தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, September 25, 2015

ஒதிமலை முருகன் கோவில் மலைப்பாதையை சுற்றி சாலை வசதி செய்ய பக்தர்கள் கோரிக்கை - மேலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுகோள் 




புன்செய் புளியம்பட்டி செப்டம்பர் 25 : புன்செய் புளியம்பட்டியை அடுத்துள்ள ஒதிமலை முருகன் கோவில் மலைப்பாதையை சுற்றிலும் சாலை வசதி செய்யவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புன்செய் புளியம்பட்டியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் இரும்பறை அருகே ஒதிமலை அமைந்துள்ளது. சுமார் 5 ஹெக்டேர் பரப்பளவில் ஒதிமலை பரந்து விரிந்து காணபடுகிறது. ஒதிமலையை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயம், ஆடு - மாடு மேய்ச்சல் நடைபெறுகிறது. ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் 5 முகம், 8 கரம் கொண்ட ஸ்ரீ முருகபெருமான் வீற்றுள்ளார். ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது.

படைப்புக்கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு, முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். அவர் தெரியாது நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது. படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார்.

இந்த அமைப்பு ஆதிபிரம்ம சொரூபம்' எனப்பட்டது. முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறக்கவே, பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார்.



சுவாமிமலை தலத்தில் சிவனுக்கு பிரணவத்தின் விளக்கம் சொன்ன முருகன், இந்த ஓதி மலை தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் ஓதிமலை' என்றும், சுவாமிக்கு ஓதிமலை முருகன்' என்ற பெயரும் ஏற்பட்டது.


ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன. இங்கு மொத்தம் 1800 இக்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ளது. பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்கு உள்ளிட்ட விலங்குகளும், பல வண்ண பறவைகளும் உள்ளன. இது சித்தர்கள் வாழ்ந்து வரும், தவமிருக்கும் மலையாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒதிமலைக்கு புன்செய் புளியம்பட்டி, சத்தியமங்கலம் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சிங்கபூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினமும் வருகிறார்கள்.





இங்கு திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் மற்றும் முக்கிய விசேச தினங்களில் அர்ச்சகர் கோவிலுக்கு வருகை தருகிறார். அதேபோல் ஒவ்வொரு அமாவாசை, சஷ்டி, கிருத்திகை நாட்களில் இங்கு விசேச பூஜை நடைபெறுகிறது. பல்வேறு சிறப்பு மிக்க இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எனவே ஒதிமலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என பக்தர்கள் கூறி உள்ளனர். குறிப்பாக மலையேறும் பக்தர்களுக்கு ஆங்காங்கே குடிநீர், நிழல்குடை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஞாயற்றுகிழமைதோறும் அதிகளவு பக்தர்கள் இங்கு வருகின்றனர். ஆனால் அர்ச்சகர் வருவதில்லை. சுமார் 1800 படிக்கட்டுகள் ஏறிய பின்பு அர்ச்சகர் இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். எனவே ஞாயற்றுகிழமைதோறும் கோவிலை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகளவு பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் கோவிலுக்கு வருவதால் மலைபாதையை சுற்றி சாலை அமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 comment: