தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, September 7, 2015

தாளவாடி மக்களின் கனவு நனவானது. தாளவாடி தனி தாலூகாவாக சட்டமன்றத்தில் அறிவிப்பு. பட்டாசு வெடித்து கொண்டாட்டம் 
 


 
சத்தியமங்கலம், செப்.1. தாளவாடி தனிதாலூகாவாக சட்டமன்றத்தில் நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். கடல்மட்டத்திலிருந்து சுமார் 2000 அடி உயரத்தில் உள்ளது ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி மலைப்பகுதி. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள இந்த தாளவாடி மலைப்பகுதியில் 60 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.  இப்பகுதி மக்களின் அடிப்படைத்தொழில் விவசாயம் ஆகும். கரும்பு, மக்காச்சோளம், முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் அதிகளவில் பயிர் செய்யப்படுகின்றன. தமிழக கர்நாடக எல்லைப்பகுதியில் உள்ள இப்பகுதி ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது. சத்தியமங்கலம் தாலூகாவிற்குட்பட்ட இப்பகுதியில் மட்டும் வனப்பகுதியை தவிர்த்து 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலங்கள் உள்ளன. இதில் புஞ்சை நிலங்கள் 19 ஆயிரம் ஹெக்டேரும், புறம்போக்கு நிலங்கள் 6  ஆயிரம் ஹெக்டேரும் உள்ளன. கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ளதால் தாளவாடி மலைப்பகுதியில் கன்னட மொழி பேசுபவர்கள் அதிகம் உள்ளனர். இது தவிர தமிழ் பேசுபவர்கள், மலைவாழ் மக்கள், பழங்குடியினர் என மொத்த மக்கள் தொகை 2011 ம் ஆண்டு  கணக்கெடுப்பின்படி 65 ஆயிரத்து 548 ஆக உள்ளது.   இதில் ஆண்கள் 32810. பெண்கள் 32718 ஆகும். தாளவாடி வட்டாரத்தில் மட்டும் தாளவாடி, தலமலை, ஆசனூர் மற்றும் கேர்மாளம் ஆகிய 4 வனச்சரகங்கள் உள்ளன. இதனால் வனத்தை நம்பி வாழும் மக்கள் அதிகம். தாளவாடி உள்வட்டத்தில் மல்லன்குழி, அருளவாடி, பனகஹள்ளி, தொட்டமுதுகரை, எரகனஹள்ளி, கெட்டவாடி, கொங்கஹள்ளி, மரூர், தொட்டகாஜனூர், தாளவாடி, சிக்ககாஜனூர், திகினாரை, கரளவாடி, பையனாபுரம், மாதஹள்ளி, நெய்தாளபுரம், இக்கலூர், தலமலை, ஆசனூர், திங்களூர் அ, திங்களூர் ஆ என மொத்தம் 21 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் ஜாதிச்சான்று, வருமானச்சான்று, குடியிருப்புச்சான்று, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றுகளை பெற 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்தியமங்கலத்திற்கு வரவேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர 160 கிலோமீட்டர் பயணிக்கவேண்டும். அடர்ந்த வனப்பகுதியில் 27 அபாயகரமான கொண்டைஊசிவளைவுகளைக் கொண்ட திம்பம் மலைப்பாதையில் கொடிய வனவிலங்குகள் நடமாடும் சாலை வழியாக சுமார் இரண்டரை மணிநேரம் பயணித்தால்தான் சத்தியமங்கலத்தை அடைய முடியும். ஈரோடு செல்வதற்கு நான்கரை மணிநேரம் பயணிக்க வேண்டும். அதிலும் மலைப்பாதையில் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு 8 மணி நேரம் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது சாதாரணமான நிகழ்வாக உள்ளது. சான்று விண்ணப்பத்தை அளிக்க ஒருநாள் மீண்டும் சான்று பெற ஒரு நாள் என 2 நாட்கள் செலவாவதால் அன்றாட கூலிவேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். தாளவாடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் அலுவலகம், பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கிளை, காவல்நிலையம் மற்றும் வனத்துறை  உள்ளிட்ட பல்வேறு  அரசுத்துறை அலுவலகங்கள் இருந்தாலும் மக்கள் அன்றாடம் செல்லும் வருவாய்த்துறையின் தாலூகா அலுவலகம் மட்டும் சத்தியமங்கலத்தில் உள்ளதால் இப்பகுதி மக்கள் பயணநேரம் வீணானது. தாளவாடியை தனி தாலூகாவாக பிரிக்க பலமுறை அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டது. சத்தியமங்கலம் வட்டத்தை இரண்டாக பிரித்து தாளவாடியை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்குதல், புதிய வட்டத்தின் எல்லையை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விபரங்களுடன் முன்மொழிவு அரசுக்கு  அனுப்பப்பட்டது.  பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் தாளவாடியை தனிதாலூகாவாக அறிவிக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் போராடி வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் எம்எல்ஏ சுந்தரம் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்திடம் தாளவாடி மலைப்பகுதியை தனிதாலூகாவாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா சத்தியமங்கலம் தாலூகாவில் உள்ள தாளவாடி மலைப்பகுதியை தனிதாலூகாவாக செயல்படும் என அறிவித்தார். இத்தகவலை கேள்விப்பட்ட தாளவாடி சுற்றுவட்டார பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். தாளவாடி பஸ்நிலையத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் தலைமையில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் மாரப்பன், தாளவாடி ஒன்றியக்குழு தலைவர் கெம்பாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

0 comments:

Post a Comment