தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, March 14, 2014

கொங்கு மண்டலத்தில் இளம் பெண் நாதஸ்வர கலைஞர் விஜயலட்சுமி

- கட்டுரையாளர்: உ.குமார், கோபிசெட்டிபாளையம்

நாதஸ்வரம் மங்களத்தின் அடையாளம்..


இளம் பெண் நாதஸ்வர கலைஞர் விஜயலட்சுமி.
திருவையாறு தியாகராஜர் கோயிலில் பிரமோத்ஸவ நிகழ்ச்சியில் தந்தையுடன் வாசிக்கும் விஜயலட்சுமி.
மனதை கட்டிப்போடும் வலிமை இசைக்கு மட்டுமே உண்டு. தொன்று தொட்டு இசைக்கப்படும் நாதஸ்வரம், கோவில் முதல் திருமண நிகழ்வுகள் வரை ஒலிக்கப்படும் தெய்வீகமான இசைகளில் முதன்மையானது.

கொங்கு மண்டலத்தை சேர்ந்த இளம் பெண் நாதஸ்வர கலைஞர் விஜயலட்சுமி.

 
கர்நாடக சங்கீத இசையுடன், அதன் சுரநயமும், கேட்பவர்களை சுண்டி இழுக்கும், மங்கள இசை மனதை தூதுகலப்படுத்துவது. இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. இசைக்கருவிகளில் மிகக் கடின வாசிப்பான நாதஸ்வரத்தில், நளினத்தோடு, அற்புதமான இசையின் மூலம் சென்னை இயல் இசை சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களில் இருந்து விருதுகளையும் பாராட்டையும் பெற்றுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த இந்த இளம் பெண் நாதஸ்வரக் கலைஞரான விஜயலட்சுமி (21).

திருவாரூர் அரசு இசைப்பள்ளியில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றமைக்காக சான்றிதழை பெறுகிறார் விஜயலட்சுமி.


இசையில் ஈடுபாடு குறித்து பெண் நாதஸ்வர கலைஞரான விஜயலட்சுமி,
திருவாரூரைப் பூர்வீகமாக கொண்டவர். இவரது குடும்பம் பரம்பரை நாதஸ்வர சங்கீத குடும்பமாகும்.

இவரது தந்தை நாதஸ்வர கலைஞரான கிருஷ்ணமூர்த்தி, மற்றும் இவரது மூதாதையார் அனைவரும் நாதஸ்வரக் கலையில் உயிர் மூச்சாக திகழ்ந்தவர்கள். இவரது தந்தையின் நாதஸ்வர கச்சேரியை அடிக்கடி கேட்கும்போது இவருக்கும் நாதஸ்வர வாசிப்பில் ஈடுபாடு மெல்ல மெல்ல ஏற்பட்டது. இவரது மூதாதையர் மற்றும் தந்தையைப் போல நாதஸ்வரத்தை முறைப்படி கற்று மிகப் பெரிய கலைஞராக வரவேண்டும்  என என்ற எண்ணம் தோன்றியது.


 பதிமூன்று வயதிலேயே நாதஸ்வர இசையை கற்கத் தொடங்கிய இவர்,  திருவாரூரில் உள்ள அரசு தமிழ் இசைப்பள்ளியில் மூன்றாண்டு படிப்பு பயின்று, முறைப்படி கர்நாடகா வாய்ப்பாடு, நாதஸ்வர கற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளாக கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில், தமிழக அரசால் கோவில் நாதஸ்வர வித்வானாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து விஜயலட்சுமியும், தினமும் நாதஸ்வரம் வாசித்து வருகிறார்.

தெய்வ சந்நதியில் தினமும் மங்கள இசையை வாசிப்பது மனதுக்கு நிறைவாகவும், பாக்கியமாகவும் கருதுகிறார். பாரியூர் அம்மன் கோவிலில் தினமும் மூன்று வேளை நாதஸ்வரம் வாசிக்கப்பட்டு வருகிறது.

காலையில் பூபாள ராகமும், மதியம் ஆபோதி ராகமும், மாலையில் அம்சவர்த்தினி ராகமும் வாசித்து வருகிறார். இது தவிர திருமண நிகழ்ச்சிகளில்  மாப்பிள்ளை அழைப்பின் போது காநடா, அடானா என்ற ராகங்களையும், முகூர்த்த நேரத்தில் நாட்டைக்குறிஞ்சி ராகமும் வாசித்து அனைவரும் ரசிக்கும்படி திறமையாக செயல்பட்டு வருகிறார்.

திருப்பதி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், சுசீந்திரம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பிரசித்த பெற்ற கோயில்களில்  இவரது நாதஸ்வர கச்சேரி அரங்கேறியுள்ளது. இதுவரை 1000 க்கும மேற்பட்ட நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசித்ததின் மூலம் சிறந்த இளம் பெண் நாதஸ்வர கலைஞர் என்ற விருதினையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

திருவையாறு தியாகராஜா ஆராதனை விழாவை பார்வையாளராக காணச் சென்றபோது, இவரது வாசிப்பின் திறமையை கேள்விப்பட்டு பிரபல தவில் வித்வான் அரித்துவாரமங்கலம் பழனிவேல் மூலம் அங்கு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நூற்றுக்கணக்கான இசை கலைஞர்கள் பங்கேற்ற அந்த சபையில் தன்னை போல் இளம் இசைக் கலைஞருக்கு  கிடைத்த வாய்ப்பை எண்ணி, இதை இசை உலகிற்கே பெருமை என கருதுகிறார்.

விஜயலட்சுமி கூறுகையில்,
 நாதஸ்வரம் வாசிப்பது என்பது மற்ற இசைக்கருவிகளை விட கடினமான ஒன்றாகும். பரம்பரையாக நாதஸ்வர குடும்பத்தில் பிறந்த எனக்கு இசை ஞானம் இறைவனால் கொடுக்கப்பட்ட வரம். இது எனது உடலோடும், உணர்வோடும் கலந்துள்ளது. இசையே எனது சுவாசம்.

பெண்களால் எதுவும் சாதிக்க முடியும். இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் திறமையுடன் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். என்னைப்போன்ற பெண்கள் பலரும் இசைத் துறையில் சாதிக்க முன்வர வேண்டும்.எனது இசைப்பயணம் கடல் கடந்து உலக நாடுகளிலும் ஒலிக்க வேண்டும். நாதஸ்வரத்தில் உலக அளவில் மிகப்பெரிய கலைஞராக வரவேண்டும். எதிர்காலத்தில் நாதஸ்வர இசைப் பயிற்சி பள்ளி ஒன்றை நிறுவி, ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நாதஸ்வர கலைையை கற்றுத்தரவேண்டும் என்பதே எனது லட்சியமாகும் என்றார்.

 
சிறப்பு செய்தி:
அற்புதமான இசையை வெளிப்படுத்தும் நாதஸ்வர கருவி, ஆச்சாள் என்ற ஒருவகை மரத்தினால் செய்யப்படுவது. இந்த மரத்தினால் செய்யப்படும் நாதஸ்வரம் மட்டுமே பல்வேறு நாதம் இசையாக கிடைக்கும். பல ஆண்டுகள் உறுதியாகவும், வலிமையாகவும் உழைக்கக்  கூடியது.

தமிழ்நாட்டில் மயிலாடுதுறை அருகில் உள்ள நரசிங்கம்பேட்டை என்ற சிறிய கிராமத்தில் உள்ள சில குடும்பத்தினர் மட்டுமே பலவிதமான நாதஸ்வர கருவியை தயாரித்து வருகின்றனர். இந்த ஊரில் மட்டுமே நாதஸ்வரம் தயாரித்து விற்பனை செய்யும்  தொழில் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

0 comments:

Post a Comment