தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 2, 2014

அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விஷம பிரசாரம்: கோவை, பொள்ளாச்சியில் ஜெயலலிதா






கோவை தொழில்கள், கர்நாடகாவுக்கு சென்றுவிட்டதாக, எதிர்க்கட்சிகள் பொய் புகார் பரப்பி வருகின்றன. ஒரு தொழிலதிபர்கூட அங்கு செல்ல தயாராக இல்லை, என்பதுதான் உண்மை நிலை,'' என, கோவை மற்றும் பொள்ளாச்சியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில், முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க., வேட்பாளர்கள் நாகராஜன் (கோவை), மகேந்திரன் (பொள்ளாச்சி) ஆகியோரை ஆதரித்து அவர் பேசியதாவது:தொழில் துறையில் சிறந்து விளங்கும் மண்டலமாக கோவை உள்ளது. தொழில் வாய்ப்புகளுக்குரிய மாநிலங்களில் தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது.இதுவரை, 10 ஆயிரத்து 660 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கப் பெற்றுள்ளது. நேரடியாக பத்தாயிரம் பேருக்கும், மறைமுகமாக பல்லாயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தவிர, புதிய தொழில்களுக்கு 11 ஆயிரத்து 261 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.தென்தமிழகத்தில் தொழில் பூங்காக்கள் ஏற்படுத்த, தொழில்முனைவோருக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தி.முக., ஆட்சியில், 2008-2011ல் 26 ஆயிரத்து 122 ஆக இருந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, மார்ச் 2011 முடிவில் 40,352 ஆக உயர்ந்துள்ளது.தொழில்கள் வளர்ந்துள்ளனவா என்பதை, தொழிலாளர்களின் எண்ணிக்கையை பார்த்தால் புரியும். தி.மு.க., ஆட்சியில் 84 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் இருந்தனர். எனது ஆட்சியில் ஒரு கோடியே 65 லட்சத்து 66 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. இரண்டரை ஆண்டுகளில் 26 லட்சத்து 31 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

குறு, சிறு நடுத்தர தொழில்களின் போட்டித் திறனை அதிகரிக்க, சுலப கடன், கட்டமைப்பு வசதிகள் செய்துதர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2006 முதல் 2011 வரை இருந்த திமு.க.,ஆட்சியில், தமிழகத்தில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 160 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் புதியதாக பதிவு செய்யப்பட்டன. கடந்த 2011-2014 ஜனவரி மாதம் வரை, 2 லட்சத்து 55 ஆயிரத்து 718 நிறுவனங்கள் பதிவாகியுள்ளன.உண்மை இவ்வாறிருக்க, தமிழகத்தில் உள்ள தொழில்கள் கர்நாடகா சென்று விட்டதாக எதிர்க்கட்சிகள் பொய் புகார் பரப்பி வருகின்றன. கோவையில் நடந்த தொழில்முனைவோர் கூட்டத்தில், யாருக்கு எவ்வளவு இடம் என்பது உள்ளிட்ட எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. கூட்டத்துக்குப் பின் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த தொழில் துறையினர், 'அழைத்தார்களே என்பதற்காக கலந்து கொண்டோம்' என கூறியுள்ளனர்.

ஒரு தொழில் துவங்க சாலை, மின் வசதி, தண்ணீர் வசதி வேண்டும். இதுவரை கர்நாடகாவில் இதுபோன்ற ஒரு வசதிகூட செய்யப்படவில்லை. அங்குள்ள தொழிலதிபர்களே ஆர்வம் காட்டாத நிலையில், தமிழக தொழிலாளர்கள் எப்படி ஆர்வம் காட்டுவார்கள்? எந்த சூழ்நிலையிலும் அதற்கு நாங்கள் தயாராக இல்லை என தமிழக தொழிலதிபர்கள் கூறியுள்ளனர். 'சைமா' அமைப்பினரும் பத்திரிகைகளில் பேட்டி அளித்துள்ளனர். ஒரு தொழிலதிபர் கூட அங்கு செல்ல தயாராக இல்லை என்பதுதான் உண்மை நிலை. எனது தலைமையிலான அரசுக்கு எதிராக விஷம பிரசாரங்களை தி.மு.க., செய்து வருகிறது. மத்திய திட்டக்குழு ஆய்வின்படி, எளிதில் தொழில் புரியும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. கர்நாடகா 2வது இடத்தில் பின்தங்கியுள்ளது. ஆகவே தமிழக தொழில் வாய்ப்புகள் வெளியே செல்வதாக, தி.மு.க., உள்ளிட்ட இதர கட்சிகள் சொல்வது வடிகட்டின பொய்.

எனது அரசின் பகீரத முயற்சிகளின் காரணமாக 2500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.500 கிலோவாட் மின்சாரம் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டு வருகிறது. 3300 கிலோவாட் மின்சாரம் நீண்டகால அடிப்படையில் வாங்கப்படும். சில மாதங்களுக்குமுன் ஏற்பட்ட மின்வெட்டு, ஓரிரு நாட்களில் சரிசெய்யப்பட்டு விட்டது. அதற்குள் தீராத மின்வெட்டு போல் சில அரசியல்வாதிகள் பேசினர். அவர்களின் எண்ணம் நிறைவேறாது. தற்போது அனைத்து மின் நிலையங்களும் நன்கு செயல்பட்டு வருகின்றன. மின் வினியோகத்தை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மின்சாரம் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும்.

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய காங்., கூட்டணி அரசு, தமிழகத்துக்கும், தமிழ் இனத்துக்கும் துரோகம் செய்தது. இதற்கு தி.மு.க., மத்திய அரசுக்கு ஒத்துழைத்தது; ஆதரவு, துணை நின்றது. திடீரென கடந்த ஆண்டு இலங்கை பிரச்னையில் காங்., துரோகம் செய்ததாக கூறி தி.மு.க., விலகுவதாக அறிவித்தார் கருணாநிதி. இதற்கு உண்மையான காரணம், இலங்கை பிரச்னை அல்ல. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் காரணம். இதனை பொதுக்குழுவில், அவரே விளக்கியுள்ளார். கனிமொழி, ராஜாவை சிறையில் அடைத்த, ஈழத்தமிழர் பிரச்னைக்கு காரணமான காங்., உடன் கூட்டு சேருவோம் என, நினைக்காதீர்கள் என, கூறியுள்ளார். இதிலிருந்தே முக்கிய பிரச்னை '2ஜி' இமாலய ஊழல் என்பதும், ஈழப்பிரச்னை ஒப்புக்கு சப்பாணி என்பதையும் புரிந்து கொள்ளலாம்.2ஜி வழக்கில் தங்களை காப்பாற்றாமல் மாட்டி விட்டார்களே, மகளை சிறையில் அடைத்தார்களே என, காங்., மீது தி.மு.க.,வுக்கு கோபம், ஆத்திரம். தமிழர் நலனோ, துரோகமோ காரணமல்ல என, சொல்லாமல் சொல்லியிருக்கிறார் கருணாநிதி. காங்கிரசை இனிமேல் ஆதரிக்கமாட்டேன் என, சொல்லும் துணிச்சல் கருணாநிதிக்கு வருமா? வராது.2ஜி ஊழல் வழக்கில் ராஜா மீது எந்த குற்றமும் இல்லை என்றும், எந்த துறையும் எதையும் கண்டுபிடிக்கவில்லை என கருணாநிதி கூறியுள்ளார். இதைவிட வடிகட்டின பொய் வேறு எதுவும் இருக்க முடியாது.

2ஜி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தேதியன்று, 525 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முடிவு செய்து விட்டு, பின்னர் வந்த விண்ணப்பங்கள் சேர்க்கப்படவில்லை.இதில் உள்ள மர்மம் என்ன? ஒதுக்கீட்டில் அவசரம் காட்ட வேண்டிய பின்னணி என்ன? யார் பயன் அடைய தேதி மாற்றியமைக்கப்பட்டது? தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு பெற, ராஜா இந்த முறையை கடைபிடித்துள்ளார். சினிமா டிக்கெட் போல் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன.கருணாநிதியின் மனைவியும், கனிமொழியும் பங்குதாரர் ஆக உள்ள கலைஞர் 'டிவி'க்கு, 214 கோடி ரூபாய் எப்படி வந்தது? யார், ஏன் கொடுத்தார்கள்? அந்த பணத்தை அவசரம் அவசரமாக ஏன் திருப்பி கொடுத்தனர்? எப்படி திருப்பி கொடுக்கப்பட்டது? உண்மையான முறையில் பெற்றிருந்தால் ஏன் திருப்பி கொடுக்க வேண்டும்? இவற்றை விளக்க கருணாநிதி தயாரா?

காங்., கட்சியை நன்றி மறந்தவர்கள் என்று கூறி விட்டு, இப்போது, மதசார்பின்மையை கடைபிடித்தால் தி.மு.க., ஆதரிக்கும் என கருணாநிதி கூறியுள்ளார். இது அவரது தடுமாற்றத்தைத்தான் காட்டுகிறது. அப்படியானால் காங்., கடந்த 10 ஆண்டுகளாக மதம் சார்புடையதாக இருந்ததா? அப்படியானால் இதுவரை ஏன் ஆதரித்தார் என்பதை விளக்குவாரா? இவற்றுக்கு காங்., மனம் வருந்தினால் ஆதரவு என்கிறார். அப்படியானால் இலங்கை பிரச்னைக்காக கூட்டணியில் இருந்து வெளியில் வந்ததாக கூறியது மக்களை ஏமாற்றவே. தமிழர்கள் மீது அக்கறை இல்லை. மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கும் கருணாநிதிக்கு, இந்த தேர்தலில் சவுக்கடி கொடுக்க வேண்டும்.மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் முதலீடுகள், ஏற்றுமதி குறைந்துள்ளது. நடப்பு கணக்கில் அதிக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரம் சின்னாபின்னமாகி விட்டது. ஏழைகளின் மீதுதான் இந்த சுமை சுமத்தப்பட்டுள்ளது. நாட்டை சூறையாடிய காங்., அரசை தூக்கி எறிய வேண்டும்.இவ்வாறு, ஜெயலலிதா பேசினார்.

0 comments:

Post a Comment