10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய தந்தை - மகன், தாய் - மகள்
கோபியில் தந்தையும், மகனும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே, பாரியூர், வெள்ளாளபாளையம்
பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் வி.குணசேகரன் (50). சாலைப் பணியாளர்.
இவருக்கு, பெரியார் செல்வம், தமிழீழம் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில்,
பெரியார் செல்வம் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து
வருகிறார்.
தமிழீழம், கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில்
10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது, தந்தை குணசேகரனும், மகன்
தமிழீழமும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி வருகின்றனர்.
குணசேகரன், குடும்பச் சூழ்நிலை காரணமாக 7-ஆம் வகுப்புடன் படிப்பை
நிறுத்திவிட்டார். பின் தையல் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.
இதையடுத்து, 1997-ஆம் ஆண்டு சாலைப் பணியாளராக பணியில் சேர்ந்தார். இவர்
கடந்த ஆண்டு 8-ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். இந்த ஆண்டு
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தனித் தேர்வராக எழுதுகிறார்.
10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய தாய், மகள்: இதேபோல கோபியில், 10-ஆம்
வகுப்பு பொதுத் தேர்வை மலைக் கிராமத்தைச் சேர்ந்த தாயும், மகளும் ஒரே
பள்ளியில் தேர்வு எழுதினர்.
ஈரோடு மாவட்டம் ஆசனூரைச் சேர்ந்தவர் ஜெடசாமி (40). விவசாயி. இவரது மனைவி
மகேஸ்வரி (36). இவர்களுக்கு ரூபா (15) என்ற மகளும், சூர்யா (11) என்ற
மகனும் உள்ளனர்.
ரூபா, கோபியில் உள்ள அரசு மகளிர் விடுதியில் தங்கி பழனியம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்துவருகிறார்.
இவரது தாய் மகேஸ்வரி 8-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அவரது பெற்றோர்
மேற்கொண்டு அவரை பள்ளிக்கு அனுப்பாத காரணத்தால் படிப்பைத் தொடர
முடியவில்லை. அவருக்கு படிப்பதற்கு விருப்பம் இருந்தாலும் மலைக்
கிராமங்களில் மேல்படிப்புக்கு வாய்ப்பு இல்லை.
இதனால் கடந்த ஆண்டு தனித் தேர்வராக 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதினார்.
இதில் 3 பாடங்களில் வெற்றி பெற்றார். இந்த ஆண்டு தமிழ், அறிவியல் ஆகிய 2
பாடங்களுக்கான தேர்வுகளை எழுதுகிறார்.
அரசு ஊழியராக பணியாற்ற வேண்டும் என்ற ஆசையால்தான் மலைக்
கிராமத்தில் இருந்தாலும் விடாமுயற்சியுடன் சிரமப்பட்டு படித்துவருகிறேன் என்றார்.

0 comments:
Post a Comment