தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, March 24, 2016

பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா. இலட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 12 மணி நேரம் தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கினர்.





பண்ணாரி , மார்ச்.23. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா இன்று நடைபெற்றது. இலட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டைமாநிலமான கர்நாடகாவிலிருந்தும் இலட்சக்கணக்காண பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் இலட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.





இந்நிலையில் கடந்த 7 ம் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் குண்டம் திருவிழா தொடங்கியது. இ¬த்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திருவீதிஉலா 8 ம் தேதி இரவு புறப்பட்டு சிக்கரசம்பாளையம், இக்கரைநெகமம் புதூர், வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம், வெள்ளியம்பாளையம்புதூர், உத்தண்டியூர், அய்யன்சாலை, ராமாபுரம், தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூர், ஹவுசிங் யூனிட், சத்தியமங்கலம், பட்டவர்த்தி அய்யம்பாளையம், புதுவடவள்ளி, புதுக்குய்யனூர், பசுவபாளையம், புதுபீர்கடவு, பட்டரமங்கலம், ராஜன்நகர் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்று 15 ம் தேதி ம் தேதி இரவு அம்மன் சப்பரம் கோயிலை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து அன்றிரவு நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் இரவு கோயிலில் தினமும் மலைவாழ் மக்கள் தாரை,தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், நித்தியப்படி பூஜையும் நடைபெற்றது. கடந்த 20 ம் தேதி மாலை 3 மணிக்கு பரிவார தெய்வங்களான மாதேஸ்வரன், சருகுமாரியம்மன், வண்டிமுனியப்பன் மற்றும் ராகு கேது தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், காலை 5 மணிக்கு குண்டத்திற்கு தேவையான கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சியும் காலை 6 மணிக்கு அம்மன் மெரவணை ஊர்வலம் நடைபெற்றது. அன்று மாலையில் குண்டத்திற்கு எரிகரும்புகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டது. நேற்று அதிகாலை 2 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அச்சமயம் குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கசரம்பாளையம், இக்கரைநெகமம் புதூர் மற்றும் வெள்ளியம்பாளையம் கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள் மூங்கில் கம்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.



தெப்பக்குளம் சென்ற அம்மன் சரியாக 3.30 மணிக்கு குண்டத்தின் முன்புறம் அம்மன் சப்பரம் வந்தடைந்தது. கோயில் பூசாரிகள் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. சரியாக 3.55 மணிமுதல் தலைமை பூசாரி ராஜசேகர் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து அம்மன் சப்பரம் குண்டத்தில் இறக்கப்பட்டது. இதையடுத்து அரசு அதிகாரிகள் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கினர். கூட்டம் அதிகரித்தததால் மாலை 4 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்கினர். சிறுவர் சிறுமியர், குழந்தையை சுமந்தபடி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் விழாவில் பங்கேற்று குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் இறங்கிய பின் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்கினர். குண்டம் இறங்கும்போது கருவறையில் உள்ள அம்மன் வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குண்டம் இறங்கும் பக்தர்கள் நேரடியாக கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சத்தியமங்கலம் நண்பர்கள் அன்னதானக்குழு சார்பில் நேற்றுமுன்தினம் மதியம் முதல் நேற்று மாலை வரை கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் சிற்றுண்டி தொடர்ந்து வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி மற்றும் ஈரோடு கலெக்டர் பிரபாகர் ஆகியோர் பார்வையிட்டனர். கோயில் துணை ஆணையர் மாரிமுத்து, பரம்பரை அறங்காவலர்கள் புருசோத்தமன், ராஜப்பன், ராஜாமணி தங்கவேல், ராஜேந்திரன், புஷ்பலதா கோதண்டராமன், மற்றும் கோயில் பணியாளர்கள் விழவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் கோயிலில் முகாம் அமைத்து பணியில் ஈடுபட்டனர்.


குண்டத்தில் இறங்கிய விஐபிக்கள் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, தொழிலாளர் துறை ஆணையர் அமுதா ஐஏஎஸ், வைகுந்த் காகித ஆலையின் பொது மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சிக்கரசம்பாளையம் ஊராட்சித்தலைவர் செல்வராஜ், சத்தியமங்கலம் நகராட்சித்தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் எம்பி காளியப்பன், வாசவி தங்க மாளிகை பிரபுகாந்த் மற்றும் காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறப்பு அதிரடிப்படை வீரர்களும் குண்டம் இறங்கினர். கோவை மேற்கு மண்டல ஐஜி ஸ்ரீதர் மேற்பார்வையில் மாவட்ட எஸ்பி சிபிசக்ரவர்த்தி உள்ளிட்ட 4 எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் என பலவேறு மாவட்டங்களை சேர்ந்த 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கோவை, ஈரோடு, திருப்பூர், ஊட்டி, மேட்டுப்பாளையம், கோபி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, அந்தியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

0 comments:

Post a Comment