உறுமியது. பிடிப்பட்ட சிறுத்தை அடையாளம் காண்பதற்காக ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் ஐ.அன்வர்தீன், சத்தி புலிகள் காப்பக கள துணை இயக்குநர்கள் கே.ராஜ்குமார், சி.ஹெச்.பத்மா, வனச்சரக அலுவலர்கள் எஸ்.சண்முகம், ராம்ராஜ், உதயராஜ், பெர்னாட் ஆகியோர் கூண்டின் அருகே சென்றபோது அவர்களை தாக்க முயன்றபோது கூண்டின் கம்பியில் மோதி சிறுத்தையின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து,சிறுத்தைக்கு மயக்கம் மருந்து செலுத்தி அதன் உடல்நிலையை ஆய்வு செய்தனர். . பின்னர், அதனை மேல்பகுதிக்கு கொண்டுவந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தனிக்கூண்டில் சிறுத்தையை வைத்து பூட்டினர். சுமார் 45 நிமிடத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்த சிறுத்தையை தனிவேனில் ஏற்றி சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பாரமரிப்புக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு பாதுகாப்பாக, வனப்பாதுகாப்பு படை வீரர்கள் உடன் சென்றனர்.


இது குறித்து ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் ஐ.அன்வர்தீன் வியாழக்கிழமை கூறியது:   இந்த அசாதாரண நிகழ்வுகளில் சிறுத்தைத் தாக்கி இறந்ததால் மனிதர்களை கொல்லும் சிறுத்தை அடையாளம் காணப்பட்டு இச்சிறுத்தையினை பிடிக்க இப்பகுதிகளில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்  இது தொடர்பாக வகுத்துள்ள நெறிமுறைகளுக்குட்பட்டு மேற்படி சிறுத்தையை பிடிக்கும் பணியில் இரவுப்பகலாக வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். பல்வேறு போராட்டத்திற்கு பிறகு, போக்கு காட்டி வந்த  ஆள்கொல்லி சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் உயிருடன்  பிடிபட்டது. சிறுத்தையின் உடல் அடையாளங்களை, காமிராவில் பதிவான அதன் புகைப்படங்களுடன் ஆய்வுசெய்தபோது கூண்டில் சிக்கியது ஆள்கொல்லி சிறுத்தை தான் என்பது உறுதி செய்யப்பட்டது. திம்பம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் நடமாடினாலும் ஒவ்வொன்றும் தனக்கென ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து வாழும் என்பதால் இங்கு மேலும் சிறுத்தைகள் இருக்க வாய்ப்பில்லை. என்றார்

0 comments:

Post a Comment